ஹிட்லரின் நாஜிப் படைகளை வீழ்த்த சர்ச்சில் பயன்படுத்திய ரகசிய ஆயுதம் – இவர் என்ன செய்தார்?
- எழுதியவர், கிளேர் மெக்ஹக்
- பதவி,
-
வின்ஸ்டன் சர்ச்சிலின் `உயர்குடி’ மருமகள் மற்றும் நம்பிக்கைக்குரிய பெண் பமீலா ஹாரிமேன் “அரசியலில் பாலியலை பயன்படுத்தி மிகுந்த செல்வாக்கைப் பெற்ற நபராக” கருதப்பட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், அவரை பற்றிய பார்வைகள் மாறவில்லை. சிலரின் பார்வையில் அவர் ஒரு புத்திசாலி, சிலருக்கு அவர் ஒழுக்கங்கெட்டவர், சிலரைப் பொறுத்தவரை அவர் வெறுக்கத்தக்கவர்.
பமீலா, பெரில், டிக்பி, சர்ச்சில், ஹேவர்ட், ஹாரிமேன் என அவர் ஆறு பெயர்களில் அழைக்கப்பட்டார். வாஷிங்டனில் செல்வாக்கு பெற்ற பிரிட்டனை சேர்ந்த உயர்குடிப் பெண் இவர். பிரான்சுக்கான அமெரிக்க தூதராக இருந்தவர். 20ஆம் நூற்றாண்டின் அரசியல் மற்றும் கலாசாரத்தில் பல பிரபலங்களின் அறிமுகங்களைப் பெற்றவர்.
பமீலாவுக்கு 20 வயதாக இருந்தபோது, அவருடைய மாமனார் வின்ஸ்டன் சர்ச்சில் அவரை “மிகவும் விருப்பமான மற்றும் உறுதியான ரகசிய ஆயுதமாக” கருதினார் (புதிய சுயசரிதையில் குறிப்பிடப்பட்ட தகவல்).
இரண்டாம் உலகப் போரின்போது, மது, உணவு, வசீகரம் ஆகியவற்றால் முக்கியமான அமெரிக்க பிரமுகர்களைக் கவர்ந்ததன் மூலம், அவர்களை நாஜிகளுக்கு எதிரான முடிவுகளை எடுக்க வைத்தார். இது பிரிட்டிஷுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஏற்படுத்தியது.
பின்னர், கென்னடி குடும்பம், பில் கிளிண்டன், நெல்சன் மண்டேலா, ட்ரூமன் கபோட் உள்ளிட்ட செல்வாக்கு மிக்க நபர்களுடன் அவர் உரையாடியது அவரின் செல்வாக்கை அதிகரித்தது.
பமீலாவை பற்றிய மாறுப்பட்ட கருத்துகள்
பாரீஸ் ரிட்ஸ் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்தும்போது பமீலா ஹாரிமனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் மரணித்து 27 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் அவர் மீதான ‘கலகம் செய்பவர்’ என்னும் பிம்பம் இன்னும் மாறவில்லை.
சோனியா பர்னெல் எழுதிய பமீலாவின் வாழ்க்கை வரலாறு (Kingmaker: Pamela Harriman’s Astonishing Life of Power, Seduction, and Intrigue) புத்தகத்திற்கு மாறுபட்ட எதிர்வினைகள் வந்தது. எதிர்ப்பு, ஆதரவு எனக் கலவையான எதிர்வினைகள் வந்ததோடு மட்டும் இல்லாமல் அது விவாதத்திற்கும் வித்திட்டது.
பிரிட்டன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் பலர் இந்தப் புத்தகத்தைப் பாராட்டியுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை, பமீலா தைரியமானவர், லட்சியவாதி. புத்திசாலித்தனத்துடன் வாழ்ந்த ஒரு செல்வாக்குமிக்க பெண்.
ஆனால் பலரின் பார்வையில் இந்தப் புத்தகம், “ஆதாயத்திற்காக பாலுறவைப் பயன்படுத்திய ஒரு பெண்ணை தேவையில்லாமல் புகழ்கிறது.” பமீலாவின் அரசியல் தாக்கம் மிகைப்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த 1920இல் பண வசதி இல்லாத `உயர்குடி’ (baron) தந்தைக்குப் பிறந்து, “பணக்காரக் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ளும்” நோக்கத்துடன் பமீலா வளர்க்கப்பட்டார். 1938இல் தனது முதல் லண்டன் “சீசனில்” கணவரைத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டார்.
லண்டன் “சீசன்” என்பது வசந்த காலத்திலும் கோடையின் தொடக்கத்திலும் பிரிட்டிஷ் உயர்குடிகளும் பிரபுக்களும் விருந்துகள், கூட்டங்கள் போன்ற சமூக நிகழ்வுகளில் ஈடுபடும் ஒரு காலகட்டம். இந்த சீசனில் இளம் பெண்கள், இளம் ஆண்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தங்களுக்கு ஏற்ற, சாத்தியமான திருமணப் பொருத்தங்களைத் தேடுவதற்கான ஒரு காலமாகவும் இருந்தது.
பிரபலமான மிட்ஃபோர்ட் சகோதரிகளில் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்யும் குணமுடைய நான்சி மிட்ஃபோர்ட், பதின் வயது பமீலாவை “சிவப்புத் தலை முடியுடன் இருக்கும் சிறிய உருவம்” என்று விவரித்தார். அடுத்த ஆண்டு, பிரபலமான வின்ஸ்டனின் ஒரே மகனான ராண்டால்ஃப் சர்ச்சில், `டேட்டிங்’ செய்ய அவரைத் தொலைபேசியில் அழைத்தார்.
அந்த நேரத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போரில் தான் கொல்லப்படுவோம் என ராண்டால்ஃப் உறுதியாக நம்பினார். எனவே ஒரு மகனை பெற்றுக் கொள்ள ஆர்வமாக இருந்தார். பமீலாவுடனான இரவு உணவு சந்திப்புக்குப் பிறகு, அவர் பமீலாவிடம் நேரடியாக விஷயத்தை சொன்னார்.
பர்னெல் தனது புத்தகத்தில் இதுகுறித்து: “அவர் பமீலாவை காதலிக்கவில்லை… ஆனால் பமீலா அவரின் குழந்தையைச் சுமக்கும் அளவுக்கு ஆரோக்கியமாக இருந்ததாக நம்பினார்” என்று எழுதி உள்ளார்.
தனது பெற்றோருடனான மந்தமான வாழ்க்கையில் இருந்து தப்பிக்க நினைத்த பமீலா, ராண்டால்ஃபின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டார்.
பமீலா எதிர்பார்த்த ஆடம்பர வாழ்க்கை அமைந்தாலும், அவரின் திருமண தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சி அளிக்கவில்லை. ராண்டால்ஃப் குடித்துவிட்டு பமீலாவை மோசமாக நடத்தினார். அவர்களுக்கு வின்ஸ்டன் பிறந்த பின்னரும் பமீலாவை இழிவாக நடத்தினார். ஆனால் மே 1940இல் அவரது மாமனார் பிரதமர் ஆனவுடன், பமீலா ஆலோசனை அறையில் இடம்பிடித்தார்.
“அரசியலை உள்ளே இருந்து பார்க்கும் வாய்ப்பு என்னைப் போல் யாருக்கும் கிடைக்கவில்லை” என்று அவர் பின்னர் கூறினார்.
அந்த நேரத்தில் நாஜி போர் இயக்கத்திற்கு எதிராக பிரிட்டன் தனியாக நின்றது. சர்ச்சிலுக்கு அவசரமாக டிரான்ஸ் அட்லாண்டிக் (transatlantic aid) உதவி தேவைப்பட்டது, அது உடனடியாகக் கிடைக்கவில்லை.
பாரிஸின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்க வாக்காளர்கள் நேச நாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் முன்பைவிடக் குறைவான ஆர்வத்துடன் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வந்தன.
பமீலா அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருந்தார். “அமெரிக்கா போரில் இறங்கினால், போர் பாதுகாப்பாக நடக்கும். அவர்கள் போரில் இல்லாத வரை, பிரிட்டனுக்கு அது ஆபத்துதான்” என்று அவர் கருதினார்.
சர்ச்சிலின் கவனம் தன் மருமகள் மீது திரும்பியது. அவர் பமீலா தனது கைக்குழந்தையுடன் இருக்கும் அழகிய படத்தை அமெரிக்காவின் மிகப் பெரிய, பிரபல இதழான `லைஃப்’ இன் அட்டைப் படமாக பிரசுரிக்க பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் புகைப்படத்தை பிரிட்டன் அரச குடும்பத்தின் விருப்பமான புகைப்படக் கலைஞர் செசில் பீட்டன் எடுத்தார்.
இதற்காக, சர்ச்சிலின் கூட்டாளியான லார்ட் பீவர்ப்ரூக் பமீலாவுக்காக புதிய ஆடைகளைப் பெற நிதியளித்தார்.
பிரிட்டனுக்கு ரூஸ்வெல்ட் அனுப்பிய முதல் தூதரான ஹாரி ஹாப்கின்ஸை பமீலா முகஸ்துதி செய்து மகிழ்வித்தார். பமீலாவை ஹாரி ஹாப்கின்ஸ் “சுவையானவர்” என்று குறிப்பிட்டார்.
கடந்த 1941ஆம் ஆண்டு மார்ச் மாதம் செல்வந்தரான அவெரெல் ஹாரிமேன் லண்டனுக்கு ஒரு உதவித் திட்டத்தை நிர்வகிப்பதற்கு வந்தார். அந்த உதவித் திட்டத்தை சர்ச்சில் உயிர்க்காக்கும் கருவியாகக் கருதினார். எனவே பமீலா அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார்.
பின்னர் 21 வயதான பமீலா, திருமணமான 49 வயது ஹாரிமானுடன் உறவு வைத்துக்கொண்டார். ஹாரிமான் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் என்பது பற்றி பிரதமர் சர்ச்சில் ஆவலுடன் பமீலாவிடம் கேட்டறிவார்.
தி டைம்ஸ் ஊடகத்திற்காக பமீலாவின் வாழ்கை வரலாறு புத்தகமான கிங்மேக்கரை மதிப்பாய்வு செய்த ரோஜர் லூயிஸ், “பமீலா தனது மாமனாருக்கு முக்கியமான புத்திக்கூர்மையான திட்டங்களை வகுத்தார் என்ற கருத்தை நிராகரித்தார். மேலும் பமீலாவை ‘ஒரு தீவிர பாலியல் தொழிலாளி” என்று விவரிக்கிறார்.
கனெக்டிகட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரும், `ரூஸ்வெல்ட்டின் லாஸ்ட் அலையன்ஸ்’ என்ற நூலின் ஆசிரியருமான ஃபிராங்க் காஸ்டிக்லியோலா பிபிசியிடம் பேசுகையில், “போர்க் காலத்தில் முக்கியத் தகவல்களைக் கொடுத்த பமீலா சர்ச்சிலுக்கு மிகப் பெரிய சொத்தாக இருந்தார். அவரை விமர்சிப்பவர்கள் வரலாற்றை அறியாதவர்கள். பெண் வெறுப்புணர்வு உடையவர்கள்” என்றார்.
ஹாரிமனின் பாலியல் சுரண்டல்களை பர்னெல் மறுக்கவில்லை, கிங்மேக்கர் புத்தகத்தில் “பமீலா அவரது சகாப்தத்தில், அரசியலுக்காக பாலியலைப் பயன்படுத்தி மிகுந்த செல்வாக்கைப் பெற்ற பெண்ணாக (courtesan) அறியப்பட்டார்” என்பதை நினைவு கூர்ந்தார்.
அவரது காதலர்களின் பட்டியலில் சிபிஎஸ் ஒளிபரப்பாளர் (“திஸ் இஸ் லண்டன்”) எட்வர்ட் ஆர் முர்ரோ, அமெரிக்க குண்டுவீச்சுப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஃப்ரெட் ஆண்டர்சன், உளவுத்துறை அதிகாரி கர்னல் ஜாக் விட்னி, ஜெனரல் டுவைட் டி ஐசன்ஹோவரின் ஊழியர்களில் ஒருவரான பில் பேலி ஆகியோர் அடங்குவர்.
பமீலா சர்ச்சிலுக்கு எந்த மாதிரியான தகவல்களைக் கொடுத்தார், பமீலா தன்னுடன் நெருக்கமாக இருந்த சக்தி வாய்ந்த அமெரிக்கர்களிடம் என்ன கேட்டார் என்பதெல்லாம் தெரியவில்லை.
ஆனால், பர்னெல் தனது புத்தகத்தில், “அவரது தலையணைப் பேச்சுகள் தலைவர்களின் காதுகளை எட்டியது. இரு தரப்பிலும் உயர்மட்ட கொள்கையை அது பாதித்தது” என்று எழுதியுள்ளார்.
தனது மதிப்பாய்வில், லூயிஸ் இதை “மிகைப்படுத்தப்பட்டது” என்று முத்திரை குத்துகிறார். இருப்பினும் ராண்டால்ஃப் சர்ச்சில் தனது மனைவி ஹாரிமனுடன் உறவு வைத்துக் கொண்டிருப்பதை அறிந்த போது, அதற்கு உடந்தையாக இருந்ததற்காக அவர் தனது பெற்றோரைத் திட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து செய்த பமீலா
போருக்குப் பிறகு கணவரை விவாகரத்து செய்து, பமீலா பாரிஸுக்கு சென்றார். அங்கு ஒரு காஸ்மோபாலிட்டன் குடியிருப்பின் பகுதியாக ஆனார். இளவரசர் அலி கான், கியானி ஆக்னெல்லி, எலி டி ரோத்ஸ்சைல்ட் உள்படப் பல பணக்காரர்களுடன் உறவில் இருந்தார்.
அவர்கள் பமீலாவின் ஆடம்பர வாழ்க்கைக்கான ஆதராமாக இருந்தார்கள். ஆனால் யாரும் அவரைத் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை.
பமீலா 40 வயதை நெருங்கிய போது, ஹாலிவுட்டில் வெற்றிபெற்ற தயாரிப்பாளராக அறியப்பட்ட லேலண்ட் ஹேவர்டை அவரது மனைவியைக் கைவிட்டு வருவதற்குச் சம்மதிக்க வைத்தார்.
`ஹார்பர்ஸ் பஜார்’ இதழில் 1959 அக்டோபரில் எழுத்தாளர் ட்ரூமன் கபோட் விவரித்த “இன்டர்காண்டினென்டல் கோவே ஆஃப் ஸ்வான்ஸின்” (the intercontinental covey of swans) பட்டியலில் பமீலா ஹேவர்ட் (அப்போது அவரது பெயர்) மற்றும் லேடி ஸ்லிம் கீத் (பிரிட்டிஷ் வங்கியாளரும் உயர்குடி அதிகாரியுமான கென்னத் கீத்தை திருமணம் செய்துகொண்டவர்) ஆகியோரின் பெயர் இருந்தது.
