எங்களைத் தோற்கடிக்க சில குள்ள நரிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன! -வடிவேல் சுரேஸ்

by admin

”எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களைத் தோற்கடிக்க சில குள்ள நரிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன” என  ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தின் ஹாலியெல கபில தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தலுக்கான  கள நிலைமை நன்றாக இருக்கின்றது. ஆனால் சில குள்ள நரிகள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.

எங்களை தோற்கடிப்பதற்கு, பதுளை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க சில சதித்திட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறன.

சில பேர் கங்கனம் கட்டி செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதியை தோற்கடிக்க வேண்டும் என்றும், பதுளை மாவட்ட மக்களை அரசியல் ஆநாதைகளாக மாற்றவேண்டும் என்றும் சிலர் கனவு கண்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் வடிவேல் சுரேஸ் இருக்கும் வரை அது நடக்காது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. சிலர் தாங்கள் தோல்வியடைவோம் என தெரிந்தும் வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நோக்கம் வாக்குகளை சிதறடிப்பது மட்டும் தான்.

இன்று பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது  மக்கள் அவர்களை விரட்டுகிறார்கள். அதனால் அவர்கள் தோட்ட மக்களிடம் வந்து வாக்குகளை சேகரிக்க வருகிறார்கள்.

ஆனால் தோட்ட மக்களின் வாக்குகள் குறைவாகவே இருக்கிறது.முஸ்லிம் மக்களின் வாக்குகளும் குறைவாகவே இருக்கிறன. இதனையும் அவர்கள் பங்குப்போட்டால் எதிர்வரும் 14ம் திகதிக்கு நாங்கள் அரசியல் அநாதைகளாக மாறிவிடுவோம்.

ஆனால் பதுளை மாவட்டத்தில் வடிவேல் சுரேஸ் இருக்கும்வரை யாரையும் அரசியல் அநாதைகளாக மாற இடமளிக்க மாட்டேன்.  எங்களுக்கு வெற்றிப்பெற கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகையால் யாரும் இவர்களின் சதிவலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம்” இவ்வாறு வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்