பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கட்சிகளின் பெயர்களையும் வேட்பாளர்களின் சின்னங்களையும் அடையாளப்படுத்தி நினைவிற் கொள்ள முடியாது அப்பாவி மக்கள் அவலப்படுகின்றனர். இது போதாதென்று மந்தி(ரி)ப் பதவிக்கும் வேட்டை நடைபெறுவதாக தெற்கிலிருந்து செய்தி வருகிறது. முதலில், ஆகக்குறைந்தது ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார தமிழர் தாயகத்தில் பெற்ற 246,187 வாக்குகளையாவது சுமந்திரன் அணி பெறுமா என்பதே இன்றுள்ள கேள்வி.
பொதுத்தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வருகின்ற போதிலும், முன்னைய காலங்கள் போன்று அட்டகாச ஊர்வலங்கள், ஆதரவுக் கூட்டங்கள் என்பவை இதுவரை காணப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்த சூட்டோடு சூடாக பொதுத்தேர்தல் இடம்பெறுவதால், அதில் வெற்றி பெற்றவர்களே இதிலும் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளதுபோல தெரிகிறது.
மூன்று எம்.பிக்களுடன் மட்டுமே உள்ள ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி மூன்று இலக்கங்களுக்கும் அப்பால் வெற்றியீட்டினால் மட்டுமே நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெறமுடியும். பொதுத்தேர்தல் மாவட்ட ரீதியாக இடம்பெற்றாலும், 160 தொகுதிகள் வரையறை செய்யப்பட்டவாறே உள்ளன. இவற்றுள் 106 தொகுதிகளில் அநுர குமார கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூடிய வாக்குகளைப் பெற்றது. 225 எம்.பிக்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 113ஐ பெற்றால் மட்டுமே மசோதாக்களை இலகுவாக நிறைவேற்ற முடியும்.
கடந்த மாத ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி 46 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை தேசிய மக்கள் சக்தி பெற்ற 106 உடன் ஒப்பிடுகையில் 50 வீதத்துக்கும் குறைவானது. இதனால் அநுர குமார அணி 113 ஆசனங்களை இலகுவாக வெற்றி கொள்ளலாமென மற்றைய கட்சிகள் தங்களுக்குள் நம்புகின்றன.
தெற்கில் மற்றைய கட்சிகள் நடத்தும் போட்டி எதிர்கட்சியை கைப்பற்றுவதற்கானது. ஆனால், சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவோம் என்ற முழக்கத்துடன் இவரது அணியினர் அறிக்கைப் பரப்புரைகளை மேற்கொள்கின்றனர். இதனை முறியடிப்பதற்காக அநுர குமார அணி பெரும்பான்மையான வேட்பாளர்களாக இளைஞர்களையும் பெண்களையும் களத்தில் இறக்கியுள்ளது.
தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தமது தரப்பின் பரப்புரைக்கு தலைமை தாங்கிவரும் ரணில் விக்கிரமசிங்க, இளையோரால் நாடாளுமன்றத்தை நிரப்பினால் ஆட்சி வெற்றி பெறாது என்ற பாணியில் தமது கருத்துகளை விசிறி வருகிறார். நாட்டின் பொருளாதார நிலைமையை தொடர்ந்து சீராக்க வேண்டுமானால் தமது நிர்வாகத்திலிருந்த துறைசார் அனுபவஸ்தர்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ய வேண்டுமென்று வேண்டுகிறார். இப்போதுள்ள அரசியல் களம் இவரது குரலுக்கு வாய்ப்பானதாக இல்லை.
1970ல் சிறீமாவோ பண்டாரநாயக்க மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் ஆட்சிக்கு வந்தபோது அவரது மகனான அநுர பண்டாரநாயக்க மற்றும் மகிந்த ராஜபக்ச உட்பட பலர் முப்பது வயதுக்கும் குறைவான இளையவர்களாக இருந்தனர். 1977ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆறிலிரண்டு பெரும்பான்மையில் ஆட்சியைக் கைப்பற்றியபோது அவரது பெறாமகனான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அநுர டானியல் உட்பட பெரும்பான்மையினர் திருமணம் புரிந்திராத இளையோராக இருந்தனர்.
மேலே பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் பல இளையோர் பிற்காலத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல அமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர். முதியோர் இல்லம் செல்ல வேண்டியவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று அரசியல் முழக்கமிடும் இக்காலத்தில் இளையோரை தவிர்க்க வேண்டுமென்றும் அவர்கள் அவர்கள் அனுபவமற்றவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு அவர்களை நீக்குமாறு கோருவது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
பெரும்பான்மையான இளையோர் மற்றும் பெண்களை வேட்பாளர்களாக்கியுள்ள ஜனாதிபதி அநுர குமார அணி, எப்பாடுபட்டாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறும் இலக்குடன் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவும், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கவும் மூன்றிலிரண்டு அவசியம் என்பதை காரணம் கூறி வாக்குக் கேட்கப்படுகிறது.
இது விடயத்தில் எதிர்பாராத வகையில் எதிர்தரப்பிலிருந்து இவர்களுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு தேவையான ஆதரவை நாடாளுமன்றத்தில் தங்களால் தரமுடியுமென்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாசவும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்சவும் முற்கூட்டியே (அநுர அணி கேட்காமல்) அறிவித்துள்ளனர். இதுகூட அரசியலில் வித்தியாசமான ஒரு நகர்வு. அதாவது அநுர அணிக்கு மூன்றிலிரண்டு எண்ணிக்கை தேர்தலூடாக தேவையில்லை என்பதை வாக்காளப் பெருமக்களுக்குத் தெரிவிப்பதற்கானது.
எதிர்கட்சிகள் அறிவித்திருக்கும் இந்த ஆதரவு அநுர குமார தரப்பை ஓர் இக்கட்டுக்குள் தள்ளியுள்ளது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எதிர்கட்சிகள் வழங்குமானால் தனிக்கட்சியாக அந்த வெற்றியை அநுர குமார பெறுவதை தடுக்கலாம். அதேசமயம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட வேண்டிய கட்டாயத்துக்குள்ளும் அநுர குமார நிர்ப்பந்திக்கப்படுவார்.
தெற்கில் அரசியல் நிலைவரம் அநுர குமாரவை மையப்படுத்தி நகர்ந்து கொண்டிருக்கையில், தமிழர் தாயகத்தின் நிலைமை கடந்த வாரம் குறிப்பிட்டதுபோன்று மாட்டு வால் போல் கீழ்நோக்கி வளர்ச்சி காண்கிறது. இங்கு போட்டியிடும் தமிழ் கட்சிகளின் பெயர்களையும் அவர்களின் சின்னத்தையும் மட்டுமன்றி வேட்பாளர்களின் பெயர்களைக்கூட அடையாளப்படுத்தி நினைவில் வைத்திருக்க முடியாத அவலம் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் மக்களின் தாய்க்கட்சியாகவும், அவர்களின் தேசிய உரிமைக் கட்சியாகவும் மதிக்கப்பட்டு வந்த இலங்கை தமிழரசு கட்சி ஒரு கொழும்பு இறக்குமதியால் சின்னாபின்னமாகி நிற்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சியை அந்தக் கொழும்பன் இழுத்துச் சென்றபோதே இந்த நிலைமை அந்தக் கட்சிக்கு ஏற்படுமென்று உள்வீட்டுக்காரர்கள் உணர்ந்திருந்தனர். பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட சம்பந்தன் உயிருடன் இருந்தபோதே, ‘ஐயா சொல்கிறார் – ஐயா விரும்புகிறார் – ஐயாவின் கருத்து” என்று தனது விருப்பங்களை அந்தக் கொழும்பான் நிறைவேற்றியபோதே வீட்டின் அழிவு ஆரம்பமானது.
‘ஐயாவுக்கு வயது போய்விட்டது, அவர் பதவி துறக்க வேண்டும்” என்று பகிரங்கமாக சொன்னபோதே, கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பான் துடிக்கிறார் என்பது தெரியவந்தது. கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டு படுதோல்வி கண்டபின்னர் செயலாளர் பதவியை தமக்குத் தருமாறு புதிய தலைவராகத் தெரிவான சிவஞானம் சிறீதரனிடம் கொழும்பான் கேட்டபோதே, வரப்போகும் தேர்தலில் வேட்பாளரை நியமிக்கும் அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
அதுவும் கைகூடாத நிலையில், கட்சியின் பதில் பொதுச்செயலாளரான தமது சகாவை அழைத்து வேட்பாளர் தெரிவை கனகச்சிதமாக நிறைவேற்றினார். பதில் பொதுச்செயலாளராக இருப்பவர் முன்னர் வடமாகாணசபையில் ஒரு அமைச்சராக இருந்தபோது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அப்பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டவர் என்பது பழங்கதையல்ல.
இப்போது பொதுத்தேர்தலில் போட்டியிடும் இந்த அணியின் வேட்பாளர்கள் அனைவரும் கொழும்பானின் கைப்பொம்மைகள். உள்ளத்தால் ஒத்துவராத சிறீதரனை முதன்மை வேட்பாளராக்கி வாக்காளர்களை ஏமாற்றும் முயற்சி அரங்கேற்றப்படுகிறது. தாமே அதிகூடிய வாக்குகள் பெற்று தெரிவாக வேண்டும் அல்லது போனஸ் ஆசனத்தைப் பெற வேண்டுமென்பது கொழும்பானின் இலக்கு. அதுவும் தவறினால் தேசியப் பட்டியலூடாக எம்.பியாவதற்கு திட்டமுண்டு. (கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்க தேசியப் பட்டியலூடாக எம்.பியானது போன்று).
தாயகத்தின் தற்போதைய களநிலைவரத்தை விபரிக்கும் ஒளிக்காட்சியொன்று காற்று புக முடியாத இடங்களிலும் ஊடுருவி செல்கிறது. தமிழரசு கட்சிக்குள் அதிகம் பேசப்படும் சுமந்திரன், சிறீதரன் ஆகியோரின் கொடும்பாவிகள் மீதும் அவர்களின் புகைப்படங்கள் மீதும் பொதுவெளியில் வைத்து குற்றப்பத்திரிகைகளை வாசிக்கும் இளைஞர் கூட்டம் தாக்குதல் நடத்துவதை இதில் காண முடிகிறது. இந்தளவுக்கு தமிழரசின் நிலை கேவலமாகியுள்ளது. இதனை உணராத கட்சித் தலைகள் தங்களின் வெற்றியை உறுதிப்படுத்தி கொழும்பில் அமைச்சர் பதவிக்கு கண் வைத்துள்ளதாக கொழும்பிலிருந்து சிங்கள அரசியல் கட்சிக;டாக செய்திகள் வெளிவருகின்றன. வேட்டி போனாலும் பரவாயில்லை, கௌபீசணமாவது காப்பாற்றப்படுமா என்ற நிலையில் மந்தி(ரி) பதவியா?
இவர்கள் பார்வைக்கு ஒரு கணக்கு. 1977 பொதுத்தேர்தலில் 421,888 வாக்குகளை வடக்கு கிழக்கில் பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி, 2004 பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பாகி 633,654 வாக்குகளைப் பெற்றது. 2020 பொதுத்தேர்தலில் 327,118 வாக்குகளை மட்டுமே கூட்டமைப்பினால் பெற முடிந்தது.
கடந்த மாத ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தாயகத்தில் போட்டியிட்ட அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி எந்த ஆர்ப்பாட்டமுமின்றி 246,187 வாக்குகளை இலகுவாக பெற்றது. தமிழரசு கட்சி என்ற பெயரில் தனியனாக போட்டியிடும் சுமந்திரன் அணி வருகின்ற பொதுத்தேர்தலில் 246,187 வாக்குகளையாவது பெற்று மானத்தைக் காப்பாற்றுமா?