அந்த சமூகத்தில் வாழ்ந்த மிகவும் பணக்கார, அழகான பெண்கள் கபோட்டை ரசித்தனர். அவர்களின் ரகசியங்களை பொதுவெளியில் போட்டுடைக்கும் வரை அவரை நம்பிக்கைக்குரிய நபராகவும் அவர்கள் வைத்திருந்தனர்.
ஹேவர்டுக்கு விசுவாசத்தோடு இருந்த பமீலா
லாரன்ஸ் லீமர், Capote’s Women: A True Story of Love, Betrayal and a Swan Song for an Era என்ற புத்தகத்தை எழுதியவர். லாரன்ஸை பொறுத்தவரை கபோட் குறிப்பிட்ட ஸ்வான்ஸில், பமீலா சந்தேகத்திற்கு இடமான பிம்பம் என்கிறார்.
லாரன்ஸ் லீமர் பிபிசியிடம் கூறுகையில், “ஒரு ஆண் மகனை வீழ்த்தி, தன் வலையில் சிக்க வைப்பதில் பமீலாவுக்கு எந்த அவமானமும் இருக்காது. ஆனால் அவர் சுவாரஸ்யமானவர், வசீகரமானவர், அவர் ஒரு விதிவிலக்கான மனைவியாக மாறினார்” என்று குறிப்பிட்டார்.
பமீலா உடனான திருமணத்தைத் தொடர்ந்து ஹேவர்டின் தொழில் மற்றும் உடல்நலம் மோசமடையத் துவங்கியது. இருப்பினும் அவர் தன்னுடைய கணவருக்கு உண்மையாகவே நடந்து கொண்டார்.
தன்னுடையஹேவர்டுக்கும் அவரின் முதல் மனைவிக்கும் பிறந்த ப்ரூக் ஹேவர்ட் சுயசரிதை நூலான ஹெவைரிலும் தன்னுடைய சித்தி பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
நடிகை ப்ரூக் ஹேவர்ட் அவருடைய புத்தகத்தில் தன்னுடைய சித்தி, அவடைய குடும்ப நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக கூறுகிறார். ஆனால் பமீலாவின் குண நலன்களையும் அவர் புரிந்து கொண்டிருந்தார். “பமீலாவுக்கு ஒரு சிறந்த குணம் இருந்தது: அவர் நேசித்த ஆண்களை அவர் புரிந்துகொண்டார்” என்று அவர் எழுதினார்.
வாழ்க்கையின் புதிய கட்டம்
கடந்த 1971 வசந்த காலத்தில் தன்னுடைய கணவரின் மரணத்திற்குப் பிறகு, பமீலா “மிகவும் மகிழ்ச்சியற்றவராக” மாறினார் என்று அவரது அண்டை வீட்டாரான பத்திரிகையாளர் லல்லி வெய்மவுத் கூறினார்.
அவரது தாயார், தி வாஷிங்டன் போஸ்டின் ஆசிரியர் கேத்தரின் கிரஹாம் (1917-2001), ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார், மேலும் வெய்மவுத் பமீலாவை அவருக்குப் பதிலாக வருமாறு அழைத்தார்.
அந்த விருந்தில்தான் முந்தைய ஆண்டு துணையாக இருந்த அவெரெல் ஹாரிமேனை பமீலா சந்தித்தார். இருவரும் விரைவில் தங்கள் உறவை மீட்டெடுத்தனர், சில மாதங்களுக்குப் பிறகு திருமணமும் செய்து கொண்டனர்.
“அவெரெல் பமீலாவை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே பமீலா அந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார் என்று ஒரு ஊகம் பரவலாக இருந்தது” என்று பர்னெல் எழுதினார்.
பமீலா அவரது வாழ்க்கையின் கடைசி இருபது ஆண்டுகளில் வாஷிங்டனில் அதிகாரத்தைப் பெற்றார். 1980 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரொனால்ட் ரீகன் மகத்தான வெற்றியைப் பெற்ற பிறகு, அவரது கணவரின் ஆதரவுடன், பமீலா ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு நிதியளித்து ஊக்குவிக்கத் தொடங்கினார்.
பமீலா நிதியளித்தவர்களில் இரண்டு எதிர்கால அதிபர்கள் இருந்தனர். அவர்கள், டெலாவேர் மாகாணத்தின் அப்போதைய செனட்டர் ஜோ பைடன் மற்றும் ஆர்கன்சாஸ் ஆளுநர் பில் கிளிண்டன்.
பமீலாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கிளின்டன் பிரான்சுக்கான தனது அமெரிக்க தூதராக அவரை நியமித்தார்.
பமீலா தனது வயதான கணவர் ஹேரிமேனுக்கு விசுவாசமான மனைவியாக இருந்தபோதும், தி வாஷிங்டன் போஸ்டின் நீண்டகால ஆசிரியரான பென் பிராட்லீ அவரை, மிகக் கடுமையாக விமர்சித்ததாக பர்னெல் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
வரலாற்றுப் புனைகதை எழுத்தாளரும் கட்டுரையாளாருமான தாமஸ் மல்லன், தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்காக கிங்மேக்கர் நூலை மதிப்பாய்வு செய்துள்ளார். அதில், “இந்தப் புத்தகம், கவர்ச்சிகரமாக, சுவாரஸ்யமாக இருந்தாலும், அது, மிக முக்கியமான விஷயத்தை ஆழமாக, உணர்வுபூர்வமாகக் கையாளவில்லை. அதில் ஓர் இயந்திரத்தன்மை தெரிகிறது,” என்று விமர்சித்துள்ளார்.
தனது புத்தகம் மீதான “சிலரின் வெறுப்புமிக்க அணுகுமுறைகள்” குறித்துப் பேசிய பர்னெல், இதன்மூலம் “பமீலா அனுபவித்தவற்றில் ஒரு சிறு பகுதியை” தானும் அனுபவித்ததைப் போல் உணர்வதாக பிபிசியிடம் கூறினார். இப்போது காங்கிரஸ் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது ஆவணங்கள், கடிதங்களைப் படித்த பிறகு, பர்னெல் பமீலாவின் வாழ்க்கை மீது மேன்மேலும் ஆர்வம் கொண்டதாகக் கூறினார்.
லீமர் குறிப்பிடுவது போல், “இது உண்மை. நிறைய நபர்களுடன் உறவு வைத்துக்கொண்ட ஒரு பெண் அசிங்கமாகப் பேசப்படுகிறார். ஆனால், ஒரு ஆணாக இருந்தால் விஷயம் அப்படியில்லை. வேறொரு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணைப் பற்றி எந்த விதிமுறைகளின் அடிப்படையில் நீங்கள் தீர்மானத்திற்கு வருவீர்கள்?
சிறு வயதில் இருந்தே அதிகாரத்தின் பக்கம் பமீலா தெளிவாக ஈர்க்கப்பட்டார். மேலும், அவர் மிகக் குறைவாகப் படித்தவராக இருந்த காரணத்தால், அதைச் சுயமாகத் தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது.”
கடந்த 1992இல் நியூயார்க் மேகசீன் இதழில் மைக்கேல் கிராஸிடம் பேசுகையில், பமீலா தன்னைப் பற்றிய ஒரு சுய மதிப்பீட்டைக் குறிப்பிட்டுள்ளார். அதில்,
“அடிப்படையில் நான் திரைமறைவில் வேலை செய்யும் பெண். நான் இப்படித்தான் எப்போதும் இருந்துள்ளதாக நம்புகிறேன். மனிதர்களை நான் பின்னாலிருந்து இயக்கவே விரும்புகிறேன். என்னை முன்னிலையில் நிறுத்திக்கொள்ள நான் விரும்பியதில்லை. நான் நேசித்த இரண்டு கணவர்களுக்கு மனைவியாக வாழ்ந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு