கர்நாடகா, தலித், சாதி வன்முறை

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், இம்ரான் குரேஷி
  • பதவி, பிபிசி இந்திக்காக, பெங்களூருவிலிருந்து

பத்தாண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் தலித் மக்களுக்கு எதிரான ஒரு வன்முறைச் சம்பவம் நடந்தது. அது அம்மாநிலத்தையே உலுக்கியது.

தற்போது இந்த வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு சிறைத்தண்டனையும் விதித்து கர்நாடகாவில் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனது 172-பக்க தீர்ப்பில், கொப்பல் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு சிறப்பு நீதிபதி சி.சந்திரசேகர், 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி, கங்காவதி ஊரகக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருகும்பி கிராமத்தில் பட்டியல் பிரிவு மக்களுக்கு எதிராக நடந்தது, ‘சாதாரண கும்பல் வன்முறையை அல்ல, அது தலித் மக்களுக்கு எதிரான சாதி வன்முறை தான்’ என்று கூறினார்.

சம்பவம் நடந்த அன்று, மருகும்பி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பினார். ​​திரையரங்கில் டிக்கெட் வாங்கியதற்காகச் சிலர் தன்னை அடித்ததாக அங்கு வசிப்பவர்களிடம் கூறினார். இதையடுத்து, பட்டியல் சாதியினர் வசிக்கும் காலனி அருகே இருந்த கோவிலில், ஆதிக்கச் சாதி மக்கள் திரண்டனர்.

அவர்கள் தலித் சமூகத்தினரின் வணிக நிறுவனங்களைத் தாக்கிச் சேதப்படுத்தியதோடு, தலித் மக்கள் சிலரது வீடுகளுக்கும் தீ வைத்தனர். பாதிக்கப்பட்ட இந்த தலித் மக்கள் பட்டியல் சாதியின் கீழ் வரும் மாதிகா பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இந்த வழக்கு குறித்து அரசு வழக்கறிஞர் அபர்ணா தாமோதர் பண்டி பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “பட்டியல் சாதியினரைத் தாக்கியவர்கள் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள். லிங்காயத், போவி மற்றும் பிற சாதிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்,” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நீண்ட காலமாக நீடித்த தீண்டாமை

அப்போது தலித் சங்கர்ஷ் சமிதியின் மாவட்டப் பொதுச் செயலாளராக இருந்த ரத்னாகர் பிபிசி ஹிந்தியிடம் இதுகுறித்துப் பேசினார். “சினிமா தியேட்டரில் அந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பே மாதிகா சமூகத்திற்கு எதிராகப் பாகுபாடு இருந்து வந்தது. அவர்களால் கிராமத்தில் முடி கூட வெட்ட முடிந்ததில்லை. அதற்காக அவர்கள் கங்காவதிக்குச் செல்ல வேண்டும். இது தலித்துகளுக்கு எதிரான தீண்டாமை பிரச்னையாக மாறியது. இதனால்தான் அந்த நேரத்தில் வன்முறை வெடித்தது,” என்கிறார்.

இந்தச் சம்பவத்தில், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் பிரிவு 3(2)(iv)-இன் கீழ் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் இந்தப் பகுதி என்ன சொல்கிறது?

பட்டியல் சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரது சொத்து, வீடு, கட்டடம், அல்லது வழிபாட்டுத் தலங்களுக்கு தீ அல்லது வெடிபொருளால் வேண்டுமென்றே சேதம் விளைவிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என இந்த பிரிவு கூறுகிறது.

கர்நாடகா, தலித், சாதி வன்முறை

பட மூலாதாரம், Getty Images

தீர்ப்பு என்ன சொல்கிறது?

தனது தீர்ப்பில், நீதிபதி சந்திரசேகர் பல்வேறு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.

20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் இனப் பாகுபாடுகளுக்கு எதிராக ஆப்பிரிக்க அமெரிக்க கலைஞர்களுக்கு நீதி கிடைப்பதில் முக்கியப் பங்கு வகித்த அமெரிக்க பாடகர் மரியன் ஆண்டர்சனையும் மேற்கோள் காட்டினார். அந்தப் பெண்மணி அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கும் மெட்ரோபொலிட்டன் ஓபரா அரங்கில் பாடிய முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர். 1939-இல் இரண்டு முறை வெள்ளை மாளிகையில் பாடிய முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்மணியும் இவரே.

நீதிபதியின் தீர்ப்பு, மரியன் ஆண்டர்சனின் மேற்கோளுடன் தொடங்குகிறது.

“எவ்வளவு சிறந்த தேசமாக இருந்தாலும், அது அதன் பலவீனமான மக்களை விட வலிமையானது அல்ல. நீங்கள் மற்றொருவரை கீழை வைத்திருக்க விரும்பினால், அதனைச் செய்ய உங்களில் ஒரு பகுதியையும் கீழே வைத்திருக்க வேண்டும். அதாவது, நீங்கள் நினைக்கும் அளவுக்கு நீங்கள் உயர மாட்டீர்கள்,” என்கின்றன அந்த வரிகள்.

அந்தத் தீர்ப்பில், “மஞ்சு தேவி வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் கூறியது போல், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரின் சமூகப்-பொருளாதார நிலையை மேம்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அவர்களது நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டு, மேலும் பல்வேறு குற்றங்கள், அவமதிப்பு, துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர்,” என்கிறது இந்தத் தீர்ப்பு.

“வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால், இதில் மெத்தனம் காட்டுவதற்கு எந்த நியாயமும் இல்லை,” என்றார் அவர்.

“காயமடைந்த ஆண்களும் பெண்களும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெண்களின் கண்ணியத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைக் குச்சிகள் மற்றும் செங்கற்களால் தாக்கி காயப்படுத்தியிருக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விதிக்கப்பட்ட தண்டனையை விட அதிகமான தண்டனைக்குத் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்,” என்று நீதிபதி கூறினார்.

“தண்டனையைக் குறைப்பதற்கு எந்த காரணமும் இல்லை, அல்லது போதுமான காரணமும் இல்லை,” என்று அவர் தனது தீர்ப்பில் கூறினார்.

அரசு வழக்கறிஞர், “குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் எந்தவொரு தனிநபருக்கும் எதிரான குற்றம் அல்ல, சமூகத்திற்கு எதிரானது” என்றார்.

மேலும், “21-ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்ற குற்றங்கள் நடக்கின்றன என்று கற்பனை செய்வது கடினம், மேலும் தீண்டாமை நடைமுறை இன்னும் தொடர்வதை இது காட்டுகிறது,” என்றார் அவர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களது வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர்களது வயது 60 அல்லது அதற்கு மேற்பட்டது என்றும், அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், எனவே அவர்களுக்கு அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு