புதிய ஜனாதிபதி நாட்டை பற்றி பேசினாலும் மலையக மக்கள் பற்றி கதைப்பதில்லை நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு பல சுயேச்சைக்குழுக்கள் காணாமல் போய்விடும். எனவே, சுயேச்சைக்குழுக்களை நம்பி இருக்கின்ற தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடக்கூடாது. காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால்தான் மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்களுக்காக குரல் எழுப்பப்படும் என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
பூண்டுலோயா, கைப்புகலை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
இது தேர்தல் காலம். இலங்கை ஜனநாயக நாடு என்பதால் தேர்தலில் எவரும் போட்டியிடலாம். அதற்குரிய உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அதேபோல மக்களுடன் இருக்கும், மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வேட்பாளுர்களை தெரிவுசெய்ய வேண்டியது மக்களின் கடமையாகும். போலி பிரசாரங்கள்மூலம் மக்களின் மனங்களை மாற்றுவதற்கு சிலர் முற்படலாம். அவ்வாறான சூழ்ச்சிகளை இனங்கண்டு, தமது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் நாம் ஒரு வருடம் அங்கம் வகித்தோம். குறுகிய காலப்பகுதிக்குள் மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கல்வித்துறை மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கி இருந்தோம். செய்த சேவைகளை முன்வைத்தே நாம் மக்கள் முன்னிலையில் வாக்கு கேட்கின்றோம். ஆனால் காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என பொய்சொல்லி சிலர் வாக்கு கேட்கின்றனர். காங்கிரஸை விமர்சித்தால் மட்டுமே அவர்களால் அரசியல் செய்ய முடியும்.
காங்கிரஸ் சமூக நலன்கருதியே செயற்பட்டுவருகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது மிக முக்கியம். எல்லோரும் வாக்கு கேட்டுவரலாம், ஆனால் யாரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. நாம் தேர்தல் காலங்களில் மட்டும் அல்ல, எப்போதும் மக்களுடன் மக்களாக வாழ்கின்றோம்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. உதவி ஆசிரியர் நியமனம் உட்பட பல விடயங்களை செய்துள்ளோம். காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்தோம்.
புதிய ஜனாதிபதி நாட்டை பற்றி பேசினாலும் மலையக மக்கள் பற்றி கதைப்பதில்லை. எனவே எமது பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளுங்கள். நாம் சபையில் இருந்தால்தான் உரிமைகளை, அபிவிருத்திகளை கேட்டுபெறலாம். நுவரெலியா மாவட்டத்தில் 8 ஆசனங்களுக்கு 308 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலின் பின்னர் 300 பேர் சென்றுவிடுவார்கள். எனவே, மக்களுடன் இருப்பவர்களையே மக்கள் தெரிவுசெய்ய வேண்டும். தேர்தல் முடிந்ததும் பல சுயேச்சைக்குழுக்கள் காணாமல்போய்விடும்.
காங்கிரஸ்தான் களத்தில் நின்று செயற்படும். எனவே, நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் எங்கள் மூவரையும் நாடாளுமன்றம் அனுப்பிவையுங்கள்” என்றார்.