உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அண்மையில் 24 வயதான காங் (Gong) என்ற தீவிர ரசிகரை சந்தித்தார்.
காங் என்ற நபர் சீனாவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு ஏழு மாதங்கள் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோவை சந்தித்துள்ளார்.
கடந்த மார்ச் 18 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து புறப்பட்ட காங், ஒக்டோபர் 20 ஆம் திகதி சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கழகத்தை வந்தடைந்தார் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அவரது பயணம் முழுவதும் காங், கஜகஸ்தான், ஜோர்ஜியா, ஈரான் மற்றும் கட்டார் உட்பட பல நாடுகளின் வழியாக பயணம் மேற்கொண்டு சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தை அடைந்தார்.
ரொனால்டோவின் குழு காங்கின் அசாதாரண முயற்சியைப் பற்றி அறிந்த பிறகு, அவர்கள் அல் நாசர் கால்பந்து கழகத்தின் வெளியே ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.
இதன்போது காங், கிறிஸ்டியானோ ரொனால்டோவை சந்தித்தார்.
அவர்களின் சந்திப்பின் போது, ரொனால்டோ காங்கின் சட்டையில் கையெழுத்திட்டு அவருடன் பல புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, காங் அவரது பயணத்தின் போது, பல சவால்களை எதிர்கொண்டார்.
மொழித் தடைகள், பல்வேறு நாடுகளில் பட்ஜெட்டுக்கு ஏற்ற உணவுகள் மற்றும் நெடுந்தூரம் சைக்கிள் ஓட்டுவதில் உடல் சோர்வு ஆகியவற்றுடன் அவர் போராடினார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரொனால்டோ பெப்ரவரியில் சீனாவிற்கான திட்டமிடப்பட்ட பயணத்தை இரத்து செய்ததை அடுத்து, காங்கின் ரியாத் பயணம் உத்வேகம் பெற்றது.
இதனால், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கொண்டு தனது 13,000 கிலோ மீட்டர் தூர சைக்கிள் பயணத்தை காங் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.