ஜவஹர்லால் நேருவை சங்கடத்திற்கு உள்ளாக்கிய சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் விவகாரம்

 இந்தியா, ஊழல், எல்ஐசி, நேரு, நிதித்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 1956ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) உருவாக்கப்பட்டது
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, 1957இல் வெடித்த ஒரு ஊழல் விவகாரம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. இதனால், ஒரு மத்திய அமைச்சரே ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அது எந்த ஊழல்?

அது, 1957ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி. இந்திய மக்களவை பரபரத்துக் கிடந்தது. பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மருமகனும் காங்கிரஸ் கட்சியின் ரே பரேலி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபெரோஸ் காந்தி பேச எழுந்தார்.

“நான் தாக்கும்போது கடுமையாகத் தாக்குவேன். எதிர்த்தரப்பிடமும் போதுமான அளவு டிஎன்டி (TNT – வெடி மருந்து) இருக்கும் என்று உணர்ந்தே இதைச் சொல்கிறேன்” என்று பேசத் துவங்கினார் ஃபெரோஸ் காந்தி.

அப்போதுதான் உருவாக்கப்பட்டிருந்த மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) கணக்குகள், முதலீடுகள் குறித்து அவையில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த தருணம் அது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எல்ஐசியின் முக்கியமான முதலீடுகள்

அதைப் பற்றிப் பேசிய ஃபெரோஸ் காந்தி, எல்ஐசியின் முக்கியமான முதலீடுகள் குறித்த தகவல்களை அவைக்குத் தராமல் தவிர்த்ததன் மூலம் அவையின் உரிமை மீறப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

“திரு. முந்த்ராவுடன் செய்யப்பட்ட முக்கியமான வர்த்தகம் குறித்து அவைக்குச் சொல்லப்படாதது ஏன்? இந்த முக்கியமான தகவல் இல்லாத, எல்ஐசியின் முதலீடு தொடர்பான அறிக்கை அதை அச்சிட்ட காகிதத்தின் மதிப்பைக்கூட பெறாது” என்று சொன்ன ஃபெரோஸ் காந்தி, அது பற்றிய விவரங்களை வெளியிட்டார்.

அதாவது, “முந்த்ராவோடு தனியாக நடந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 1957 ஜூன் 25ஆம் தேதி, அவருடைய நிறுவனத்தின் பங்குகளை சுமார் 1,25,00,000 ரூபாய்க்கு எல்.ஐ.சி. வாங்கியது. 1957ஆம் ஆண்டின் மார்ச், ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய ஆறு மாதங்களில் 19 முறை முந்த்ராவின் நிறுவனங்களில் மொத்தமாக 1,56,00,000 மதிப்பிலான பங்குகள் எல்ஐசியால் வாங்கப்பட்டிருக்கின்றன.

மேலும் கல்கத்தா, பம்பாய் பங்குச் சந்தைகள் மூடப்பட்ட தினத்தன்றுகூட இது தொடர்பான வர்த்தகம் நடந்திருக்கிறது. இந்தப் பங்குகளை வெளிச்சந்தையில் வாங்கியதாகச் சொல்கிறார்கள். ஆனால், முந்த்ராவுடன் நடந்த தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இந்தப் பங்குகள் வாங்கப்பட்டிருக்கின்றன,” என்று குறிப்பிட்டார் ஃபெரோஸ் காந்தி.

ஜூன் 25ஆம் தேதி 1,24,44,000 ரூபாய்க்கு எல்.ஐ.சி. முந்த்ராவின் பங்குகளை வாங்கியதாகவும், அதற்குப் பிறகு அந்தப் பங்குகளின் விலை தொடர்ந்து வீழ்ந்து, டிசம்பர் 13ஆம் தேதியன்று அவற்றின் மதிப்பு 37 லட்ச ரூபாய் அளவுக்கு குறைந்ததாகவும் அவர் கூறினார்.

“உதாரணமாக, ஆஞ்சலோ பிரதர்ஸ் நிறுவன பங்குகளை எடுத்துக் கொள்வோம். அதன் ஒரு பங்கின் விலை ஜூன் 17 முதல் 23ஆம் தேதிவரை 16.87 ரூபாயாக இருந்தது. ஆனால், எல்.ஐ.சி. 24ஆம் தேதி அந்தப் பங்குகளை வாங்கும்போது, ஒரு பங்கின் விலை ரூ. 20.25ஆக உயர்ந்தது.”

அதேபோல, “ஆஸ்லர் லாம்ப் மேனுபேக்சரர் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ஜூன் 10ஆம் தேதி ரூ. 2.78 ஆக இருந்தது. எல்.ஐ.சி. முதலீடு செய்த ஜூன் 24ஆம் தேதி ஒரு பங்கின் விலை 4 ரூபாயாக உயர்ந்தது. இந்த முதலீடு நடந்த அடுத்த நாள் பங்கின் விலை மீண்டும் 2.78 ரூபாயாகச் சரிந்தது. இந்தப் பங்கில் மட்டும் பல லட்ச ரூபாயை எல்.ஐ.சி. முதலீடு செய்திருந்தது.”

கடந்த 1947இல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் 1949 ஆகஸ்ட்டில் இருந்து பங்குதாரர்களுக்கு லாப ஈவுத் தொகையே வழங்கவில்லை என்றும் அம்மாதிரி ஒரு நிறுவனத்தில் எப்படி எல்.ஐ.சி. முதலீடு செய்தது என்றும் ஃபெரோஸ் காந்தி கேள்வியெழுப்பினார்.

மேலும், “பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷனில் ஜூன் 25ஆம் தேதி 42 லட்ச ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இந்த நிறுவனம் வருடத்திற்கு 1.82 சதவீதம் மட்டுமே லாப ஈவுத் தொகையைத் தருகிறது. மிகக் குறைவான சதவீதத்தை வருவாயாகத் தரும் நிறுவனத்தில் பொது மக்களின் பணத்தை முதலீடு செய்யலாமா?”

“கான்பூரின் முக்கிய நிறுவனமாக ஒரு காலத்தில் இருந்த அந்த நிறுவனம் இப்போது சீர்குலைந்து கிடக்கிறது. இதன் பல மில்கள் மூடப்பட்டுவிட்டன. அதில் இப்போது எல்.ஐ.சி. முதலீடு செய்திருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உடனடியாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்,” என்று ஃபெரோஸ் காந்தி கூறினார்.

யார் அந்த முந்த்ரா?

 இந்தியா, ஊழல், எல்ஐசி, நேரு, நிதித்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பவே, பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பெரும் சங்கடமாகிப் போனது

ஹரிதாஸ் முந்த்ரா என்ற தொழிலதிபர் 1950களின் மத்தியில் கல்கத்தாவில் செயல்பட்டு வந்தார். பல்ப் விற்பவராகத் தனது வாழ்க்கையைத் துவங்கி, பங்கு வர்த்தகத்தில் இறங்கி மிகப்பெரிய தொழிலதிபரானவர். இந்தியா அப்போதுதான் சுதந்திரமடைந்து இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பல பிரிட்டிஷ் நிறுவனங்கள் சிக்கலில் இருந்தன.

இந்த நிறுவனங்களைப் பற்றி மோசமான கதைகளைக் கிளப்பிவிடுவது, அவற்றின் பங்குகள் வீழ்ச்சியடைந்த பிறகு, அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, அவற்றின் உரிமையை தனதாக்கிக் கொள்வது, பிறகு அந்த நிறுவனத்தில் உள்ள பணத்தை முதலீடு செய்து அடுத்த நிறுவனத்தை வாங்குவது என முந்த்ரா செயல்பட்டு வந்தார். 1956இல் போலியான பங்குப் பத்திரங்கள் விற்றதால், பம்பாய் பங்குச் சந்தை அவரைக் கண்டித்த சம்பவமும் உண்டு.

இப்படித்தான் ஜெஸ்ஸோப் இஞ்சினீயரிங் என்ற நிறுவனம் அவர் வசமானது. பிறகு அதிலிருந்த பணத்தை எடுத்து பிரிட்டிஷ் – இந்தியா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அதைக் கையகப்படுத்தினார். பிறகு அதிலிருந்த பணத்தை எடுத்து ரிச்சர்ட்ஸன் & க்ரடாஸ் நிறுவனத்தை கையகப்படுத்தினார். பிறகு, டர்னர் மாரிஸன் & கம்பனி. இப்படி அவரது வேலை தொடர்ந்துகொண்டே போனது. ஆனால், அவருடைய பல நிறுவனங்கள் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொள்ள, முந்த்ரா மீட்க வழி தேடினார்.

இந்தத் தருணத்தில் இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் செயல்பட்டு வந்த பல நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்டு, 1956 ஜனவரி மாதம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) உருவாக்கப்பட்டிருந்தது. முந்த்ராவின் பார்வை அந்த நிறுவனம் மீது படிந்தது.

இதற்குப் பிறகுதான், ஃபெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட முதலீடுகள் நடந்தன.

எல்.ஐ.சியின் பணம் முந்த்ரா பெருமளவு பங்குகளைக் கொண்டிருந்த பலவீனமான ஆறு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டது. ரிச்சர்ட்ஸன் க்ரட்டாஸ், ஜெஸ்ஸோப் & கம்பனி, ஸ்மித் ஸ்டெயின் ஸ்ட்ரீட், ஆஸ்லர் லாம்ப்ஸ், ஆஞ்சலோ பிரதர்ஸ், பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷன் ஆகியவைதான் அந்த ஆறு நிறுவனங்கள்.

பங்குச் சந்தை மூடியிருந்தபோது நடந்த பங்கு விற்பனை

 இந்தியா, ஊழல், எல்ஐசி, நேரு, நிதித்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு முதலீட்டைச் செய்வதற்கு முன்பாக எல்.ஐ.சியின் முதலீட்டு கமிட்டியுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.

இந்த நிறுவன பங்குகள் வெளிச்சந்தையில் வாங்கப்படாமல், நிறுவனத்திடம் இருந்து தனியாக வாங்கப்பட்டன. இதைவிட மோசம், பம்பாய், கல்கத்தா பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்த தினத்தன்றுகூட ஒரு பரிவர்த்தனை நடந்திருந்தது. அதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று நிதி அமைச்சக அதிகாரிகள், எல்.ஐ.சியின் அதிகாரிகள், முந்த்ராவை சந்தித்து இந்த வர்த்தகத்தை முடித்தனர் என்பது பிறகு தெரிய வந்தது.

இதுபோல ஒரு முதலீட்டைச் செய்வதற்கு முன்பாக எல்.ஐ.சியின் முதலீட்டு கமிட்டியுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. பங்குகள் வாங்கப்பட்ட பிறகே, அந்த கமிட்டியிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பவே, பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பெரும் சங்கடமாகிப் போனது. முடிவில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பம்பாய் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான எம்.சி.சக்லா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த விசாரணை ஆணையம் மிக வேகமாகச் செயல்பட்டது. விசாரணை வெளிப்படையாக நடந்ததால், தினமும் அதைக் கவனிக்கப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டனர். ஒரே மாதத்தில் விசாரணை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

டிடி கிருஷ்ணமாச்சாரியை பொருத்தவரை, இந்த முடிவு நிதித் துறை செயலரால் எடுக்கப்பட்டது, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதாக இருந்தது.

அமைச்சர், அதிகாரிகள் ராஜினாமா

 இந்தியா, ஊழல், எல்ஐசி, நேரு, நிதித்துறை

பட மூலாதாரம், Picador India

படக்குறிப்பு, நேரு அரசின் மீது இருந்த ஒரு காந்திய ஒளிவட்ட இமேஜை முந்த்ரா விவகாரம் நொறுக்கியதாகத் தனது ‘காந்திக்குப் பிறகு இந்தியா’ (India After Gandhi) நூலில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா குறிப்பிடுகிறார்.

இந்த விசாரணை ஆணையம், விசாரித்து அளித்த அறிக்கையில், செயலரின் நடவடிக்கைக்கும் அமைச்சரே பொறுப்பு எனக் கூறப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு, ராஜினாமா செய்வதைத் தவிர டிடி கிருஷ்ணமாச்சாரிக்கு வேறு வழியில்லை. 1958 பிப்ரவரி 18ஆம் தேதி டிடி கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்தார்.

பிரதமர் நேருவுக்கு இதில் விருப்பமில்லை. இருந்தாலும் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். நிதித்துறை முதன்மைச் செயலர் எச்.எம்.பட்டேல், எல்.ஐ.சியின் தலைவர் கே.ஆர்.காமத் உள்படப் பல அதிகாரிகளும் ராஜினாமா செய்தனர். நிதி அமைச்சகத்தை நேருவே எடுத்துக் கொண்டார்.

புது டெல்லியின் கிளாரிட்ஜஸ் ஹோட்டலில் ஒரு சூட் அறையில் தங்கியிருந்த ஹரிதாஸ் முந்த்ரா கைது செய்யப்பட்டார். அவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி விவியன் போஸ் என்பவர் தலைமையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை வாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. 1958 செப்டம்பரில் அந்த விசாரணை வாரியம் தனது அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையில், எல்.ஐ.சி. செய்த இந்த முதலீட்டிற்காக, உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றரை லட்சமும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு லட்சமும் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நேரு ஆத்திரமடைந்தார்.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, அப்படிச் சொல்பவர்களின் புத்திசாலித்தனம் குறித்து தான் சந்தேகப்படுவதாகக் கூறினார். பிறகு, தனது இந்தக் கருத்துக்கு நேரு வருத்தம் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, 1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட டிடி கிருஷ்ணமாச்சாரி மீண்டும் வெற்றி பெற்றார். அவருக்கு நிதித் துறையைத் தவிர, வேறு எந்தத் துறையை வேண்டுமானாலும் தரத் தயாராக இருப்பதாக நேரு குறிப்பிட்டார். முடிவில், இலாகா இல்லாத அமைச்சராகப் பதவியேற்றார் டிடிகே. 1964இல் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. 1966 வரை டிடிகே அந்தப் பதவியில் இருந்தார்.

நிதித்துறை முதன்மைச் செயலராக இருந்து, இந்த விவகாரத்தில் ராஜினாமா செய்த எச்.எம்.பட்டேல் இதற்குப் பிறகு அரசியலில் குதித்தார். சுதந்திரா கட்சியில் இருந்த அவர், 1977இல் மொரார்ஜி தேசாய் பிரதமரானபோது நிதியமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இதற்குப் பிறகு இந்தியாவில் மிகப்பெரிய நிதி மோசடிகள் நடந்துவிட்டன. ஆனால், வெறும் ஒன்றே கால் கோடி ரூபாய் முதலீடு தொடர்பான இந்த விவகாரம் இப்போது வரை பேசப்படுவதற்குக் காரணம், அந்த விவகாரம் ஏற்படுத்திய தாக்கம்தான்.

“இந்த விவகாரம் வெடிக்கும்வரை, நேருவின் அரசில் இருந்த அமைச்சர்கள் பதவியின் மீது ஆசை உடையவர்களே தவிர, நிதிரீதியான மோசடி செய்யக்கூடியவர்கள் அல்ல என்ற கருத்துதான் இருந்தது.

ஒரு காந்திய ஒளிவட்டம் அவர்களிடம் இருந்தது. அந்த இமேஜை முந்த்ரா விவகாரம் நொறுக்கியது” என்று தனது ‘இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு…’ (India After Gandhi) நூலில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா குறிப்பிடுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு