அதிகரித்து வரும் இணையவழி மோசடிகள்: பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

by adminDev

இணையவழி ஊடாக மக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் குழுக்களாக தங்கியிருந்து இணைவழி ஊடாக பொதுமக்களிடம் பணத்தை கொள்ளையடித்த வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கையர்களும் அண்மைக்காலமாக, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இணைய வங்கிப் பரிவர்த்தனைகளில் வழங்கப்படும் 0TP அல்லது ஒரு முறை கடவுச்சொற்கள் மற்றும் பல முக்கிய உத்திகள் மூலம் நிதி மோசடி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

இவற்றில் ஒரு முறையாக பேஸ்புக்இ தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட பல்வேறு நபர்களை வற்புறுத்தி பணத்தை முதலீடு செய்ய வைப்பதன் ஊடாக இந்த மோசடிகள் இடம்பெறுகின்றன.

இவை தவிர இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினர் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடுத்தர வயது மற்றும் முதியவர்களுடன் போலியான காதல் உறவுகளை உருவாக்கி, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பணமோசடியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் சமூகத்தில் பிரபலமானவர்கள் போல் நடித்து பல்வேறு திட்டங்களுக்கு அழைப்பு விடுத்து பணம் பெறும் செயற்பாடுகளும் இந்த நாட்களில் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில் பொது மக்களை விளிப்புடன் செயற்படுமாறும், இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்