ஜனாதிபதி , பொலிசாரின் ஊடாக கீழ்த்தரமான அரசியலை முன்னெடுக்கின்றார் – மணிவண்ணன் குற்றச்சாட்டு

by admin

தன்னை ஊழலுக்கு எதிரான நேர்மையான அரசியல்வாதியாக வெளிக்காட்டிக்கொண்டு , தனக்கு கீழுள்ள பொலிஸ் திணைக்களம் ஊடாக மிக கீழ்த்தரமான அரசியலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னெடுத்து செல்வதாக , யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது நேற்றைய தினம் சனிக்கிழமை வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டதில் , பெண் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைவிலங்கிட்டுள்ளனர். 

கைவிலங்கிடப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது ஆதரவாளர்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் எங்கள் கட்சியின் ஆதரவாளர்களை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைது செய்ய முயன்றுள்ளனர்.

 பின்னர் எமது ஆதரவாளர்களுக்கு வைத்தியசாலை கட்டிலுடன் சேர்த்து கைவிலங்கிட்டுள்ளனர். கட்டிலுடன் கைவிலங்கிடப்பட்டுள்ள நிலையிலையே அவர்கள் வைத்திய சிகிச்சையை பெற்று வருகின்றனர். 

தாக்குதல் நடந்து 24 மணி நேரம் கடந்தும் தாக்குதலாளிகளை பொலிஸார் கைது செய்யவில்லை. 

இதனை பார்க்கும் போது இந்த தாக்குதல் சம்பவம் மிக பெரிய அரசியல் பின்னணியில், புலனாய்வாளர்களின் பங்களிப்புடன் நடந்ததாகவே நாங்கள் சந்தேகிக்கின்றோம். பொலிசாரின் அசமந்த போக்கான நடவடிக்கை எமது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தன்னை ஊழலுக்கு எதிரான நேர்மையான அரசியல்வாதியாக காட்டிக்கொண்டு தன்னுடைய பொலிஸ் திணைக்களம் ஊடாக மிக கீழ் தரமான அரசியலை முன்னெடுத்து செல்கின்றார் என்பதற்கு இந்த தாக்குதல் சம்பவம் மிக பெரிய சான்றாக உள்ளது.

தாக்குதல் நடைபெற்று 24 மணிநேரம் கடந்த நிலையிலும் தாக்குதலை மேற்கொண்ட 30 பேரில் ஒருவரையேனும், பொலிஸார்  கைது செய்யவில்லை .

அதனை பார்க்கும் போது , தாக்குதலாளிகளுடன் பொலிஸார் நல்லுறவை பேணுவதாகவும் , அவர்களுடன் பொலிஸாரும் சேர்ந்து இயங்குவதாகவும் நம்பகமாக அறிகின்றோம். 

கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் இரவும் கூட தாக்குதலாளிகளுடன் சேர்ந்து இருந்துள்ளதாக நமக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது, அதனை உறுதிப்படுத்துவது போலவே இன்றைய தினம் போலீசாரின் நடவடிக்கையும் காணப்படுகிறது.

அதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் தமிழ் அரசியல் கட்சி உள்ளதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். மிக விரைவில் அவர்களை மக்களுக்கு அடையாளப்படுத்துவம் என மேலும் தெரிவித்தார் 

தொடர்புடைய செய்திகள்