தவெக மாநாட்டில் பெரியார், அம்பேத்கருடன் சேர, சோழ, பாண்டியருக்கும் கட்அவுட் – விஜய் என்ன சொல்ல வருகிறார்?

மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட் விவாதங்களை எழுப்பியுள்ளது

பட மூலாதாரம், TVK IT WING/X

படக்குறிப்பு, மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட் விவாதங்களை எழுப்பியுள்ளது
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்

கட்சி தொடங்கி சுமார் 9 மாதங்களுக்குப் பின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அதன் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். மாநாடு நடைபெறும் இடத்தில் பல்வேறு தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்களின் கட்-அவுட்கள் இடம் பெற்றிருப்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.

இந்த கட்-அவுட்கள் விஜயின் கொள்கைகளை ஓரளவு தெளிவுபடுத்தும் விதமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், இன்னும் தெளிவு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒவ்வொரு கட்-அவுட்டுக்கும் நோக்கம் இருக்கிறது, அதைத் தங்கள் கட்சியின் தலைவர் கூறினால்தான் அந்நோக்கம் நிறைவேறும் என்கின்றனர், தமிழக வெற்றிக் கழகத்தினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்-அவுட்கள் குறித்துப் பரவலாக பேசப்படுவது ஏன்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விஜய் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். அதுகுறித்து, விஜய் நேரடியாகத் தெரிவிக்காமல், அறிக்கை வாயிலாக அதன் அறிவிப்பு வந்தது. பிறகு, ஆகஸ்ட் 22ஆம் தேதி, கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. இரு நிகழ்வுகளுக்கும் இடையே, விஜய் தன் அரசியல் கொள்கை, நிலைப்பாடு குறித்து நேரடியாக ஊடகங்களிடம் பேசவில்லை.

எனினும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை, விமானப் படை சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் போன்ற பிரச்னைகள் குறித்த தனது கருத்தை அறிக்கைகள் வாயிலாகத் தெரிவித்து வந்தார்.

இந்தப் பின்னணியில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு தமிழக அரசியல் தளத்தில் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பைப் பார்க்க வேண்டியுள்ளது. கட்சி தொடங்கி, இத்தனை மாதங்கள் கழித்து அவர் என்ன பேசப் போகிறார் என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளாரா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு அக்கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கட்சியின் சார்பாக செய்யப்பட்டுள்ளன.

மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட்கள் குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்கிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஒருபுறம் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவே விஜய் நிற்பது போன்று கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்-அவுட்களை வைத்திருப்பதன் மூலம் விஜய் சொல்ல வருவது என்ன? அவர் தனது நிலைப்பாட்டை தெளிவாக்கியுள்ளாரா என்பதை அறிய அரசியல் நோக்கர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து ஏற்கனவே பேசியுள்ளார் விஜய்

பட மூலாதாரம், X/ActorVijay

படக்குறிப்பு, பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து ஏற்கெனவே பேசியுள்ளார் விஜய் (கோப்புப்படம்)

“இதுதான் என் கொள்கை என்பதை அவர் முழுமையாகத் தெளிவுபடுத்தவில்லை. கட்-அவுட்கள் வாயிலாக தமிழ் தேசியம், திராவிடம், தேசியம் மூன்றையும் அவர் முழுமையாக, தெளிவாக முன்னிறுத்தவில்லை. அவர் ஒருவேளை திராவிடம்தான் தனது கொள்கை என்று நினைத்திருந்தால், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை எழுந்தபோது ஆளுநரைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் பெரியார், சமூக நீதிக்காக அம்பேத்கர், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காமராஜர் கட்-அவுட்களை வைத்திருக்கலாம் என ப்ரியன் கருதுகிறார்.

ஆனால், “பெரியார் கட்-அவுட் வைத்திருப்பதால் கடவுள்-மறுப்பு கொள்கையில் அவரின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை” என்கிறார் ப்ரியன்.

“எனினும், புதிதாக கட்சி தொடங்குபவர்கள், இன்றைய சூழலில் பெரியாரை முன்னெடுப்பதற்குப் பெரிதும் தயங்குவர். ஆனால், அவரை தைரியமாக முன்னெடுத்ததற்குப் பாராட்ட வேண்டும்.”

கடந்த இரண்டு ஆண்டுகளாக, விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக நிகழ்ச்சி நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் அப்படி நடைபெற்ற கல்வி நிகழ்ச்சியில், ‘பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள்’ என்று ஏற்கெனவே கூறியிருந்தார். பெரியாரின் பிறந்த நாளன்று பெரியார் திடலுக்குச் சென்று அவருடைய சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.

மேலும், நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு குறித்தும் அவர் பேசியுள்ளார்.

சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்த தன் நிலைப்பாட்டை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

பட மூலாதாரம், LoyolaMani/X

படக்குறிப்பு, சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்த தனது நிலைப்பாட்டை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோருக்கு கட்-அவுட்கள் வைத்திருப்பதன் ‘அரசியல் கணக்கு’ குறித்து விளக்கினார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி.

“கட்-அவுட்கள் ஓரளவு தெளிவாக இருப்பதாக நினைக்கிறேன். தான் குறிவைக்கும் வாக்கு வங்கியை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அம்பேத்கர் மூலம் தலித் வாக்கு வங்கியை குறிவைக்கிறார். பெரியார் மூலம் சமூக நீதியை முன்னிறுத்துகிறார். காமராஜரை முன்னிறுத்துவதன் வாயிலாக, காங்கிரஸ் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை குறிவைக்கிறார். வேலுநாச்சியார் மூலமும் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கி குறிவைக்கப்படுகிறது,” என்கிறார் அவர்.

எம்ஜிஆர், அண்ணா இடம்பெறாதது ஏன்?

மறைந்த தலைவர்கள் அண்ணா, எம்ஜிஆர் குறித்து நேர்மறையான கருத்துகளைக் கூறி வரும் விஜய், அவர்களுக்கு கட்-அவுட் வைக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், அவ்விரு தலைவர்களுக்கும் கட்-அவுட் வைத்தால் விஜய் தனது தனித்தன்மையை நிரூபிக்க முடியாது என்கிறார் ப்ரியன்.

ஏற்கெனவே, விஜய் திரைப்படங்களில் எம்ஜிஆர் பாடல்கள், அவர் குறித்த குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தவெக கொடி பாடலில், எம்ஜிஆர், அண்ணாவின் படங்கள் பின்னணியில் இடம் பெற்றிருந்தன. மேலும், செப்டம்பர் 15 அன்று அண்ணாவின் பிறந்த நாளன்று அவரை நினைவுகூர்ந்து விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், “அண்ணா, எம்ஜிஆருக்கு கட்-அவுட் வைப்பது நியாயமும் இல்லை. அண்ணா ஆரம்பித்த கட்சியும் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியும் ஏற்கெனவே தமிழகத்தில் உள்ளது. இவர்களை முன்னிறுத்தி வாக்கு கேட்பதாக அக்கட்சியினர் சொல்லிவிடக்கூடாது என்பதால் தவிர்த்திருக்கலாம்” என்கிறார் ப்ரியன்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் கட்-அவுட்களை வைத்திருப்பதாக ப்ரியன் கூறுகிறார்.

தமிழ் மன்னர்களுக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளதை விமர்சிக்கிறார், பத்திரிகையாளர் மணி

பட மூலாதாரம், 𝗧𝗩𝗞 𝗜𝗧 𝗪𝗜𝗡𝗚/X

படக்குறிப்பு, தமிழ் மன்னர்களுக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளதை விமர்சிக்கிறார், பத்திரிகையாளர் மணி

இதுதவிர, தமிழ்த்தாய், சேர, சோழர், பாண்டிய மன்னர்களுக்கும் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாநாட்டு பந்தலின் நுழைவுவாயிலில் சுதந்திர போராட்ட வீரர்கள், சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன், மன்னர் பெரும்பிடுகு முத்தரையர், தீரன் சின்னமலை, மன்னர் பூலித்தேவன், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன் உள்ளிட்டோரின் கட்-அவுட்களும் வைக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

“சேர, சோழ, பாண்டியர்களின் கட்-அவுட்களை வைத்திருப்பது, தமிழ் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விஷயமாக உள்ளது. கட்-அவுட்களில் இடம்பெற்றுள்ள சில தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்களை குறிப்பிட்ட சாதியினர் கொண்டாடுகின்றனர் என்பதற்காக அவர்களை சாதி ரீதியானவர்கள் என முத்திரை குத்துவது சரியில்லை.

தமிழ் மன்னர்களை முன்னெடுத்ததால் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழ்த் தேசியம் என்று இதைச் சொல்ல முடியாது. ஏனெனில், சீமான் பெரியாரை ஏற்றுக்கொள்ளவில்லை” என்கிறார், ப்ரியன்.

சிந்தனையில் தெளிவின்மையா?

ஆனால், மன்னர்களுக்கு கட்-அவுட் வைத்திருப்பது குறித்த ப்ரியனின் இந்தக் கருத்துடன் முரண்படும் பத்திரிகையாளர் ஆர். மணி, அதைக் கடுமையாக விமர்சிக்கிறார்.

“மன்னர்களுக்கு கட்-அவுட் வைத்தது அபத்தமாக இருக்கிறது. ஜனநாயகத்தில் மன்னர்களுக்கு எந்த வேலையும் இல்லை. இது, சிந்தனையில் தெளிவின்மையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

“எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என நினைத்தால் அவரால் வெல்ல முடியாது. தெளிவான பாதை இருக்க வேண்டும். யார் மனதும் கோணக்கூடாது என நினைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தால் அவர் படுதோல்வியைச் சந்திப்பார்,” என்று விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் மணி, ஒருவேளை அவருக்கு போகப் போக தெளிவு வரலாம் எனக் கருதுவதாகக் கூறுகிறார்.

விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியபோது

பட மூலாதாரம், TVK HQ

படக்குறிப்பு, விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியபோது

தமிழக வெற்றிக் கழகம் இந்த கட்-அவுட்கள் மூலம் உணர்த்த முயலும் செய்தி என்னவென்று பிபிசி தமிழிடம் பேசிய தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி, “இவை அனைத்தையும் பற்றி விஜய் இன்று மாநாட்டில் பேசுவார்,” என்று தெரிவித்தார்.

“பெரியார், அம்பேத்கர், காமராஜர் சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் போராடியவர்கள். அதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். விஜய் இந்தத் தலைவர்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்” என்றார்.

மேற்கொண்டு பேசியவர், “பெண் விடுதலை இல்லை என்றால் சமூக விடுதலை இல்லை. பெண்கள் அதிகாரத்திற்கு வந்தால்தான் சமூக விடுதலை கிடைக்கும். பெண் தலைவர்கள், போராளிகளை அடையாளப்படுத்தி, பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வியை வலியுறுத்தும் விதமாக அவர்களின் கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இந்த கட்-அவுட்கள் பிரதிபலிக்கும் செய்தியைப் பார்த்தால், அவை ஒரு “ஒட்டுமொத்த கலவையாக” இருப்பதாகவும், “அரசியலில் விஜயின் எண்ண ஓட்டம் என்னவென்பதைக் காட்டும் வகையில் இல்லாமல், அவர் குழப்பமான மனநிலையில் இருப்பதாகவே காட்டுவதாகவும்” கூறுகிறார் ப்ரியன்.

ஆனால், “இது கலவையாக இல்லை, ஒரு கொள்கையாக இருக்கிறது” என்று கூறும் லயோலா மணி, ஒவ்வொரு தலைவர் குறித்தும் விஜய் கூறும்போது அதன் நோக்கம் சென்று சேரும் எனவும், மன்னர்களை முன்னிலைப்படுத்தியதன் நோக்கத்தையும் அவர் மாநாட்டில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு

பட மூலாதாரம், TVK IT WING/X

மற்ற கட்சிகளுக்கு உணர்த்துவது என்ன?

மற்ற அரசியல் கட்சிகள் மீது மாநாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

“திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மீது தவெக மாநாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அக்கட்சியின் கொள்கைகள்தான் தீர்மானிக்கும்” என்கிறார் ப்ரியன்.

வக்பு வாரியம், சாதிவாரி கணக்கெடுப்பு, ஒரே நாடு-ஒரே தேர்தல் உள்ளிட்ட சமகால பிரச்னைகள் குறித்து அவருடைய நிலைப்பாட்டை வைத்துதான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார் அவர்.

“தனது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான் என விஜய் கூறியிருப்பதால், திமுகவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால்தான், தன்னை நிலைநிறுத்த முடிகிறதோ இல்லையோ, ஓரளவுக்குத் தாக்கத்தையாவது ஏற்படுத்த முடியும்” என்கிறார் பத்திரிகையாளர் மணி.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.