கடவுச்சீட்டை பெறுபவர்களுக்கு விசேட அறிவிப்பு

by 9vbzz1

அத்தியாவசிய தேவைகளுக்காகக் கடவுச்சீட்டு தேவைப்படுகின்றவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளப் பிரவேசிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித்த ஹேரத் இதனைத் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்துத் தெரிவித்தார்.

தற்போது கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கான கடவுச் சீட்டு வெற்றுப் புத்தகங்களின் கிடைப்பனவு மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் இது அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.

இது கட்டம் கட்டமாகவே இலங்கைக்குக் கிடைக்கிறது. இதனால் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே அத்தியாவசியமான தேவை உடையவர்கள் மாத்திரம் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளப் பிரவேசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மாறாக அனைவரும் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காகப் பிரவேசித்து, நிலவுகின்ற நெரிசலில் அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை, புதிதாக விநியோகிக்கப்படுகின்ற கடவுச் சீட்டுகளில் மொழி முன்னுரிமை மாற்றப்பட்டு சிங்கள மொழி இரண்டாவதாகவும், தமிழ் மொழி மூன்றாவதாகவும் அச்சிடப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதில் வழங்கிய அமைச்சர் விஜித்த ஹேரத், குறித்த கடவுச் சீட்டுகளை புதிய அரசாங்கம் வடிவமைக்கவில்லை என்றும், கடந்த அரசாங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த கடவுச் சீட்டுகளை மாற்றியமைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

எனினும் ஆறு மாதங்களின் பின்னர் புதிய கடவுச் சீட்டுகளுக்கான கொள்வனவு ஆணை பிறப்பிக்கும்போது, அதன் வடிவமைப்பை மாற்றுவதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம் கடந்த அரசாங்கத்தின் விடுக்கப்பட்ட கடவுச் சீட்டு வெற்றுப் புத்தக கொள்வனவு ஆணையில் இதுவரையில் அச்சிடப்படாத புத்தங்களின் மொழி முன்னுரிமையை மாற்றி அச்சிடக்கூடிய நிலைமை இருந்தால், அதனைச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்