நான் சிங்கள பெண்ணாக இருந்தாலும் இந்த மண்ணிலேயே சாவேன். அதுவரை நிம்மதியாக எமது பிள்ளைகளுக்கு விளக்கேற்றவிடுங்கள் என மூன்று மாவீரர்களின் தாயும் சிங்கள இனத்தை சேர்ந்தவருமான சீலாவதி நடராசா தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வீட்டுக்கு வந்து தமக்கு வாக்களியுங்கள் என்பார்கள். அதற்கு பின்னர் எவரும் திரும்பி பார்க்கமாட்டார்கள். இந்த மண்ணுக்காக மூன்று மாவீரர்களை கொடுத்தேன். நான் தற்போது மிகவும் வறுமையில் உடல் நலிவுற்று இயலாமல் இருக்கின்றேன்.
ஆனால் அரசியல்வாதிகள் எமக்கு உதவி செய்யத் தேவையில்லை. மாவீரர்களின் பெயர்களை சொல்லி அரசியல்வாதிகள் குளிர்காய வேண்டாம். மாவீரர் துயிலும் இல்லங்கள் காடாகி உள்ளது. மாவீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களையே இணைத்து மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவை உருவாக்கவேண்டும்.
நான் சிங்கள பெண்ணாக இருந்தாலும் இந்த மண்ணிலேயே சாவேன். அதுவரை நிம்மதியாக எமது பிள்ளைகளுக்கு விளக்கேற்றவிடுங்கள். மாவீரர்களின் பெயரைச் சொல்லி எல்லாம் செய்வோம் எல்லாம் செய்வோம் என அரசியல்வாதிகள் எவரும் வரக்கூடாது – என்றார்