கோவை: எரிவாயுக் குழாய், மின் கோபுர திட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு – பின்னணி என்ன?

விவசாயம், விவசாயிகள், கோவை

படக்குறிப்பு, கோவை மாவட்டத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன.
  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

‘‘நிலம் உங்களுடையதுதான்; ஆனால் அதில் நீங்கள் விவசாயம் செய்யக்கூடாது; நாங்கள் நிலத்தை எடுக்கவும் மாட்டோம்; இழப்பீடும் தர மாட்டோம்…இப்படி ஒரு நிபந்தனையை விதித்தால், ஒரு விவசாயி என்னதான் செய்ய முடியும்?’’ என்று கேட்கிறார் விவசாயிகள் சங்கத்தின் (சாதி மதம் கட்சி சார்பற்றது) மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி.

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வீடுகளுக்கு குழாய் மூலமாக எரிவாயு வழங்கும் ‘பைப் லைன் கேஸ்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கும், எரிவாயு வாகனங்களுக்கான பங்க் அமைப்பதற்கும் குழாய்களைப் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்த எதிர்ப்பு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுகிறது.

‘‘எரிவாயு குழாய் பதிக்கும் தூரத்தை 100 கி.மீ. லிருந்து 60 கி.மீ. ஆகக் குறைக்கலாம். அரசு நிலம், ஓஎஸ்ஆர் நிலம், விவசாயம் இல்லாத நிலம் என மாற்று வழி இருந்தால் கொண்டு செல்லலாம். போடவே கூடாது என்பது வளர்ச்சிக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும்.’’ என இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கோவை ஜியாகிரபிகல் ஏரியா மேனேஜர் கார்த்திக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேற்கு மாவட்டங்களில் என்ன நடக்கிறது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கொச்சி – பெங்களூரு எரிவாயு குழாய் இணைப்புத் திட்டம்

கொச்சி – பெங்களூரு எரிவாயுக் குழாய் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் பாதையில் தமிழ்நாட்டில் உள்ள கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் வீடுகள், எரிவாயு பங்க்குகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு தருவதற்கான பணிகள் நடக்கின்றன.

கேரள மாநிலம் கொச்சி முதல் தமிழ்நாட்டில், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக பெங்களூரு வரை குழாய் பதிக்கும் பணி, 15 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது. அப்போது விவசாய நிலங்களின் வழியே இதைக் கொண்டு செல்லக்கூடாது என்று கடும் போராட்டங்கள் வெடித்தன. விவசாயிகள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

‘‘அந்த வழக்கில் ஐகோர்ட்டில் அப்போதிருந்த நீதியரசர் சந்துரு, விவசாயிகளிடம் கலந்து பேசி சுமூகமாக முடிக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் மக்கள் போராட்டத்தைக் கையிலெடுத்தோம். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இந்த திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை மூலமாக நிலமெடுத்து, நெடுஞ்சாலை ஓரமாக கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.’’ என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கந்தசாமி.

2000-ஆவது ஆண்டுக்கும் முன்பே, கொச்சி துறைமுகத்திலிருந்து கரூர் வரையிலும் குழாய் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு செல்வதற்கான குழாய் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு மூலமாக இயங்கும் வாகனங்களே அதிகம் வரும் என்பதால்தான், குழாய்களில் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகச் சொல்கிறார் ‘கெயில்’ நிறுவனத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர்.

விவசாயம், விவசாயிகள், கோவை

பட மூலாதாரம், Kandasamy

படக்குறிப்பு, விவசாயிகள் சங்கத்தின் (சாதி மதம் கட்சி சார்பற்றது) மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி

இப்போது எதிர்ப்பு ஏன்?

“இந்தியாவில் ஒரு லட்சம் கி.மீ., தூரத்துக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு கொடுக்கும் திட்டத்துக்காக குழாய் பதிக்கப்படுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 4,000–5,000 கி.மீ., துாரத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது” என்று தெரிவித்த அந்த அதிகாரி, பெங்களூருவிலிருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக சேலம் வரை குழாய் பதிக்கப்பட்டுவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்தக் குழாய் பதிப்பதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் அந்த மாவட்டங்களுக்கான ஐ.ஓ.சி.எல். ஜியாகிரபிகல் ஏரியா மேனேஜர் சுரேஷ்.

ஆனால், சேலத்தில் மட்டும் விவசாய நிலங்கள் வழியாக குழாயைக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை ஒப்புக் கொள்ளும் ‘கெயில்’ நிறுவன துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், அங்கே சரியான இழப்பீடு கொடுத்ததால் சுமூகமாக பணிகள் முடிந்து விட்டதாக பிபிசி தமிழிடம் கூறினார்.

விவசாயம், விவசாயிகள், கோவை

கோவையில் இந்தத் திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பதற்கு உரிய இழப்பீடு கிடைக்காததுதான் காரணம் என்கிறார் விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கந்தசாமி.

‘‘நிலத்தை விலைக்கு வாங்கிவிட்டால் பிரச்னையில்லை. அதாவது ROU (Right of User of Land) என்ற அடிப்படையில், ‘நிலம் உங்களுடையதுதான், அதில் குழாய் மட்டும் நாங்கள் கொண்டு செல்வோம் என்று கூறுகின்றனர். நிலத்தைப் பயன்படுத்த வழிகாட்டி மதிப்பில் 10% இழப்பீடு தருகின்றனர். ஆனால் அந்தக் குழாயைக் கடந்து நாங்கள் பைப் லைன் அமைக்கக் கூடாது. ஆழமான வேர் உள்ள பயிர்களை நடக்கூடாது என்று நிபந்தனை விதிக்கின்றனர்,” என்கிறார் அவர்.

“அந்தக் குழாயில் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு நில உரிமையாளரான விவசாயிதான் பொறுப்பு. வழக்குப் பதிவு செய்யப்பட்டால், ‘அந்தப் பாதிப்புக்கு நான் பொறுப்பில்லை, நான் நிரபராதி’ என்று நிரூபிக்கும் பொறுப்பும் விவசாயிக்கே உள்ளது. அதை நிரூபிக்க முடியாவிட்டால் ஆயுள் தண்டனை பெற வேண்டும். அதனால்தான் இதை எதிர்த்து 15 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்,” என்று போராடியதற்கான காரணத்தை கந்தசாமி விளக்கினார்.

கெயில் நிறுவனம் கூறுவது என்ன?

ஆனால் குழாய் எரிவாயு திட்டத்தால் இப்போது விவசாயிகளுக்கு அதிக பாதிப்பில்லை என்று கூறும் ‘கெயில்’ நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், “கேரளா-தமிழக எல்லையிலிருந்து 294 கி.மீ., தூரம் கடந்து கர்நாடகா எல்லை வரை குழாய் எரிவாயு திட்டத்துக்கான பிரதான குழாய் பதிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. விவசாய நிலங்களை 99% வரை நாங்கள் தவிர்த்து விட்டோம். சேலம் மாவட்டத்தில் மட்டும்தான், ஒரு பகுதியில் விவசாய நிலம் எடுக்கப்பட்டது. அதற்கும் இழப்பீடு தரப்பட்டு விட்டது. பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே இப்போது குழாய் பதிக்கப்பட்டு வருகிறது,” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“கோவையைப் பொருத்தவரை, எரிவாயு குழாய் பதிக்கப்படும் விளைநிலங்களில் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதால்தான் முழுமையாக இழப்பீடு வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாகவே ROU அடிப்படையில் வழிகாட்டி மதிப்பில் 10 சதவீத இழப்பீடு கொடுக்கப்பட்டது” என்று அவர் கூறினார். ஆனால், இதற்கான கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி அவர் ஏதும் கூறவில்லை.

குழாய் எரிவாயு திட்டத்தில் குழாய் கீழே பதிக்கப்பட்டு, ஆழமான வேருள்ள பயிர் நடக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபமாக கோவையில் விவசாய நிலங்களில் தமிழக அரசின் மின் பகிர்மானக் கழகத்தால், உயர்மின் அழுத்த கோபுரம் (Tower Line) அமைத்து, உயரமான மரங்களை, பயிர்களை வளர்க்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

விவசாயம், விவசாயிகள், கோவை

படக்குறிப்பு, விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உயர் மின் அழுத்த கோபுரம்

உயர் மின் அழுத்தக் கோபுரத்தால் பிரச்னை

அதிலும் நகரமயமாகி வரும் கோவை மாவட்டத்தில், இப்போதும் விவசாயம் நடந்து வரும் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள பேரூர், மாதம்பட்டி, மேல் சித்திரைச்சாவடி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, மத்வராயபுரம் மற்றும் செம்மேடு ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கப்படுவதாக அடுத்த பிரச்னை வெடித்துள்ளது

‘‘கெயில் நிறுவனம் குழாய் பதிக்க ROU (Right of User of Land) என்ற முறையில் வழிகாட்டி மதிப்பில் இழப்பீடு கொடுத்தது. இப்போது தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம், ROW (Right of Way) என்ற முறையில், அதே 10 சதவீத இழப்பீடை மட்டுமே தருகிறது. அதிலும் டவர்லைனின் 4 கால்கள் இருக்கும் அரை சென்ட் பகுதிக்கு மட்டும் தரப்படுகிறது. மின் கம்பிகள் செல்லும் பாதைக்கு எந்த இழப்பீடும் இல்லை.’’ என்கிறார் கந்தசாமி .

மேலும் அவர் கூறுகையில், ‘‘அந்த டவர்லைனுக்குக் கீழே மரங்கள் வளர்க்கக்கூடாது; வளர்க்கவும் முடியாது. இதைப் பயன்படுத்த சொற்ப இழப்பீடைக் கொடுத்து விட்டு அதை நில ஆவணமான அடங்கலில் ஏற்றி விடுகின்றனர். அதனால் அந்த நிலத்தை விற்கவும் முடியாது. இந்த மின் அழுத்த கோபுரங்களால் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது என்றால், ஒரு விவசாயியிடம் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தையுமே விற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை மாற்று வழியில் கொண்டு செல்ல வழியிருந்தும் அதைச் செய்யவில்லை. இன்னும் எவ்வளவு விவசாய நிலம் பாதிக்குமென்று தெரியவில்லை. இதன் திட்ட அறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டால் அதையும் தர மறுக்கிறார்கள்.’’ என்றார்.

இதுகுறித்து, தமிழக அரசின் நில நிர்வாக ஆணையரகத்தில் பிபிசி தமிழ் கேட்டதற்கு பதிலளித்த உயரதிகாரி ஒருவர், ‘‘அரசின் உத்தரவுப்படி, டவர் அமைக்கும் இடத்துக்குரிய முழு இழப்பீட்டுத் தொகையும், மின் கம்பிகள் செல்லும் பகுதிக்கு அதில் 20 சதவீதத் தொகையும் வழங்கப்பட வேண்டும். ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இப்படித்தான் இழப்பீடு தரப்பட்டுள்ளது. கோவையில் தராதது குறித்து, மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டு நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்படும்.’’ என்றார்.

அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலங்களுக்கு, முழு இழப்பீடு கொடுத்த பின்னும், அந்த நிலங்களைப் பயன்படுத்திக் கொள்ள விவசாயிகள் அனுமதிக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கூடுமானவரை உயர் மின் அழுத்த கோபுரங்களை, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலங்களில் கொண்டு செல்ல அறிவறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி.

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து வாரியத்தின் உயரதிகாரிகளிடம் பேசியிருப்பதாகத் தெரிவித்தார், மின் பகிர்மானக் கழகத்தின் கட்டுமானப் பிரிவின் கோவை வட்டத்தின் அதிகாரி ஒருவர்.

ஆனால், சம்பிரதாயத்துக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினால் உரிய இழப்பீடு கிடைக்காது என்று பிபிசி தமிழிடம் தெரிவித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சண்முகம், ‘‘எங்களின் போராட்டத்தால்தான், திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ் பென்னாத்துார் ஒரு தாலுகாவில் மட்டும் அரசு எடுத்த நிலங்களுக்கு 250 கோடி ரூபாய் இழப்பீடு பெற முடிந்தது. ஒரு தென்னைக்கு ரூ.37,500 வாங்கினோம். சேலம், நாமக்கல் சங்ககிரி பகுதிகளிலும் அதிகளவு இழப்பீடு வாங்கியிருக்கிறோம்.’’ என்றார்.

விவசாயம், விவசாயிகள், கோவை

பட மூலாதாரம், P.Shanmugam

படக்குறிப்பு, விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம்

விவசாயிகள் எதிர்ப்பால் கைவிடப்பட்ட சிப்காட் திட்டம்

அன்னுாரில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்க 3864 ஏக்கர் நிலமெடுக்க, கடந்த 2022 அக்டோபர் 10 ஆம் தேதியன்று தொழில் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. உடனடியாக அங்கு பெரும் போராட்டம் வெடித்தது. அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், பாரதிய ஜனதா என பல்வேறு கட்சிகளும் ஓரணியில் அதற்கு ஆதரவு தெரிவித்தன.

‘‘விவசாயிகள் எதிர்ப்பு காரணமாகவே, அந்த திட்டத்தையே கைவிட்டு விட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது.’’ ’’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ‘நமது நிலம் நமதே’ விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஓதிச்சாமி.

‘‘இப்போது நில வங்கி என்ற பெயரில், தேவையிருந்தாலும் இல்லாவிட்டாலும் நிலத்தை எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதிலும் முதலில் குறி வைக்கப்படுவது விவசாய நிலம்தான்.’’ என்கிறார்.

விவசாயிகளின் கருத்தை மறுக்கும் ஐ.ஓ.சி.எல்., அதிகாரி கார்த்திக், ‘‘ஒரு வகையில் இத்தகைய திட்டங்களால் விவசாயம் 100 சதவீதம் பாதுகாக்கப்படுகிறது. இந்த திட்டங்கள் வந்து விட்டால், அந்த நிலத்தில் விவசாயம் மட்டும்தான் செய்ய முடியும். கட்டடம் கட்ட முடியாது; டிரில் போட முடியாது. எல்லா விவசாயிகளும் இந்த திட்டங்களை எதிர்ப்பதில்லை.’’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு