கோவை: எரிவாயு குழாய் பதிப்பு மற்றும் உயர் அழுத்த மின் கோபுர திட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு ஏன்?
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
‘‘நிலம் உங்களுடையதுதான்; ஆனால் அதில் நீங்கள் விவசாயம் செய்யக்கூடாது; நாங்கள் நிலத்தை எடுக்கவும் மாட்டோம்; இழப்பீடும் தர மாட்டோம்…இப்படி ஒரு நிபந்தனையை விதித்தால், ஒரு விவசாயி என்னதான் செய்ய முடியும்?’’ என்று கேட்கிறார் விவசாயிகள் சங்கத்தின் (சாதி மதம் கட்சி சார்பற்றது) மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வீடுகளுக்கு குழாய் மூலமாக எரிவாயு வழங்கும் ‘பைப் லைன் கேஸ்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கும், எரிவாயு வாகனங்களுக்கான பங்க் அமைப்பதற்கும் குழாய்களைப் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
கெயில் நிறுவனத்தின் தரப்பில், “99 சதவீதம் வரை விளைநிலங்களை தவிர்க்கவே செய்கிறோம். எரிவாயு குழாய்களை பெரும்பாலும் நெடுஞ்சாலையோரமே பதிக்கிறோம்” என்று கூறப்படுகிறது.
மேற்கு மாவட்டங்களில் என்ன நடக்கிறது?
கொச்சி – பெங்களூரு எரிவாயு குழாய் இணைப்புத் திட்டம்
கொச்சி – பெங்களூரு எரிவாயுக் குழாய் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் பாதையில் தமிழ்நாட்டில் உள்ள கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் வீடுகள், எரிவாயு பங்க்குகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு தருவதற்கான பணிகள் நடக்கின்றன.
கேரள மாநிலம் கொச்சி முதல் தமிழ்நாட்டில், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக பெங்களூரு வரை குழாய் பதிக்கும் பணி, 15 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது. அப்போது விவசாய நிலங்களின் வழியே இதைக் கொண்டு செல்லக்கூடாது என்று கடும் போராட்டங்கள் வெடித்தன. விவசாயிகள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
‘‘அந்த வழக்கில் ஐகோர்ட்டில் அப்போதிருந்த நீதியரசர் சந்துரு, விவசாயிகளிடம் கலந்து பேசி சுமூகமாக முடிக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் மக்கள் போராட்டத்தைக் கையிலெடுத்தோம். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, நெடுஞ்சாலைத்துறை மூலமாக நிலமெடுத்து, நெடுஞ்சாலை ஓரமாக எரிவாயு குழாய்களை பதிக்குமாறு உத்தரவிட்டார்.’’ என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கந்தசாமி.
2000-ஆவது ஆண்டுக்கும் முன்பே, கொச்சி துறைமுகத்திலிருந்து கரூர் வரையிலும் குழாய் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு செல்வதற்கான குழாய் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு மூலமாக இயங்கும் வாகனங்களே அதிகம் வரும் என்பதால்தான், குழாய்களில் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகச் சொல்கிறார் ‘கெயில்’ நிறுவனத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர்.
இப்போது எதிர்ப்பு ஏன்?
“இந்தியாவில் ஒரு லட்சம் கி.மீ., தூரத்துக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு கொடுக்கும் திட்டத்துக்காக குழாய் பதிக்கப்படுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 4,000–5,000 கி.மீ., துாரத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது” என்று தெரிவித்த அந்த அதிகாரி, பெங்களூருவிலிருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக சேலம் வரை குழாய் பதிக்கப்பட்டுவிட்டது என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், சேலத்தில் மட்டும் விவசாய நிலங்கள் வழியாக குழாயைக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை ஒப்புக் கொள்ளும் ‘கெயில்’ நிறுவன துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், அங்கே சரியான இழப்பீடு கொடுத்ததால் சுமூகமாக பணிகள் முடிந்து விட்டதாக பிபிசி தமிழிடம் கூறினார்.
கோவையில் இந்தத் திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பதற்கு உரிய இழப்பீடு கிடைக்காததுதான் காரணம் என்கிறார் விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கந்தசாமி.
‘‘நிலத்தை விலைக்கு வாங்கிவிட்டால் பிரச்னையில்லை. ஆனால், ROU (Right of User of Land) என்ற அடிப்படையில், ‘நிலம் உங்களுடையதுதான், அதில் குழாய் மட்டும் நாங்கள் கொண்டு செல்வோம் என்று கூறுகின்றனர். நிலத்தைப் பயன்படுத்த வழிகாட்டி மதிப்பில் 10% இழப்பீடு தருகின்றனர். ஆனால் அந்தக் குழாயைக் கடந்து நாங்கள் பைப் லைன் அமைக்கக் கூடாது. ஆழமான வேர் உள்ள பயிர்களை நடக்கூடாது என்று நிபந்தனை விதிக்கின்றனர்,” என்கிறார் அவர்.
“அந்தக் குழாயில் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு நில உரிமையாளரான விவசாயிதான் பொறுப்பு. வழக்குப் பதிவு செய்யப்பட்டால், ‘அந்தப் பாதிப்புக்கு நான் பொறுப்பில்லை, நான் நிரபராதி’ என்று நிரூபிக்கும் பொறுப்பும் விவசாயிக்கே உள்ளது. அதை நிரூபிக்க முடியாவிட்டால் ஆயுள் தண்டனை பெற வேண்டும். அதனால்தான் இதை எதிர்த்து 15 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்,” என்று போராடியதற்கான காரணத்தை கந்தசாமி விளக்கினார்.
கெயில் நிறுவனம் கூறுவது என்ன?
ஆனால் குழாய் எரிவாயு திட்டத்தால் இப்போது விவசாயிகளுக்கு அதிக பாதிப்பில்லை என்று கூறும் ‘கெயில்’ நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், “கேரளா-தமிழக எல்லையிலிருந்து 294 கி.மீ., தூரம் கடந்து கர்நாடகா எல்லை வரை குழாய் எரிவாயு திட்டத்துக்கான பிரதான குழாய் பதிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. விவசாய நிலங்களை 99% வரை நாங்கள் தவிர்த்து விட்டோம். சேலம் மாவட்டத்தில் மட்டும்தான், ஒரு பகுதியில் விவசாய நிலம் எடுக்கப்பட்டது. அதற்கும் இழப்பீடு தரப்பட்டு விட்டது. பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே இப்போது குழாய் பதிக்கப்பட்டு வருகிறது,” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“கோவையைப் பொருத்தவரை, எரிவாயு குழாய் பதிக்கப்படும் விளைநிலங்களில் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதால்தான் முழுமையாக இழப்பீடு வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாகவே ROU அடிப்படையில் வழிகாட்டி மதிப்பில் 10 சதவீத இழப்பீடு கொடுக்கப்பட்டது” என்று அவர் கூறினார். ஆனால், இதற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி அவர் ஏதும் கூறவில்லை.
எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு விவசாயிகளின் எதிர்ப்பு ஒருபுறம் இருக்க, சமீபமாக கோவையில் விவசாய நிலங்களில் தமிழக அரசின் மின் பகிர்மானக் கழகத்தால், உயர்மின் அழுத்த கோபுரம் (Tower Line) அமைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவ்வாறு மின்சார கோபுரம் அமைக்கப்படும் இடங்களில் உயரமான மரங்களை, பயிர்களை வளர்க்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
உயர் அழுத்த மின் கோபுரம் – விவசாயிகள் கூறுவது என்ன?
கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள பேரூர், மாதம்பட்டி, மேல் சித்திரைச்சாவடி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, மத்வராயபுரம் மற்றும் செம்மேடு ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
‘‘கெயில் நிறுவனம் குழாய் பதிக்க ROU (Right of User of Land) என்ற முறையில் வழிகாட்டி மதிப்பில் இழப்பீடு கொடுத்தது. இப்போது தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், ROW (Right of Way) என்ற முறையில், அதே 10 சதவீத இழப்பீடை மட்டுமே தருகிறது. அதிலும் டவர்லைனின் 4 கால்கள் இருக்கும் அரை சென்ட் பகுதிக்கு மட்டும் தரப்படுகிறது. மின் கம்பிகள் செல்லும் பாதைக்கு எந்த இழப்பீடும் இல்லை.’’ என்கிறார் கந்தசாமி .
மேலும் அவர் கூறுகையில், ‘‘அந்த டவர்லைனுக்குக் கீழே மரங்கள் வளர்க்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது; அவற்றை வளர்க்கவும் முடியாது. இதைப் பயன்படுத்த சொற்ப இழப்பீடைக் கொடுத்து விட்டு அதை நில ஆவணமான அடங்கலில் ஏற்றி விடுகின்றனர். அதனால் அந்த நிலத்தை விற்கவும் முடியாது. இந்த மின் அழுத்த மின் கோபுரங்களால் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது என்றால், ஒரு விவசாயியிடம் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தையுமே விற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.’’ என்றார்.
தமிழ்நாடு அரசு தரப்பு பதில்
இதுகுறித்து, தமிழக அரசின் நில நிர்வாக ஆணையரகத்தில் பிபிசி தமிழ் கேட்டதற்கு பதிலளித்த உயரதிகாரி ஒருவர், ‘‘அரசின் உத்தரவுப்படி, டவர் அமைக்கும் இடத்துக்குரிய முழு இழப்பீட்டுத் தொகையும், மின் கம்பிகள் செல்லும் பகுதிக்கு அதில் 20 சதவீதத் தொகையும் வழங்கப்பட வேண்டும். ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இப்படித்தான் இழப்பீடு தரப்பட்டுள்ளது. கோவையில் தராதது குறித்து, மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டு நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்படும்.’’ என்றார்.
அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலங்களுக்கு, முழு இழப்பீடு கொடுத்த பின்னும், அந்த நிலங்களைப் பயன்படுத்திக் கொள்ள விவசாயிகள் அனுமதிக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கூடுமானவரை உயர் மின் அழுத்த கோபுரங்களை, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலங்களில் கொண்டு செல்ல அறிவறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி.
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து வாரியத்தின் உயரதிகாரிகளிடம் பேசியிருப்பதாகத் தெரிவித்தார், மின் பகிர்மானக் கழகத்தின் கட்டுமானப் பிரிவின் கோவை வட்டத்தின் அதிகாரி ஒருவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு