ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காத வாக்காளர்களும், பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியுடன் நிச்சயமாக இணைவார்கள் என உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலி பத்தேகம பகுதியில் நேற்று பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் போது அன்றைய ஆட்சியாளர்கள் தேசிய மக்கள் சக்தி மீது அச்சத்தை ஏற்படுத்தியிருந்தனர். அது பொய் என இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிர்வாகத்தை விட தற்போதைய நிர்வாகத்தில் சர்வதேச உறவுகளும் வலுப்பெற்றுள்ளன.
முன்னாள் அரசியல்வாதிகள் மோசடிக்கும் ஊழலுக்கும் இடம்கொடுத்தனர்.
இதனால் முறைகேடுகள் பல இடம்பெற்றன. இதன்காரணமாக, அரசியல் திறமை கொண்ட புதிய குழுவுக்கு பாராளுமன்றத்தில் இடம்கிடைக்கவில்லை.
புதியவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
கடந்த அரசாங்கங்கள் அரசியலை வியாபாரமாக மாற்றியிருந்தன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போதைய அரசாங்கம் அரசியலை ஒரு பொது இயக்கமாக மாற்றும் என்றும், தற்போது அதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் குறைக்கப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்காக செலவிடப்படும் பொதுப் பணமும் நிறுத்தப்படும். பொது சேவை திறம்பட செயல்படும். அதற்காக அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும்.
வெளிநாட்டு பணிபுரிபவர்களும் தற்போதைய அரசாங்கம் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஊழல்வாதிகளை தண்டிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், புதிய அரசாங்க அமைச்சரவை 25 பேருக்கு மட்டுப்படுத்தப்படும்.
விவசாயத்தை உயர் தரத்திற்கு கொண்டு வருவதே அரசின் முக்கிய முயற்சி. நிவாரணத் திட்டமும் பலப்படுத்தப்படும்.
அனைத்துப் பாடசாலைகளும் சமமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு டில்வின் சில்வா, ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் வழங்கிய ஆணையின் மூலம் நாட்டின் நன்மைக்காக பல விடயங்களைச் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
76 வருடங்கள் நாட்டை ஆண்ட பின்னர், பிரபுத்துவம் முற்றாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது ஒரு பெரிய சாதனை.
திசைக்காட்டிக்கு அளித்த வாக்கு ஒருபோதும் வீண்போகாது.
அதுபோல், எதிர்வரும் பொதுத் தேர்தல் திசைக்காட்டிக்கு பெரிய சவாலாக இருக்காது எனவும் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.