கொடியேற்றி, சமூகநீதி உறுதிமொழி எடுத்துக்கொண்ட நடிகர் விஜய் – த.வெ.க மாநாட்டில் என்ன நடக்கிறது?
[இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.]
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது.
மாநாடு நடக்கும் இடத்திற்கு இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
நடிகர் விஜய், மாநாட்டுக்கு வந்து, திடலில் இருக்கும் ரசிகர்களைச் சந்தித்தார்.
அதன்பின், கட்சியின் கொள்கைகளை விளக்கும் ஒரு காணொளி திரையிடப்பட்டது. அதில் கட்சி ‘மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்’ கொண்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின், விஜய் தனது கட்சியின் கொடியை பட்டன் அழுத்தி ஏற்றினார்.
முன்னர், மாநாட்டிற்கு வந்துள்ள மக்கள் உணவு, குடிநீர் இல்லாமலும் கடும் வெயிலின் தாக்கத்தாலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக களத்தில் இருக்கும் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் கூறுகிறார்.
மாநாடு நடக்கும் இடத்தில் என்ன நடக்கிறது? நிலவரம் என்ன?
த.வெ.க-வின் கொள்கைகள் என்ன?
மாநாட்டில் சம்பத்குமார் என்ற கட்சித் தொண்டர் கொள்கைகளை வாசித்தார்.
கட்சியின் கோட்பாடு ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறிய அவர், கட்சியின் குறிக்கோள், ‘மதம், சதி, நிறம், இனம், மொழி, பாலினம், பொருளாதாரம் ஆகியவற்றால் தமிழக மக்கள் சுருங்கிவிடாமல், அனைத்து மக்களின் தனிமனித சமூகப் பொருளாதார அரசியல் உரிமைகளை நிலைநிறுத்திச் சமநிலைச் சமூகம் உருவாக்குவது’, என்றார்.
மேலும், “ஆட்சி, சட்டம், நீதி, அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தைப் பறிக்கும் மாநில ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவது,” கட்சியின் கொள்கை என்றார்.
இடஒதுக்கீடு பற்றிப் பேசிய அவர், ‘விகிதாச்சார இடப்பங்கீடு’ தான் உண்மையான சமூகநீதி என்றார். “சாதி ஒழியும் வரை அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்துத் துறையிலும் விகிதாச்சாரத்தின் படி பிரதிநிதித்துவம் வழங்குவது,” கட்சியின் கொள்கை என்றார்.
“பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்குச் சமத்துவம் வழங்கப்படும்,” என்றார்.
அதேபோல, மாநிலத்தின் தன்னாட்சி உரிமைகளை மீட்பதும், தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையைப் பின்பறுவதும் கட்சியின் கொள்கை என்றார்.
மாநாட்டு ஏற்பாடுகள் எப்படி?
நடிகர் விஜயை காண பொதுமக்கள் காலை முதலே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.
அக்டோபர் 26ஆம் தேதியன்று மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்ட விஜய் மக்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார்.
மாநாடு மாலை 4 மணி அளவில் ஆரம்பிக்கவுள்ளது. கொடியேற்றத்திற்குப் பிறகு கட்சித் தலைவர் விஜய்க்கான பாடலும் வெளியிடப்பட உள்ளது.
குறைந்தது 75 ஆயிரம் நபர்கள் அமரும் வண்ணம் இருக்கைகள், 8 பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளன. மேடையின் இரண்டு பகுதிகளிலும் தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளன.
எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க 3000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 700க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மாநாடு நடக்கும் இடத்தில் பொறுத்தப்பட்டுள்ளன.
மாநாடு நடக்கும் இடத்தில், 80 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திடலின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
திடலின் உள்ளே 20க்கும் மேற்பட்ட அவசர ஊர்தி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மாநாட்டிற்கு வந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்
மாநாட்டிற்கு இன்று காலை முதலே ஆயிரக்கணக்கில் மக்கள் வந்த வண்ணம் இருப்பதால், திடலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டேங்குகளில் மதியம் 12 மணியளவிலேயே குடிநீர் தீர்ந்துவிட்டது.
“ஒரு குடிநீர் பாட்டில் வாங்க வேண்டுமென்றாலும், திடலுக்குள் இருந்து குறைந்தது 1-2 கி.மீ வரவேண்டும். மாநாட்டுத் திடலில் வைக்கப்பட்டிருந்த டேங்குகளிலும் குடிநீர் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக” கூறுகிறார் பிபிசி செய்தியாளர் முரளிதரன்.
மேலும், அந்தப் பகுதியைச் சுற்றிப் பெரியளவில் கடைகள் இல்லாததால், உணவு கிடைப்பதும் ஒரு பிரச்னையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால், மாநாட்டிற்கு வந்துள்ளவர்களில் பலர் மயக்கம் அடைந்துள்ளனர். மிகக் கடுமையான வெயில், குடிநீர் மற்றும் உணவு கிடைப்பதில் சிக்கல், அதீத கூட்டம், இருக்கைகளின் போதாமை ஆகியவற்றால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சுமார் 75,000 இருக்கைகள் வரை மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வந்துள்ளனர்.
மாநாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கும் கார் நிறுத்துமிடங்கள் முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையில், புதிதாக வாகனங்கள் நிறுத்தப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மாநாட்டிற்கு வரும் மக்கள் கூட்டத்தால் சுமார் 10கி.மீ தொலைவுக்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
‘பல கட்சிகள் காணாமல் போயிருக்கின்றன’
விஜய் கட்சி மாநாடு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், விஜய் தனக்கு நீண்டநாள் நண்பர், அவரைத் தனக்குச் சிறுவயதிலிருந்தே தெரியும் என்று கூறினார். “நான் முதன்முதலில் தயாரித்த திரைப்படம் அவருடையது தான்,” என்றார்.
‘75 ஆண்டுகால திராவிட சித்தாந்தத்துக்கு மாற்றாகவும் சவாலாகவும் புதிய கட்சிகள் அமையுமா?’ என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, எந்தக் கட்சியும் வரக்கூடாது என்று சட்டம் இல்லை, யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம், அவர்களுக்கு அதற்கான உரிமை இருக்கிறது, என்றார்.
“இந்த 75 ஆண்டுகாலமாக வேறெந்த கட்சியும் துவங்கப்பட்டதில்லை என்று கூற முடியாது. பல கட்சிகள் வந்திருக்கின்றன, பல கட்சிகள் காணாமல் போயிருக்கின்றன. மக்கள் பணி தான் முக்கியம். மக்கள் யாரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது மிக முக்கியம். கொள்கைகள் தான் முக்கியம்,” என்றார்.
த.வெ.க மாநாடு குறித்து சீமான் கூறுவது என்ன?
“நாங்கள் அரசியலுக்கு வந்த போது எங்களுக்கு இத்தகைய ஆதரவு கிடைக்கவில்லை” என்று கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “விஜய்யின் இந்த மாநாடு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
மதுரை தெப்பக்குளம் அருகே மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை செலுத்திய பிறகு பேசிய அவர், “ஒரு அரசியல் கட்சியைத் துவங்கும்போது அது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் எல்லாம் வரும்போது எங்களுக்கு இவ்வளவு ஆதரவு இல்லை. எளிய பிள்ளைகள், திரைப் புகழ் இருக்கும்போது நல்ல வீச்சும் ரீச்சும் கிடைக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
“கட்-அவுட்களில் அரசியல் இல்லை. கருத்தியல் தான் அரசியல். வேலு நாச்சியார், அம்பேத்கர் கட்-அவுட்களை வைப்பது விஷயமில்லை. அவர்களின் பங்களிப்பை எடுத்துச் செல்ல வேண்டும்,” என்று பேசிய சீமான் கூட்டணி குறித்தும் கருத்து தெரிவித்தார்.
“ஒரே கொள்கை என்பதால், அழைத்தால்தான் சேர்ந்து நிற்க வேண்டும் இல்லை. அதேநேரம் சேர்ந்து நிற்கக்கூடாது என்றும் இல்லை. காலம்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும். இதை தம்பிதான் (விஜய்) தீர்மானிக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
கொடி அறிமுகம் முதல் கொள்கை வெளியீடு வரை
ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அன்று சென்னை பனையூரில் அமைந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் கொடியும் பாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.
கட்சிக் கொடியில் இடம் பெற்றிருக்கும் சின்னம் மற்றும் நிறங்களுக்கான அர்த்தம் என்ன என்பது பேசுபொருளானது. மேலும் கட்சியின் கொள்கைகள் என்ன என்பதை விஜய் அப்போது அறிவிக்கவில்லை.
தொண்டர்களுடன் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட நடிகர் விஜய், அதன் பிறகு கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடியின் அர்த்தம் என்ன என்பதை இன்றைய மாநாட்டில் அறிவிப்பதாகக் கூறியிருந்தார் நடிகர் விஜய்.
பொதுமக்கள் மட்டுமின்றி இதர கட்சியினருக்கும் இந்த மாநாட்டில் விஜய் விளக்கவுள்ள கட்சிக் கொள்கைகள் குறித்த ஆவல் எழுந்துள்ளது.
நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் கடந்து வந்த பாதை குறித்து மேலும் அறிந்து கொள்ள
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு