கடந்த சனிக்கிழமை (26) நீர்வேலிப் பகுதியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பின்போடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியினர் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய கும்பல் முன்னதாக தாக்குதலை மேற்கொண்டது.பின்னர் அங்கிருந்து சென்று , மீண்டும் சுமார் 30 பேருடன் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
தாக்குதலில்; பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கானவர்கள் மற்றும் தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர் என இருதரப்பினரும் பரஸ்பர முறைப்பாட்டினை வழங்கியிருந்தனர்.
அதனையடுத்து தாக்குதலுக்கு இலக்காகி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்களுக்கு வைத்தியசாலையில் கட்டிலுடன் கைவிலங்கிட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான மூவர் மற்றும் தாக்குதலை மேற்கொண்ட ஐவர் என 08 பேரையும் யாழ் . நீதவான் நீதிமன்றில், திங்கட்கிழமை முற்படுத்தினர்.
அதன்போது அவர்களை பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.