உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணி தொடர்பாக சனல் 04 வெளியிட்ட காணொளியில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும்
நபர் யார் என்பது குறித்து, அரசாங்கம் விசாரணை நடத்தவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வெளியாகியுள்ள விடயங்களுக்கு, அவதூறாக பதில் கூறுவதை விடுத்து
அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறித்த வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும் நபர் யார்….
இதனை விசாரணை செய்வதற்கு அரசாங்கம் குழுவொன்றை நியமிக்க வேண்டும்.
சனல் 4இன் வீடியோவில் புலனாய்வு அதிகாரிகளையும் இராணுவத்தினரையும் குற்றம்சாட்டும் நபர் தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி என்ற தோற்றத்தை உருவாக்குகின்றார்,
அந்த நபர் தற்போது அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கின்றார். அரசாங்கம் தேசத்துரோகத்திற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உறுதியாகியுள்ளது.
ராஜபக்ஷதரப்பினரை அதிகாரத்திற்கு கொண்டு வரும் நோக்கில், அரச புலனாய்வு பிரிவினால் ஏப்ரல் 21 தாக்குதல் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கலாம் என செனல்-4 தொலைக்காட்சி ஆவணப்படுத்தியிருந்தது.
அதனை முற்றாக நிராகரிப்பதாக ஆணைக்குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. செனல்- 4 தொலைக்காட்சி ஏற்கனவே, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் செயற்பட்டுள்ளது.
அதனடிப்படையிலேயே ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அறிக்கையிடலிலும் அந்த தொலைக்காட்சி செயற்பட்டுள்ளது. அரச புலனாய்வு சேவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி, கடந்த காலத்தில் புலனாய்வு சேவை சீர்குலைக்கப்பட்டமையே, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வாளர்கள் அறிந்திருந்த போதிலும், எம்மால் அறிந்துகொள்ள முடியாமல் போனமைக்கான காரணமாகும்.
தாக்குதல் தொடர்பான தகவல்களை பெறும் விடயமும் அமைந்துள்ளது.
தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரியான சஹ்ரான் ஹசிமுடன் மூன்று மணிநேரம் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக அசாத் மௌலானா செனல் 4 காணொளியில் தெரிவித்திருந்தார்.
அந்த கலந்துரையாடலில் தேசிய புலனாய்வு சேவையின் அப்போதைய பணிப்பாளர் மேஜர் ஜென்ரல் சுரேஷ் சாலேவும் பங்கேற்றிருந்ததாக அவர் கூறியிருந்தார்.
சஹ்ரானுக்கு சொந்தமான வீடொன்றில் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்பட்டிருந்தது.
அசாத் மௌலானா சுவிட்ஸர்லாந்தில் அகதி அந்தஸ்;தை பெறுவதற்காகவே, செனல்-4 தொலைக்காட்சியில் முன்னிலையாகி, நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தமை ஆணைக்குழுவின் அறிக்கையில் வெளிப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து உண்மையான தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் புதிய விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்குமானால், செனல்-4 காணொளியில் வரும் இரண்டாவது நபரான அரச அதிகாரி தொடர்பிலும் தனியான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அந்த காணொளியில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும் நபர் யார் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக அரசாங்கம் குழுவொன்றை நியமிக்கவேண்டும் என அரசாங்கத்திற்கு நான் சவால் விடுக்கின்றேன். நான் கடந்த வாரம் சில விடயங்களை தெரிவித்திருந்தேன்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸின் அறிக்கை தவறானது என நிரூபிக்குமாறு நான் கடந்த வாரம் கூறியிருந்தேன். அதற்கான ஆதாரங்களை அமைச்சரவை ஊடகசந்திப்பில் பகிரங்கப்படுத்துமாறு நான் அமைச்சர் விஜித ஹேரத்திற்கு சவால் விடுக்கின்றேன்” இவ்வாறு உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.