டிரம்பை ஆதரிக்கும் பழமைவாத கிறிஸ்தவர்கள் – ‘பைபிள் பெல்ட்’ மாகாணங்களில் என்ன நடக்கிறது?
- எழுதியவர், செசிலியே பேரியா
- பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
- இருந்து ஓக்லஹோமாவிலிருந்து
-
அமெரிக்காவின் தெற்கு ஓக்லஹோமாவில் சுமார் 2,000 பேர் வசிக்கும் எல்ஜின் எனும் டவுன் பகுதி உள்ளது. அங்கு கிரேஸ் சீர்திருத்த பாப்டிஸ்ட் தேவாலயத்தில், சனிக்கிழமை வழிபாடு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பாதிரியார் டஸ்டி டெவர்ஸ் (36), பிரகாசமான முகத்துடன் பாதிரியார் உடையில் தோன்றினார்.
அங்கு கூடியிருந்த சுமார் 100 தேவாலய உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களில் பெரும்பாலானோர் வெள்ளையினத்தவர்.
தேவாலயத்தின் லாபியில் சில துண்டுப் பிரசுரங்கள் இருந்தன. அவற்றில் இறந்த குழந்தைகளை சித்தரிக்கும் படம் இடம் பெற்றிருந்தது.
“இதைப் படிக்கும் போது, அமெரிக்காவில் மூன்று குழந்தைகள் அநியாயமாக தாயின் வயிற்றில் படுகொலை செய்யப்பட்டது நினைவுகூரப்படும்” என்று அந்த புத்தகங்களின் தலைப்பு கூறுகிறது. கருக்கலைப்பை நம் காலத்தின் “ஹோலோகாஸ்ட்” என்று அவை விவரிக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பொருளாதாரம் மற்றும் குடியேற்றக் கொள்கை பிரச்னைகளை போன்று கருக்கலைப்பு தொடர்பான முடிவுகளும் முக்கிய பிரச்னையாகக் கருதப்படுகிறது.
புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அமெரிக்க வாக்காளர்கள் தயாராகி வரும் நிலையில் இந்த பழமைவாத வலதுசாரி புராட்டஸ்டண்ட் வாக்காளர்கள் இடையே அரசியலும் மதமும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதற்கான தெளிவான அடையாளமாக இந்த துண்டுப்பிரசுரங்கள் உள்ளன.
ஒரு கோடை நாளில், பலத்த மழை பெய்து கொண்டிருக்கையில், உள்ளூர் நேரப்படி 10:45 மணிக்கு பிரார்த்தனை தொடங்கியது. தேவாலயத்தின் போதகர் கிடார் வாசித்து சபை உறுப்பினர்களுடன் பாடல்களைப் பாடினார்.
டஸ்டி டெவர்ஸ் எல்ஜினில் பிறந்தவர். செனட்டரான அவருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். மதம் தொடர்பான படிப்பு மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்தில் நற்செய்தி போதிப்பார்; ஆனால், ஞாயிற்றுக்கிழமையில் அவர் ஓக்லஹோமா கேபிட்டலில் முன்மொழிவுகளை முன்வைப்பார்.
ஓக்லஹோமாவில் அரசியல்வாதிகள் உள்ளூர் தேவாலயங்களில் அதிகாரம் செலுத்துவதும், நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதும் சகஜம்.
அமெரிக்க ‘பைபிள் பெல்ட்’ என்றழைக்கப்படும் மாகாணங்களில் இல்லினாய்சும் ஒன்று. இங்கு பல ஆளுமைகள், அரசியலிலும் அதே சமயம் மதம் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டு இரட்டை தலைமை பொறுப்பில் இருப்பது பொதுவான ஒன்று. இப்பகுதியில் மக்கள் பிரதானமாக புராட்டஸ்டண்ட் நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.
அமெரிக்காவில் `பைபிள் பெல்ட்’ மாகாணங்கள் எனப்படும் மாகாணங்களில் குறைந்தது 9 மாகாணங்கள் புராட்டஸ்டண்ட்கள் மற்றும் குடியரசுக் கட்சி சார்ந்த ஆதரவாளர்களை உள்ளடக்கியது. முன்னாள் அதிபர் டிரம்ப் கடந்த தேர்தலில் இந்த மாகாணங்களில் தான் வெற்றி பெற்றார். (ஜார்ஜியா மட்டும் ஒரே விதிவிலக்கு)
தெற்கு அமெரிக்காவில் அமைந்துள்ள எல்ஜின் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க பழமைவாத புராட்டஸ்டண்ட் தலைவர்களின் எழுச்சிக்கு ஆதாரமாக விளங்குகிறது.
இதில் முக்கியமான மையப் பகுதியாக ஓக்லஹோமா உள்ளது. இது ஒரு தீவிர மதம் சார்ந்த மாகாணம். அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கேபிடல் உறுப்பினர்களில் 80 சதவிகிதம் பேர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஓக்லஹோமா அரசியலில், கடவுளும் நாடும் மிகவும் செல்வாக்கு செலுத்துகின்றன. ஏனெனில் மரபுவழி கிறிஸ்தவர்கள் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறை தாராளவாத இடதுசாரிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்று நம்புகிறார்கள்.
மதம் மற்றும் அரசியலின் இணைப்பு
“என்னுடைய மத நம்பிக்கைகளைப் பற்றி அறிய அன்றைய திருச்சபை வழிப்பாடு எப்படி இருந்தது?” என்று என்னிடம் டெவர்ஸ் கேட்டார்.
நீண்ட உரையாடலுக்குப் பிறகு, கருக்கலைப்பை முடிவுக்குக் கொண்டு வருவது, ஆபாசப் படைப்புகளை நிறுத்துவது மற்றும் வருமானம், சொத்து வரிகளை வசூலிப்பதை நிறுத்துவதுதான் அவரது அரசியலின் முக்கிய நோக்கம் என்று அவர் என்னிடம் கூறினார்.
ஆனால் டெவர்ஸின் நீண்ட கால இலக்கு இன்னும் சுவாரஸ்யமானது. அமெரிக்காவை ஒரு கிறிஸ்தவ நாடாக மாற்றுவதே அவரது குறிக்கோள்.
அந்த பணியை நிறைவேற்றுவதற்கான வழிகளில் முக்கியமானது, உயர் அரசியல் பதவிகளை ஆக்கிரமிப்பது தான்.
“வெள்ளை மாளிகையை கடவுளின் தேசமாக மாற்ற விரும்புகிறீர்களா?” என்ற கேள்வியை நான் அவரிடம் முன்வைத்தேன்.
“பூமியில் உள்ள அனைத்துமே கடவுளின் பிரதேசம் தான்” என்று பதிலளித்தார்.
குடியரசுக் கட்சியின் செனட்டர் டெவர்ஸ் தற்போதுள்ள கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்.
டிரம்ப் தங்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று டெவர்ஸ் நினைக்கிறார். பைபிள் பெல்ட்டில் உள்ள மற்ற போதகர்களின் கருத்தும் அதே தான்.
டிரம்ப் குடியரசுக் கட்சியை இடதுசாரி பக்கம் சாய்ப்பதாக அவர் கூறுகிறார்.
37 வயதான ஆரோன் ஹாஃப்மேன், டெவர்ஸுடன் பணிபுரிகிறார். அவர் ஐந்து குழந்தைகளுக்கு தந்தை. அவர் தற்போது ஓக்லஹோமாவில் உள்ள புதிய பாப்டிஸ்ட் தேவாலயத்தில் போதகராக தயாராகி வருகிறார். தேவாலயத்திற்கும் அரசுக்கும் இடையிலான கோடு மங்கலாக இருக்கக்கூடாது என்று அவர் நம்புகிறார்.
“கிறிஸ்துவத்தை அரசியலில் இருந்து பிரிக்க முடியாது. அமெரிக்க மக்கள் இயேசு கிறிஸ்துவை மறந்துவிட்டார்கள்” என்று அவர் கண்ணீருடன் என்னிடம் கூறினார்.
மதம் செல்வாக்கு செலுத்துகிறதா?
ஆனால் இந்த கலாசார மோதல் சாதாரண மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்த கேள்விக்கான பதில் `ஆம் பாதிக்கும்’.
இந்த ஆண்டு மட்டும், குறைந்தது மூன்று `பைபிள் பெல்ட்’ மாகாணங்களில் மத சார்பு கொண்ட முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
லூசியானாவில் அனைத்து பள்ளி வகுப்பறைகளின் சுவர்களிலும் கிறிஸ்தவத்தின் பத்துக் கட்டளைகள் எழுதப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அலபாமா மாகாணத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் உறைந்த கரு முட்டைகள் சிசுக்களே என்று தீர்ப்பளித்ததை அடுத்து செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதேபோல், ஓக்லஹோமாவில், உயர் கல்வி அதிகாரி ரியான் வால்டர்ஸ் எடுத்த முடிவு மிகவும் விவாதத்திற்கு உட்பட்டது. ஜூன் மாதம், மாநிலத்தின் பொதுப் பள்ளிகளில் பைபிள் கற்பித்தலைக் கட்டாயமாக்கும் உத்தரவை அவர் பிறப்பித்தார். இது சர்ச்சையைக் கிளப்பியது.
இருப்பினும், ஓக்லஹோமா மிகப்பெரிய ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாகாணமாகும். இந்த முடிவு மத சுதந்திரத்திற்கு எதிரானது என பல ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
“நாம் தேவாலயத்தையும் மாகாணத்தையும் தனித்தனியாக அணுக வேண்டும்” என்று புராட்டஸ்டன்ட் மற்றும் முன்னாள் ஆரம்ப பள்ளி ஆசிரியரான 44 வயதான சுஜி ஸ்டீபன்சன் கூறுகிறார்.
சுஜி கடந்த ஆண்டு, குடியரசுக் கட்சி ஆதரவாளரான வால்டர்ஸை கடுமையாக விமர்சித்தார். வால்டர்ஸ் கடந்த மே மாதம் ஓக்லஹோமா ஆசிரியர் சங்கத்தை `பயங்கரவாத அமைப்பு’ என்று அழைத்தார்.
இதுதொடர்பாக வால்டர்ஸ் பிபிசியிடம் பேச மறுத்துவிட்டார்.
பள்ளியின் இந்த முடிவுக்கு பல பெற்றோர்களும் உடன்படவில்லை.
கிறிஸ்தவரான எரிகா ரைட்டும் அதில் ஒருவர். பைபிள் போதிப்பதற்கு பதில், அவர்களின் ஏழ்மை நிலையை மாற்ற வழி செய்யலாம் என்று அவர் கருதுகிறார்.
ஓக்லஹோமா கிராமப்புற பள்ளிகள் கூட்டணியின் நிறுவனர் மற்றும் குடியரசுக் கட்சி ஆதரவாளரான ரைட், அரசுப் பள்ளிகளில் போதுமான நிதி இல்லை என்றும், பல மாணவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்றும் கூறினார். அவர்களின் வீட்டில் போதுமான உணவு கிடைப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
“ஓக்லஹோமாவின் மக்கள் தொகையில் 15 சதவிகிதம் பேர் ஏழைகள். பல பகுதிகளில் அதிகமான வறுமை உள்ளது” என்று அவர் கூறுகிறார்.
ஓக்லஹோமா பல்கலைக்கழக பேராசிரியர் சாமுவேல் பெர்ரி அரசியல் மற்றும் மதம் பற்றிய பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். பள்ளியில் பைபிள் கற்பிக்க வேண்டும் போன்ற முடிவுகள் ஒரு பெரியளவிலான செயல்திட்டத்தின் கீழ் எடுக்கப்படுகின்றன என்று அவர் நம்புகிறார்.
இந்த கொள்கைகள் தீவிர மத நம்பிக்கை கொண்ட தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ தேசியவாதத்தின் கொள்கைகளை பரப்பும் நபர்களால் இயக்கப்படுகின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த சித்தாந்தம் அமெரிக்க குடிமை வாழ்க்கை மற்றும் மரபுவழி ஆங்கிலோ-புராட்டஸ்டண்ட் கலாசாரத்தை ஊக்குவிக்கிறது.
“கிறிஸ்தவ தேசியவாதம் அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்று அவர் கூறுகிறார்.
“டிரம்ப் கடவுளால் அனுப்பப்பட்டவர்”
பைபிள் பெல்ட் மாகாணங்களில் உள்ள இத்தகைய போதகர்கள் மிகவும் ஏழ்மையான சமூகங்கள் மத்தியில் சிறிய தேவாலயங்களை நிறுவுவதன் மூலம் அவர்களைப் பின்பற்றுபவர்கள் இடையே பெரும் செல்வாக்கு கொண்டுள்ளனர்.
சமீபத்திய ஆண்டுகளில் இந்த குழு முன்னேற டிரம்பை தங்களுக்கான சிறந்த தேர்வாக கருதுகின்றன.
ஓக்லஹோமா பாதிரியாரான ஜாக்சன் லஹ்மியர் ஒரு தீவிர டிரம்ப் விசுவாசி.
