யாழ் – கொழும்பு புகையிரத சேவைகள் மீள ஆரம்பம்

by wp_fhdn

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான நேரடி புகையிரத சேவைகள் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 05.45 மணிக்கு புறப்பட்ட புகையிரதம் மதியம் 01.10  மணியளவில் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவைகள் உள்நாட்டு யுத்தம் காரணமாக வவுனியாவுடன் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. 

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் 2014ஆம் ஆண்டு முதல் கொழும்பு – யாழ்ப்பாண சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. 

அந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு வவுனியாவிற்கும் அனுராதபுரத்திற்கும் இடைப்பட்ட புகையிரத பாதை புனரமைப்பு பணிகளுக்காக கொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் அனுராதபுரத்துடனும் , யாழில் இருந்து புறப்படும் புகையிரதம் வவுனியாவுடனும் சேவையை மட்டுப்படுத்தின. 

புனரமைப்பு பணிகளின் முடிவடைந்து பின்னர் மீண்டும் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

அந்நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் அனுராதபுரம் மற்றும் மாகோ இடையிலான புகையிரத பாதை புனரமைப்பு பணிக்காக கொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதங்கள் மகோவுடனும் , யாழில் இருந்து புறப்படும் புகையிரதம் அநுராதபுரத்துடனும் தமது சேவையை மட்டுப்படுத்தின. 

அநுராதபுரம் – மாகோ புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் , கொழும்பு – யாழ்ப்பாண புகையிரத சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுத்த போதிலும் , புகையிரத சமிக்சை விளக்குகள் சீர்த்திருத்த பணிகள் உள்ளிட்ட தொழிநுட்ப ரீதியான வேலைகள் பூர்த்தியாகவில்லை என சேவை ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. 

இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் கொழும்பு கோட்டை – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்