மொபைல் செயலியினை அறிமுகப்படுத்த பெண் தலைமையிலான குழுவுக்கு அமெரிக்கா உதவி

by smngrx01

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகமானது WhimsicalWitsஉடன் இணைந்து டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் கூடிய நிகழ்நிலை நடத்தை குறித்து இளைஞர்களுக்கும் விளிம்புநிலை சமூகங்களுக்கும் அறிவூட்டுவதற்காகவும் மற்றும் அவர்களை வலுவூட்டுவதற்காகவும் வடிவமைக்கப்பட்ட Cyber Hero எனும் மொபைல் செயலியினை ஒக்டோபர் 28ஆம் திகதி பெருமையுடன் அறிமுகப்படுத்தியது.

இலங்கையிலுள்ள WhimsicalWits நிறுவனத்திலுள்ள பெண்கள் தலைமையிலான ஒரு குழுவினால் விருத்தி செய்யப்பட்ட இந்த புத்தாக்க செயலியானது இணைய பாதுகாப்பினையும் டிஜிட்டல் கல்வியறிவினையும் மேம்படுத்துவதற்கான வலுவான அமெரிக்க-இலங்கை பங்காண்மையினையும் உறுதிப்பாட்டினையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கொழும்பிலுள்ள அமெரிக்க மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இந்த உலகளாவிய அறிமுக நிகழ்வில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் WhimsicalWitsஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் உத்பலா பத்திரன ஆகியோரின் தலைமையில் Cyber Hero செயலியின் செயன்முறை விளக்கமும் இடம்பெற்றது.

ஊடக தொழில்வாண்மையாளர்கள், இளம் தலைவர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Cyber Hero என்பது கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும் ஒரு கல்விக் கருவியாகும்.

நிஜ உலக நிகழ்நிலை பாதுகாப்பு சூழ்நிலைகளை உருவாக்கி, இவ்விளையாட்டில் ஈடுபடும் நபர்களை அதில் ஆழமாக ஈடுபடுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

விபரத்திருட்டு, தீங்கு பயக்கும் மென்பொருள்கள் மற்றும் தனியுரிமை மீறல்கள் போன்ற இணைய அச்சுறுத்தல்களை எவ்வாறு இனங்காண்பது மற்றும் அவற்றுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை இச்செயலி பயனர்களுக்குக் கற்பிக்கிறது. இதன் காரணமாக இளைஞர்கள் மற்றும் சமூகங்களிடையே டிஜிட்டல் ரீதியிலான மீண்டெழும் தன்மையினை கட்டியெழுப்புவதற்கான ஒரு செயற்றிறன் வளமாக அது அமைகிறது.

இணையப் பாதுகாப்பு தொடர்பான கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர் சங், “இணையப் பாதுகாப்பு என்பது வெறுமனே ஒரு உலகளாவிய பிரச்சினை மட்டுமல்ல; அது தனிப்பட்ட பிரச்சினையாகவும் மற்றும் உள்நாட்டுப் பிரச்சினையாகவும் காணப்படுகிறது.

WhimsicalWitsஇல் பணியாற்றும் திறமையான இளையோரைக் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்ட Cyber Hero செயலியானது மிகவும் சாமர்த்தியமான மற்றும் பாதுகாப்பான ஒரு டிஜிட்டல் உலகத்தினை உருவாக்குவதில் எவ்வாறு பங்களிப்புச் செய்யும் என்பதைப் பார்ப்பதற்கு நாங்கள் ஆவலாய் இருக்கிறோம்.

இந்த செயலியினை இலவசமாக வழங்குவதன் மூலம் உடனடி கல்வியை வழங்குவது மட்டுமன்றி, வரவிருக்கும் பல வருட காலங்களுக்கு தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குப் பயனளிக்கக்கூடிய டிஜிட்டல் பொறுப்புணர்ச்சி மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு என்பன தொடர்பான ஒரு கலாசாரத்தினையும் நாங்கள் பேணி வளர்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

பாதுகாப்பான நிகழ்நிலை செயற்பாடுகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட ஒரு உலகளாவிய முன்முயற்சியான இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தில் Cyber Hero செயலியின் அறிமுகம் இடம்பெறுகிறது.

Internewsஇன் ஆதரவுடனும் அமெரிக்கத் தூதரகத்தின் நிதி உதவியுடனும் Protecting Online Rights of Changemakers (PORCH) எனும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட Cyber Hero செயலியானது விபரத்திருட்டு, தீங்குபயக்கும் மென்பொருள்கள் மற்றும் தனியுரிமை மீறல்கள் போன்ற டிஜிட்டல் அச்சுறுத்தல்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இளையோரை வலுவூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கியமான கல்விக் கருவியாகும்.

நிகழ்நிலை உலகில் நம்பிக்கையுடன் பயணிப்பதற்கு உதவி செய்து, இவ்விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு சிக்கலான டிஜிட்டல் உரிமைக் கருத்துக்களை அணுகக்கூடியதாகவும், ஈடுபாட்டுடன் பயன்படுத்தக்கூடியதாகவும் ஆக்குவதற்காக ஒரு முப்பரிமாண, விளையாட்டுமயமாக்கப்பட்ட அனுபவத்தை இவ்விளையாட்டு பயன்படுத்துகிறது.

இவ்விளையாட்டானது தெற்காசியா முழுவதும் உள்ள முக்கிய பங்காளர்களை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாகும். இம்முப்பரிமாண விளையாட்டின் வடிவமைப்பு மற்றும் விருத்திக்கு WhimsicalWits Studio தலைமைதாங்குகிறது.

விளையாட்டின் விவரணமானது இளம் வீரர்களுக்குப் பொருத்தமானதாக இருப்பதை உறுதிசெய்வதற்காக அறிவூட்டும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற பங்களாதேஷைச் சேர்ந்த Digitally Right நிறுவனத்தினால் Cyber Hero செயலிக்கான மூலப்பிரதி உருவாக்கப்பட்டது.

Cyber Hero செயலியினை அறிமுகம் செய்வதன் மூலம் அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பான டிஜிட்டல் எதிர்காலத்துக்குப் பங்களிப்பு செய்து, டிஜிட்டல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்குமான உறுதிப்பாட்டை அமெரிக்கத் தூதரகம் மீளவலியுறுத்துகிறது.

Cyber Hero தொடர்பான மேலதிக தகவல்களுக்கும், செயலியினை தரவிறக்கம் செய்வதற்கும் [Google Play Store link]இனை பார்வையிடவும்.

WhimsicalWits பற்றி… 

WhimsicalWits என்பது சமூகங்களை வலுவூட்டுகின்ற மற்றும் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கின்ற, புத்தாக்க தொழில்நுட்ப அறிவினால் உந்துதல் அளிக்கப்படும் கருவிகளை அபிவிருத்தி செய்வதற்கென அர்ப்பணிக்கப்பட்ட, பெண் தலைமைதாங்கும் ஒரு துடிப்பான குழுவால் வழிநடத்தப்படுகின்ற, இலங்கையை தளமாகக் கொண்ட விளையாட்டு மென்பொருள் விருத்தி மற்றும் அனிமேஷன் ஸ்டூடியோவாகும்.

இது பிராந்திய டிஜிட்டல் வாதாட்ட மற்றும் மூலோபாய அமைப்பான Digital Turtlesஇன் விளையாட்டுக் கிளையாகும். டிஜிட்டல் கதைசொல்லல் மற்றும் விளையாட்டு மென்பொருள் விருத்தி ஆகிய விடயங்களில் நிபுணத்துவத்துக்காக பெயர்பெற்ற WhimsicalWits நிறுவனமானது டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கும் மற்றும் ஈடுபாடுடைய தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்றிட்டங்களின் ஊடாக பொறுப்புணர்ச்சியுடைய நிகழ்நிலை நடத்தையினை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது.

அமெரிக்க மத்திய நிலையங்களின் வலையமைப்பு பற்றி… 

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்குரிய அமெரிக்க மத்திய நிலையங்களின் வலையமைப்பானது கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள அமெரிக்க மத்திய நிலையங்களை உள்ளடக்கியதாகும்.

இம்மத்திய நிலையங்கள், அவற்றுக்கு வருகைதரும் விருந்தினர்கள் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் விரிவுரைகள் ஊடாகவும், புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சஞ்சிகைகள் ஊடாகவும் அமெரிக்காவைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அமெரிக்காவுடன் தொடர்புகொள்வதற்குமான வரவேற்கத்தக்க சூழல்களை வழங்குகின்றன.

பொதுவான மற்றும் உலகளாவிய நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பான ஊடாட்டங்களை மேற்கொள்வதற்காக அனைத்து வகையான தரத்தினை சார்ந்த இலங்கையர்களும் அறிவுப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கும் ஒத்துழைப்பதற்கும் ஒன்றிணைவதற்கான தளங்களாக இந்த அமெரிக்க மத்திய நிலையங்கள் விளங்குகின்றன.

விரிவான வளங்கள் மற்றும் சமூக ஈடுபாட்டுக்கான அணுகலை வழங்குவதன் ஊடாக கல்வி ரீதியான வளர்ச்சி, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக இம்மத்திய நிலையங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

மெய்நிகர்நிலையிலும் நேரடியாகவும் ஒரு பரந்த அளவிலான ஊடாடும் நிகழ்ச்சிகளை அமெரிக்க மத்திய நிலையங்கள் ஏற்பாடு செய்கின்றன.

ஆங்கில மொழி தொடர்பான செயலமர்வுகள், தொழில்முனைவு தொடர்பான வழிகாட்டல்கள், அமெரிக்காவில் உயர்கல்வியைத் தொடர்வது பற்றிய தகவல்களை வழங்கும் அமர்வுகள் அல்லது அமெரிக்கக் கொள்கை, சமூகம் மற்றும் கலாசாரம் தொடர்பான முழு வீச்சிலான கலந்துரையாடல்கள், திரைப்படத் திரையிடல்கள் மற்றும் கதை சொல்லும் அமர்வுகள் என அனைவரும் ஈடுபடக்கூடிய ஏதாவதொன்று இம்மத்திய நிலையங்களில் நடைபெறுகிறது.

2023ஆம் ஆண்டில் American Centers, American Corners மற்றும் இருநாட்டு மத்திய நிலையங்களை உள்ளடக்கிய, உலகளாவிய American Spaces வலையமைப்பானது -கிட்டத்தட்ட 1.5 மில்லியன் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் ஊடாக உலகெங்கிலும் 41 மில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்தது.

தொடர்புடைய செய்திகள்