“டிரம்ப் இந்த நாட்டை ஆள கடவுளால் அனுப்பப்பட்டவர்” என்று அவர் கூறுகிறார். இவர் டிரம்பிற்கான போதகர்கள் குழுவை நிறுவியவர்.
வரவிருக்கும் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக கிறிஸ்தவ வாக்குகளை திரட்டுவதே அவர்களின் நோக்கம்.
டிரம்ப் மீதான தாக்குதலில் அவர் உயிர் பிழைத்ததை ‘கடவுளின் அற்புதம்’ என்று லாஹ்மியர் கூறுகிறார்.
“எங்கள் நாட்டில் உள்நாட்டுப் போர் நடப்பதற்கு மிக அருகில் இருந்தோம்” என்று ஓக்லஹோமாவின் துல்சா பகுதியை சேர்ந்த முன்னாள் செனட் வேட்பாளரான லாஹ்மியா தொலைபேசி உரையாடலில் கூறினார்.
இருப்பினும், புராட்டஸ்டண்ட் மத போதகரான லாஹ்மியா தன்னை ஒரு கிறிஸ்தவ தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள மறுக்கிறார்.
“கிறிஸ்தவ தேசியவாதி என்ற பட்டத்தின் மூலம் எங்களை ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அது உண்மையல்ல” என்று அவர் கூறுகிறார்.
ஓக்லஹோமா நகரத்தின் புறநகர்ப் பகுதியான எட்மண்டில் உள்ள ஃபேர்வியூ பாப்டிஸ்ட் தேவாலயத்தின் தலைவரான பாஸ்டர் பால் பிளேயரும், தன்னை அப்படி அடையாளப்படுத்துவதை எதிர்க்கிறார்.
“நான் ஒரு கிறிஸ்தவனா? என்றால் ஆம் என்பேன். நான் ஒரு தேசியவாதியா? என்றாலும் ஆம் என்பேன். அதற்காக சிலர் எங்களை கிறிஸ்தவ தேசியவாதியாக சித்தரிப்பதை நான் ஏற்கவில்லை. இந்த நாட்டில் ஒரு கிறிஸ்தவ தேசியவாதியாக இருப்பது ஒரு களங்கமாக மாறி வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.
1980களில் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக இருந்த போது எடுத்த படங்களையும் அவர் காட்டினார்.
தற்போது லிபர்ட்டி பாஸ்டர் பயிற்சி முகாமின் பொறுப்பாளராக பிளேயர் உள்ளார். புராட்டஸ்டண்ட் தலைவர்கள் அரசியலில் தங்கள் மதக் கொள்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை அங்கு கற்றுக்கொள்கிறார்கள்.
“இந்தப் பயிற்சி போதகர்களுக்கு வாழ்வின் அனைத்து கட்டங்களையும் பைபிள் ரீதியாக சிந்திக்க உதவுகிறது. அவர் அமெரிக்கா முழுவதும் உள்ள புராட்டஸ்டண்ட் உள்ளூர் தலைவர்களின் குழுவில் ஒரு பகுதியாக உள்ளார். அவர்கள் தங்களை ‘தேச பக்தி கொண்ட போதகர்கள்’ என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
அவர்களில் பலரைப் போலவே, அமெரிக்கா மீண்டும் பாரம்பரிய மதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிளேயர் விரும்புகிறார். 1776 இல் சுதந்திரம் அறிவிக்கப்பட்டபோது இந்த மதிப்புகள் கையெழுத்திடப்பட்டன.
“வரலாற்று ரீதியாக, கிறிஸ்தவர்கள் எப்போதும் அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்” என்று அவர் கூறுகிறார்.
கடந்த 2020 தேர்தலில் நியாயமாக டிரம்ப் தான் வெற்றியாளர் என்றும், 2021 ஜனவரியில் தலைநகர் மீதான தாக்குதலில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ‘அரசியல் கைதிகள்’ என்றும் பிளேயர் நம்புகிறார்.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி ஓக்லஹோமாவில் நடந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்ற டிரம்ப், இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக வருவார் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.
பைபிள் பெல்ட் மாகாணங்களில் உள்ள கன்சர்வேடிவ் புராட்டஸ்டண்ட் அரசியல் தலைவர்கள் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறார்கள். அவர்களின் நோக்கம் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்கள் நம்பிக்கைகளைப் பரப்புவதாகும். இதனை அவர்கள் ‘தெய்வீக பணி’ என்கின்றனர்.
டிரம்ப் மற்றும் கருக்கலைப்பு பிரச்னை
டிரம்பின் ஆதரவாளர்கள் மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வரலாற்று நியமனங்கள் மற்றும் அவரது பதவிக்காலத்தில் பிற முடிவுகளுக்காக அவரைப் பாராட்டினர். இந்த நியமனம் பல ஆண்டுகளாக நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை அமைப்பில் கன்சர்வேடிவ் பெரும்பான்மையை உறுதி செய்தது.
அந்த கன்சர்வேடிவ் பெரும்பான்மை காரணமாகவே, 2022 இல் உச்ச நீதிமன்றம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நாட்டில் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்திய தீர்ப்பை ரத்து செய்தது. உச்சநீதிமன்றம் அந்த முடிவை மாகாணங்களின் கைகளில் விட்டு விட்டது.
ஓக்லஹோமா மற்றும் ஆர்கன்சாஸ் போன்ற பைபிள் பெல்ட் மாகாணங்கள் கருக்கலைப்புக்கு எதிராக மிகவும் கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ளன. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே அங்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படும்.
இருப்பினும், அதை சட்டப்பூர்வமாக நிரூபிப்பது மருத்துவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இத்தேர்தலில் `கருக்கலைப்பு’ பெரும் பிரச்னையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், பைபிள் பெல்ட்டில் மிகவும் சக்தி வாய்ந்த குடியரசுக் கட்சியின் கன்சர்வேடிவ் பிரிவு, கருக்கலைப்புக்கு முழுமையான தடையைக் கொண்டுவர விரும்புகிறது. டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது சாத்தியமாகும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
முன்னாள் அதிபர் டிரம்புடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், டிரம்ப் தனது நிர்வாகத்தின் போது முக்கிய கன்சர்வேடிவ் புராட்டஸ்டண்ட் தலைவர்களுக்கு வெள்ளை மாளிகையில் முக்கியத்துவம் கொடுத்தார். ஏராளமான கிறிஸ்தவ மத குருமார்களின் நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்கிறார்.
வெள்ளை மாளிகையில் போதகர்களா?
டிரம்ப் பதவிக்காலத்தில், ‘ஃபெயித் அண்ட் ஆப்பர்சூனிட்டி இனிஷியேட்டிவ்’ (Faith and Opportunity Initiative) என்ற புதிய அரசாங்க அலுவலகத்தை உருவாக்கும் நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.
ஆவணத்தில் கையொப்பமிடும் போது அவர், “நம்பிக்கை என்பது அரசாங்கத்தை விட சக்தி வாய்ந்தது, கடவுளை விட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை” என்றார்.
ஓக்லஹோமா தொழிலதிபர் க்ளே கிளார்க் நிறுவிய புதிய தீவிர வலதுசாரி ‘ரீவேகன் அமெரிக்கா டூர்’ (ReAwaken America Tour movement) முன்னெடுப்பில் பலர் சேர்ந்தனர்.
இன்று இந்த இயக்கத்தில் போதகர்கள், குடியேற்ற எதிர்ப்பு, பால்புதுமையினர் (LGBTQ+) எதிர்ப்பு மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஆர்வலர்கள் உள்ளனர். டிரம்ப் அவர்களை வழிநடத்துவதாக உணரும் பலர் இதில் கலந்து கொள்கின்றனர்.
இடதுசாரிகளுக்கு எதிராக ஆன்மீகப் போரை நடத்தும் கடவுளின் வீரர்கள் என்று இந்த இயக்கத்தினர் தங்களை சொல்கின்றனர். இந்த இயக்கத்தின் நோக்கங்களில் சிலவற்றை ‘பிராஜக்ட் – 25’ இல் சேர்த்துள்ளதாக கருதப்படுகிறது.
அமெரிக்க பெடரல் அரசையும், அமெரிக்கர்களின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களையும் சீர்திருத்த வேண்டும் என்று கூறும் டிரம்பின் முன்னாள் ஆலோசகர்களின் சர்ச்சைக்குரிய முன்மொழிவுகளை உள்ளடக்கியதே பிராஜக்ட்-25 ஆகும்.
டிரம்ப் இந்தத் திட்டத்தில் இருந்து விலகியிருந்தாலும், குடியரசுக் கட்சியினர் வெள்ளை மாளிகையில் கால் பதித்தால், இந்த முயற்சிக்குப் பின்னால் உள்ள செல்வாக்குமிக்க மதக் குழுக்கள் அந்த செயல்திட்டத்தை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு