‘திராவிடம், தமிழ் தேசியம், ஆட்சியில் பங்கு’ – விஜய் பேச்சு பற்றி அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

தவெக மாநாடு, விஜய்

பட மூலாதாரம், TVK

“கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு”, “திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசியுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். அவருடைய கருத்துகள் குறித்து மற்ற அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், ““கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார்.

மேலும், “2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்றார்.

யாரையும் தாக்கி அரசியல் செய்யப் போவதில்லை என்றும், சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம் என்று பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார்.

“ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார் அவர்.

விஜயின் இத்தகைய கருத்துகளுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர். அவர்கள் என்ன கூறியுள்ளனர்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு அமைச்சர் எஸ். ரகுபதி கூறியது என்ன?

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, “திராவிட மாடலின் கொள்கைகளை தமிழக மக்களிடமிருந்து அகற்ற முடியாது என்பதை நேற்று விஜய் பேசியதில் இருந்து தெரிகிறது. அது நகல்தான். தமிழக மக்களின் இதயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கென தனி இடம் நிச்சயம் உண்டு. உழைப்பின் மற்றொரு வடிவமாக துணை முதலமைச்சர் உதயநிதி இருக்கிறார். அவருக்கும் மக்கள் மனதில் இடமுண்டு. இரவு, பகல் பாராமல் அரசியலில் உழைக்க வேண்டும், அது போகப்போக விஜய்க்கு தெரியும்” என்றார்.

தமிழக வெற்றிக்கழகம், “பாஜகவின் சி டீம்” என்கிறார் அமைச்சர் எஸ். ரகுபதி

பட மூலாதாரம், regupathymla/X

படக்குறிப்பு, தமிழக வெற்றிக்கழகம், “பாஜகவின் சி டீம்” என்கிறார் அமைச்சர் எஸ். ரகுபதி

மேலும் தமிழக வெற்றிக்கழகம், “பாஜகவின் சி டீம்” என்றும் அவர் கூறினார்.

“தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் ஆளுநரை எதிர்த்துப் பேசினால் தான் அரசியலில் எடுபடும் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது” என்றார் அவர்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து விஜயின் கருத்து குறித்துப் பேசிய அவர், “ஆட்சிக்கு வரட்டும் பார்க்கலாம்” என்றார்.

அதிமுக குறித்து விஜய் பேசாதது குறித்து தெரிவித்த அவர், “அதிமுக தமிழகத்தில் எடுபடாது என்பது தெரிந்திருக்கிறது. அங்குள்ளவர்களை இழுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி பேசாமல் இருந்திருக்கிறார்” என கூறினார்.

திமுக ஆட்சியில் எந்த தவறுக்கும்இ டம் கொடுக்கவில்லை என்றும் பெரியார், அண்ணா, திமுக குறித்துப் பேசாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்றும் ரகுபதி கூறினார்.

தமிழிசை சௌந்தரராஜன் என்ன சொன்னார்?

“புதிய கட்சி தொடங்கியதற்காக விஜய்க்கு வாழ்த்துகள். உதயாவுக்கு ‘(உதயநிதி) எதிராக இக்கட்சி உதயமாகியிருக்கிறது. நல்ல முறையான தொண்டர்கள், எந்த வரம்பு மீறலும் இல்லை. தலைவர்களுக்கு மரியாதை, தாய், தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கியிருப்பது ஆரோக்கியமானது. மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட கருத்துகளை வரவேற்கிறேன். அம்பேத்கரை வரவேற்றதில் மகிழ்ச்சி” என்றார்.

“பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி” என விஜய் குறிப்பிட்டது குறித்து பேசிய தமிழிசை, “பாஜகவை கொள்கை எதிரி என விஜய் சொல்வதாக பிறர் கூறுகின்றனர் பிரிவினைவாதத்தை நாங்கள் பேசவில்லை. வளர்ச்சித் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். அவர் சொன்ன பலவற்றை மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. இதை நான் அவரிடம் எடுத்துச் சொல்வேன். நாங்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் அல்ல” என்றார்.

தமிழிசை சௌந்தரராஜன்

படக்குறிப்பு, அரசியல் எதிரி என விஜய் குறிப்பிட்டது திமுகவை தான் என கூறுகிறார், தமிழிசை

மேலும், பாஜக மீது தான் முன்வைக்கும் விமர்சனங்கள் உண்மையா இல்லையா என்பதில் விஜய்க்கு தயக்கம் இருக்கலாம் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

“அரசியல் எதிரி என விஜய் குறிப்பிட்டது திமுகவை தான். திமுகவை எதிர்ப்பதற்கு வலிமையான கட்சி வந்திருப்பதாக நினைக்கிறேன். இதே வீரியத்துடன் திமுக எதிர்ப்பில் விஜய் இருக்க வேண்டும்” என்றார்.

ஆளுநர் பதவியை விஜய் எதிர்ப்பது, இருமொழி கொள்கை ஆகியவை குறித்த விஜயின் கருத்துகளை எதிர்ப்பதாக தமிழிசை கூறினார்.

“ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பேன் என்று கூறுவது ஆரோக்கியமானது. தங்களுக்கு மாற்றே இல்லை என திமுக சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் மாற்றத்தைக் கொடுப்பேன் என வந்திருக்கிறார். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துச் செல்வோம் என்று கூறியது வரவேற்புக்குரியது” என்று அவர் கூறினார்.

விஜய் பற்றி சீமான் கூறியது என்ன?

திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என விஜய் பேசியதில் தனக்கு உடன்பாடு இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

“இக்கருத்து தெளிவாக இல்லை. குழப்பமான மனநிலை தான் இருக்கிறது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. அது இரண்டும் கண்களாக இருக்க முடியாது, கொடிய புண்ணாகத்தான் இருக்கும். எல்லோருக்குமான அரசியல் தமிழ் தேசிய அரசியல். நான் பேசுவது பாசிசமோ, பிரிவினைவாதமோ இல்லை. நாங்கள் பேசுவது தேவையான அரசியல்” என்றார.

“திராவிடத்தை ஏற்றுக்கொண்டு திமுகவை எதிர்க்கிறோம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது

பட மூலாதாரம், Seeman

படக்குறிப்பு, “திராவிடத்தை ஏற்றுக்கொண்டு திமுகவை எதிர்க்கிறோம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது” என்கிறார் சீமான்

மேலும், திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது என்றும் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒரே தராசில் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

“திராவிடத்தை ஏற்றுக்கொண்டு திமுகவை எதிர்க்கிறோம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. எங்களின் ஒரே அரசியல் எதிரி திமுக” என்று சீமான் கூறினார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜயின் கருத்து குறித்துப் பேசிய சீமான், “தனக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என நிரூபித்தால்தான் கூட்டணிக்கு வருவார்கள். 8.2 விழுக்காடு வாக்கு வங்கி வைத்திருக்கும் நானே கூட்டணிக்கு அழைக்கவில்லை. தன் வலிமையை காட்டிய பிறகு அழைப்பதுதான் முதிர்ச்சி” என்றார்.

கொள்கையில் ஒத்த கருத்து இல்லாமல் கூட்டணியில் இணைய முடியாது என்று அவர் கூறினார்.

விஜய் பேச்சு பற்றி விசிக நிர்வாகி கருத்து

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் விஜய். அவருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா

படக்குறிப்பு, அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதை விஜய் உணர்ந்திருப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல் என்றும் தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் என்றும் அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு