மக்கள் மத்தியில் செல்வதற்கு அஞ்சுவதனாலேயே சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் பலர் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எந்தவொரு அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் உண்மையை பேசும் நபர்கள் நாடாளுமன்றில் இருக்க வேண்டும். நான் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பின்னால் பாரிய அரசியல் சதி காணப்படுகின்றது. உயர்நீதிமன்றத்தினால் இதற்கான நியாயமான தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்புகின்றேன்.
கடந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் அதிகவாக்குப்பெரும்பான்மையினால் மக்கள் என்னை நாடாளுமன்றுக்கு அனுப்பினார்கள். அதேபோல் எதிர்வரும் காலத்திலும் எனது சேவை மக்களுக்கு தேவையாயின் மக்கள் என்னை இம்முறையும் நாடாளுன்றுக்கு தெரிவு செய்வார்கள்.
அதேபோல் எனது கட்சியல் ஊழலுக்கு எதிரானவர்களே அங்கம் வகிக்கின்றனர். அவ்வாறானவர்கள் நாடாளுமன்றுக்கு செல்ல வேண்டும்.இலங்கை வரலாற்றில் இம்முறை அமைச்சரவை அமைச்சர்கள் பலர் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர்.
அதேபோல் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் ராஜபக்ஷ தரப்பினரும் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர்.அவர்கள் மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சம் கொண்டுள்ளமையினாலேயே தேர்தலில் இருந்து விலகியுள்ளனர்.
நாம் ஊழல்வாதிகளும் அல்ல ஊழல்வாதிகளுடன் தொடர்புடையவர்களும் அல்ல. எந்தநேரத்திலும் மக்கள் மத்தியில் செல்வதற்கான தகுதி எமக்கு உள்ளது” இவ்வாறு ஐக்கிய ஜனநாயகக்குரல்கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.