தென்கொரியாவில் தனிமை மரணங்கள்’ அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க அந்த நாட்டு அரசு ரூ.2,750 கோடியில் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
தென்கொரியாவில் 5.17 கோடி மக்கள் வசிக்கின்றனர். உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக அந்த நாடு முன்னேறி உள்ளது. உலக சந்தையில் தென்கொரிய மின்னணு சாதனங்கள், வாகனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால் தென்கொரிய மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்று பல்வேறு ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டி உள்ளன. குறிப்பாக தென்கொரிய அரசு சார்பில் அண்மையில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் தனிமையில் வாழ்வோரில் 5 பேரில் 4 பேருக்கு தற்கொலை சிந்தனை இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இன்றைய சூழலில் தென்கொரியாவில் தனிமையில் வாழும் நடுத்தர வயது மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு நாளில் சராசரியாக 9 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் தனிமையில் வாழும் முதியோர் தனித்து உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. வீடுகளில் தனித்து வாழும் அவர்களின் உடல்களை மீட்கவே சில நாட்கள் வரை ஆகிறது.
இதுகுறித்து தென்கொரிய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தென்கொரியாவில் பெரும்பாலான இளம் தலைமுறையினர் திருமணம் செய்யாமல் வாழ்கின்றனர். இதன்காரணமாக மக்கள் தொகை சரிந்து கொண்டே செல்கிறது. திருமணம் ஆகாத இளைஞர்கள், இளம்பெண்கள் நடுத்தர வயதை எட்டும் போது அவர்கள் விரக்தி அடைகின்றனர்.
இதன்காரணமாக 40 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதேபோல 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் வீடுகளில் தனித்து உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க ரூ.2,750 கோடியில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக தனிமையில் வாழ்வோருக்கு ஆலோசனைகளை வழங்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன்படி நாட்டின் அனைத்து மாகாணங்களில் சிறப்பு ஆலோசனை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. தனிமையில் வாழும் இளைஞர்கள், நடுத்தர வயதினருக்கு மாதந்தோறும் ரூ.41,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஜப்பான், பிரிட்டனில் தனிமையில் வாழ்வோருக்காக தனித் துறைகள், ஆணையங் கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இது போன்று தென்கொரியாவிலும் தனிமையில் வாழ்வோரின் நலனுக்காக தனித்துறையை உருவாக்க தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு தென்கொரிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.