லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன்

லெபனானை சேர்ந்த 11 வயது முகமது கடும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.

“நான் என் சகோதரருடன் பால்கனியில் இருந்தேன். மொபைல் போனில் விளையாடிக் கொண்டிருந்தோம். அம்மாவும் அப்பாவும் சமைத்துக் கொண்டிருந்தனர். திடீரென இரண்டு ராக்கெட்டுகள் பறந்துவரும் சத்தம் கேட்டது. எங்கள் பக்கத்தில் உள்ள கட்டடத்தை தாக்கியதாக நினைத்தோம்” என்கிறார், சிறுவன் முகமது.

பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுக்கவில்லை என மக்கள் கூறுகின்றனர். ஆனால், எச்சரிக்கை விடுத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

ஹெஸ்பொலா தலைவரை தான் குறிவைத்ததாகவும் பிபிசியிடம் இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் இஸ்ரேல் எச்சரிக்கை விடுக்கவில்லை.

இதில், குறைந்தது 71 பேர் உயிரிழந்தனர். தெற்கு லெபனானில் உள்ள முகமதுவின் வீடும் தாக்கப்பட்டது. முகமதுவின் தந்தையும் சகோதரரும் இதில் உயிரிழந்தனர். அவருடைய தாய்க்கு படுகாயம் ஏற்பட்டது. முகமது பால்கனியில் இருந்ததால் அவர் உயிர் பிழைத்தார்.

பலருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால், லெபனானில் சுகாதார மையங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

“நாங்கள் 2006-ல் நடந்த போரை பார்த்துள்ளோம். 1975 முதல் பல போர்களை கண்டுள்ளோம். பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு 50 சதவிகிதத்திற்கும் மேல் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இப்போது பலருக்கும் ஏற்படும் காயங்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை ஆழமான காயங்களாகும்” என்கிறார், கைட்டோவிய் மருத்துவமனை இயக்குநர் பியர் யாரெட்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு முகமது தன் தாயுடன் மீண்டும் இணைய சில வாரங்களாகும். செல்வதற்கு எந்த வீடும் இல்லாத நிலையில், அவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.