த.வெ.க மாநாடு: வெப்பம், குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியா? என்ன நடக்கிறது?
இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.
மாநாடு நடக்கவிருக்கும் இடத்திற்கும் இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், குடிநீர், உணவு இல்லாமலும், கடும் வெப்பம் நிலவுவதாலும் மக்களில் சிலர் மயக்கமடைந்துள்ளனர். அங்கு என்ன நடக்கிறது? நிலவரம் என்ன?
மாநாடு ஏற்பாடுகள் எப்படி?
நடிகர் விஜயை காண பொதுமக்கள் காலை முதலே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநாடு நடைபெறும் நடத்திற்கு வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர்.
அக்டோபர் 26ஆம் தேதி அன்று மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்ட விஜய் மக்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார்.
மாநாடு 3 மணி அளவில் ஆரம்பிக்கவுள்ளது. கொடியேற்றத்திற்குப் பிறகு கட்சித் தலைவர் விஜய்க்கான பாடல் இன்று வெளியிடப்பட உள்ளது.
குறைந்தது 50 ஆயிரம் நபர்கள் அமரும் வண்ணம் இருக்கைகள், 8 பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளது. மேடையின் இரண்டு பகுதிகளிலும் தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளன.
எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க 3000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 700க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மாநாடு நடக்கும் இடத்தில் பொறுத்தப்பட்டுள்ளன.
மாநாடு நடக்கும் இடத்தில், 80 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் திடலின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
திடலின் உள்ளே 20க்கும் மேற்பட்ட அவசர ஊர்தி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மாநாட்டிற்கு வந்தவர்களில் சிலர் மயக்கம்
மேடைக்கு அருகே தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் திடலின் பல இடங்களில் அமர்ந்திருக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மாநாட்டிற்கு வந்துள்ளவர்களில் பலர் மயக்கம் அடைந்துள்ளனர். அங்கு குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மாநாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கும் கார் நிறுத்துமிடங்கள் முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையில், புதிதாக வாகனங்கள் நிறுத்தப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
கொடி அறிமுகம் முதல் கொள்கை வெளியீடு வரை
ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அன்று சென்னை பனையூரில் அமைந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் கொடியும் பாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.
கட்சிக் கொடியில் இடம் பெற்றிருக்கும் சின்னம் மற்றும் நிறங்களுக்கான அர்த்தம் என்ன என்பது பேசுபொருளானது. மேலும் கட்சியின் கொள்கைகள் என்ன என்பதை விஜய் அப்போது அறிவிக்கவில்லை.
தொண்டர்களுடன் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட நடிகர் விஜய், அதன் பிறகு கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடியின் அர்த்தம் என்ன என்பதை இன்றைய மாநாட்டில் அறிவிப்பதாகக் கூறியிருந்தார் நடிகர் விஜய்.
பொதுமக்கள் மட்டுமின்றி இதர கட்சியினருக்கும் இந்த மாநாட்டில் விஜய் விளக்கவுள்ள கட்சிக் கொள்கைகள் குறித்த ஆவல் எழுந்துள்ளது.
நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் கடந்து வந்த பாதை குறித்து மேலும் அறிந்து கொள்ள
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு