‘ஆட்சியில் பங்கு’: விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு விஜய் குறி வைக்கிறாரா?

தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

பட மூலாதாரம், TVK

  • எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப்
  • பதவி, பிபிசி தமிழ்

கடந்த பிப்ரவரி மாதம், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்குவதாக அறிவித்ததிலிருந்தே, அவரது கொள்கை என்னவாக இருக்கும், அவர் என்ன வகையான அரசியல் செய்யப் போகிறார், என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்துவந்தது.

அதன்பின், கடந்த ஆகஸ்ட் மாதம், விஜய் கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. அப்போதும் அந்தக் கொடியின் குறியீடு என்னவென்று பலரும் அதனை ‘டீகோட்’ செய்து வந்தனர்.

ஆனால், அப்போதெல்லாம், விஜய் தன் அரசியல் கொள்கை, நிலைப்பாடு ஆகியவற்றைக் குறித்து நேரடியாக எதையும் சொல்லவில்லை.

இந்நிலையில், அவர் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தப்போவதாக அறிவித்ததும் இதுகுறித்த ஊகங்களும், விவாதங்களும் சூடுபிடித்தன. மாநாட்டுத் திடலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், வேலு நாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்ததும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இவை அனைத்துக்கும் மத்தியில், இன்று, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடந்த மாநாட்டில் பேசிய விஜய், தமிழ்நாட்டிலும், மத்தியிலும் ஆளும் கட்சிகளை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார். ஆனால், திராவிடக் கட்சிகளின் கொள்கையான சமூகநீதியை முன்னிறுத்துகிறார்.

விஜய் தனித்துவமான அரசியலை முன்னிறுத்துகிறாரா? அவரது மாநாட்டு உரை அரசியல் களத்தில் என்ன தாக்கத்தைக் கொண்டிருக்கும்? தமிழ்நாட்டு அரசியலில் அவரது இடம் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘விஜய் பேசியதில் புதிதாக ஒன்றுமில்லை’

“ஒரு மாநாடு என்ற அளவில், விஜய் நடத்திய கூட்டம் வெற்றிதான், ஆனால் அவர் பேசியதில் சுவாரசியமாக எதுவும் இல்லை” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மாநாட்டுக்கு வந்த மக்கள் கூட்டத்தை வைத்துப் பார்த்தால் அது மற்ற அரசியல் கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் விஜய் பேசிய கொள்கைகள் அனைத்தும் பழையவைதான், அவற்றில் சுவாரஸ்யம் இல்லை,” என்கிறார் அவர்.

“விஜய் பேசிய கருத்துகள் அனைத்தும் தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் பேசியவைதான். கட்சி துங்கும்போது எல்லோரும் பேசுவதுதான் இது. பிளவுவாத அரசியல், ஊழல் ஆகியவற்றை எதிர்ப்பது ஒன்றும் புதுமை கிடையாது,” என்கிறார் அவர்.

இதே கருத்தைப் பிரதிபலிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

விஜய் பேசிய அனைத்துமே திராவிடம் சார்ந்த கொள்கைகள்தான் என்று கூறும் அவர், “வர்ணாசிரம எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை, சமூக நீதி, ஆளுநர் எதிர்ப்பு ஆகியவை அனைத்தும் திராவிடக் கட்சிகளின் கொள்கைகள் தான். அண்ணாவின் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற கொள்கையையும் விஜய் ஆதரிக்கிறார்,” என்கிறார் அவர்.

மேலும், “சமூகநீதி, மதச்சார்பின்மை, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவை திராவிடக் கட்சிகளின் ‘டெம்ப்ளேட்’,” என்கிறார் ப்ரியன்.

தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்

விஜயின் தி.மு.க எதிர்ப்பு என்ன சொல்கிறது?

மாநாட்டில் விஜய் தனது அரசியல் நிலைப்பாடாக வெளிப்படையாகக் காட்டிக்கொண்டது, தமிழக ஆளும் கட்சிக்கான எதிர்ப்பு.

“மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள், திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி,” என்றார் விஜய்.

விஜய்யின் இந்த நிலைப்பாடு எதிர்பார்த்ததுதான் என்கிறார் ப்ரியன். “வாக்குகள் பெறவேண்டுமென்றால், அவர் இதைத்தான் செய்தாக வேண்டும்,” என்கிறார் அவர்.

இதே கருத்தில் உடன்படும் குபேந்திரன், “ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் ஓட்டு விழும். சீமான், அண்ணாமலை ஆகியோர் அப்படித்தான் செயல்பட்டார்கள். அதனால்தான் அவர் தி.மு.க-வை வெளிப்படையாக எதிர்க்கிறார்,” என்கிறார் அவர்.

தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

பா.ஜ.க-விடம் மென்மை காட்டுகிறாரா விஜய்?

‘கரப்ஷன் கபடதாரிகள்’, ‘குடும்பச் சுயநலக் கூட்டம்’ என்றெல்லாம் தி.மு.க-வின் பெயர் குறிப்பிடாமல், ஆனால் கடுமையாக விமர்சித்த விஜய், அதேபோல பெயர் குறிப்பிடாமல் மற்றொரு கட்சியையும் விமர்சித்தார்.

‘பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி’ என்று அவர் பேசியது பா.ஜ.க-வை குறிவைத்துப் பேசியதாக அரசியல் அரங்கில் புரிந்து கொள்ளப்படுகிறது.

ஆனால், தி.மு.க.வைத் தாக்கிய கடுமையை விஜய் பா.ஜ.க-விடம் காட்டவில்லை என்ற கருத்துகளும் எழுகின்றன.

“விஜய் தி.மு.க-விடம் காட்டிய வேகத்தை பா.ஜ.க-விடம் காட்டவில்லை. தி.மு.க-வை 80% எதிர்த்துவிட்டு, பா.ஜ.க-வை 40% தான் எதிர்த்திருக்கிறார்,” என்கிறார் குபேந்திரன். மேலும், “ ‘குடும்ப ஆட்சி’ என்று தி.மு.க-வை நேரடியாகச் சுட்டிய விஜய், ‘பிளவுவாத சக்திகள்’ என்றால் யார் என்று தெளிவாகச் சொல்லாதது ஏன்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

ஆனால், இக்கருத்தில் மாறுபடுகிறார் ப்ரியன். பா.ஜ.க-விடம் விஜய் மென்மையான போக்கைக் கடைபிடிக்கவில்லை, என்கிறார்.

“தற்போது தமிழகத்தில் தி.மு.க தான் பிரதான சக்தி. அதனால்தான் அவர் அக்கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க அவ்வளவு பெரிய சக்தி இல்லை. அதனால்தான் ‘கொள்கை ரீதியான எதிர்ப்பு’ என்று மட்டும் கூறியிருக்கிறார். விஜய் பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர வாய்ப்புகள் இல்லை. விஜய் பேசிய இருமொழிக் கொள்கை, ஆளுநர் எதிர்ப்பு, ஆகியவற்றை பா.ஜ.க., எப்படி ஏற்றுக்கொள்ளும்?” என்று ப்ரியன் கேள்வியெழுப்புகிறார்.

ஆனால், “சிலசமயம் கொள்கைகளைத் தாண்டியும் கூட்டணி அமையலாம். அதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்,” என்கிறார்.

அதேபோல, எதிர்வரும் நாட்களில் விஜய் பா.ஜ.க-வை எதிர்க்கிறாரா என்பதும் அந்தந்தச் சந்தர்ப்பங்களைப் பொருத்து அமையலாம் , என்கிறார் அவர்.

தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

பட மூலாதாரம், TVK

விஜய் யாருடைய வாக்குகளுக்கு குறிவைக்கிறார்?

திராவிடக் கட்சிகள் எதிர்ப்பு, பா.ஜ.க எதிர்ப்பு, ‘திராவிடம்-தமிழ்த் தேசியம் இரண்டும் முக்கியம்’ என்ற பிரகடனம் – இவையனைத்தையும் ஒருசேரப் பார்க்கும் போது, இயற்கையாகவே விஜய் யாருடைய வாக்குகளைக் குறிவைக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

“தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் பிரிப்பார் விஜய்,” என்கிறார் குபேந்திரன்.

அதேபோல, பா.ஜ.க-வை எதிர்ப்பதாக விஜய் கூறியிருப்பதால், தற்போது தி.மு.க-வுக்குச் செல்லும் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள், விஜய்க்குச் செல்லலாம், என்கிறார் ப்ரியன்.

மேலும், “அ.தி.மு.க-வுக்குச் செல்லும் பா.ஜ.க., எதிர்ப்பு வாக்குகளும் விஜய்க்குச் செல்லலாம். அதனால் மறைமுகமாக அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியும் பாதிக்கப்படும்,” என்றார்.

வி.சி.கவுக்கு விஜய் குறி வைக்கிறாரா?

விஜய் தனது உரையில் ‘அரசியல் அணுகுண்டு’ என்ற பிரகடனத்தோடு அறிவித்த ஒரு விஷயம், ‘2026-ஆம் ஆண்டு தேர்தலில் த.வெ.க-வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்’ என்பது.

இது உண்மையிலேயே ஒரு புதிய விஷயம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

“இதுவரை தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளும் அறிவிக்காத ஒரு விஷயம் இது,” என்கிறார் குபேந்திரன்.

இந்த அறிவிப்பை, விஜய்யின் ‘கூக்ளி பந்துவீச்சு’ என்று கூறும் ப்ரியன், தமிழ்நாட்டில் தன்னால் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பதை விஜய் உணர்ந்தே இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த ஆட்சி அதிகாரப் பகிர்வு பிரகடனத்தின் மூலம் விஜய் யாரைக் குறிவைக்கிறார்?

“தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளைத் தான்,” என்கிறார் ப்ரியன்.

குபேந்திரன், “இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான அழைப்புதான்,” என்கிறார். “தற்போது திருமாவளவன் மட்டும்தான் ‘ஆட்சியில் பங்கு’ கேட்கிறார். அதேபோல திருமாவளவனுக்கும் விஜய்க்கும் இடையே பேச்சுவார்த்தைகளும் நடந்ததாகத் தெரிகிறது,” என்கிறார் அவர்.

தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

பட மூலாதாரம், TVK

தமிழ்நாட்டு அரசியலில் விஜய்க்கான இடம் என்ன?

இந்த மாநாடு எழுப்பும் முக்கியமான கேள்வி – தமிழ்நாட்டு அரசியலில் விஜய்க்கான இடம் என்ன?

“தி.மு.கவை ஊழல் கட்சி என்றும் பா.ஜ.க-வை பிளவுவாத சக்தி என்றும் மறைமுகமாக குறிப்பிட்ட விஜய், ‘விசிலடிச்சான் குஞ்சுகள்’ என்று குறிப்பிட்டது அந்த காலத்தில் அ.தி.மு.க-வினரைக் கேலி செய்யக் குறிப்பிடப்பட்ட வார்த்தை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் அவர் அக்கட்சியையும் தாக்கியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

‘மாற்றம் என்று சொல்லி ஏமாற்றமாட்டோம்’ என்று விஜய் பேசியது பா.ம.க-வைக் குறிவைத்துப் பேசியதாகப் பார்க்கப்படுகிறது.

அதேபோல, தமிழ்த் தேசியத்தை ஏற்பதாக அவர் சொன்னது, சீமானின் வாக்குகளையும் தனதாக்கிக் கொள்ளும் முயற்சி என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

அப்படியெனில், விஜய்யின் அரசியல் இடம் என்ன?

விஜய்க்கு முன் அரசியல் கட்சி துவங்கி, தமிழக அரசியலில் முக்கிய ஆளுமையாக முன்னேறிவந்த விஜயகாந்த், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததால் தனது அரசியல் வாழ்க்கையில் சறுக்கினார் என்று கூறும் ப்ரியன், விஜய் அதுபோலச் செய்யமாட்டார் என்று தான் கருதுவதாகக் கூறுகிறார்.

“தன்னை ‘முதன்மை சக்தி’ என்று கூறிக்கொள்ளும் விஜய், யாருக்குக் கீழேயும் இருக்கமாட்டார்,” என்கிறார்.

ஆனால், தனது முதல் உரையிலேயே வலுவான தி.மு.க எதிர்ப்பினைப் பிரகடனப்படுத்தியிருக்கும் விஜய், தமிழகத்தில் இன்று ஏற்கனவே தி.மு.க-வை எதிர்த்துக் கொண்டிருக்கும் 2-3 கட்சிகளின் வரிசையில் சேர்வாரா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கிறார்.

“விஜயின் கட்சி தனித்து நிற்குமா? அல்லது பத்தோடு பதினொன்றாகப் போய்விடுமா என்பதை அவரது அடுத்தச் செயல்பாடுகள், தேர்தல் செயல்பாடுகள் ஆகியவற்றை வைத்துத்தான் சொல்லமுடியும்,” என்கிறார் ப்ரியன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.