மைக்ரோக்லியா: போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் செல்கள் மூளைக்கு செய்யும் நன்மை, தீமைகள்

மூளையின் மைக்ரோக்லியா செல்கள்

பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images

  • எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் ஸ்கெல்லி
  • பதவி,

மைக்ரோக்லியா என்பது நம் மூளையில் நிரந்தரமாக இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள். நோய்க் கிருமிகளைக் கண்டறிந்து அவற்றை அழித்து மூளையின் ரத்த நாளங்களைப் பாதுகாப்பதுதான் அவற்றின் வேலை. ஆனால், அந்த செல்களே மூளைக்குத் தீங்கு விளைவித்தால் என்ன ஆகும்?

நோய் எதிர்ப்பு அமைப்பைப் பாதுகாக்கும் செல்களாகவே அவை பெரும்பாலும் அறியப்படுகின்றன. ஆனால், போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் முதல் வலியை ஏற்படுத்துதல் வரை பலவற்றில் மைக்ரோக்லியா முக்கியப் பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் தற்போது அதிகளவில் நம்புகின்றனர்.

அல்சைமர் நோய், மன அழுத்தம், மனப் பதற்றம், கோவிட் தாக்கம், நாள்பட்ட சோர்வு ( chronic fatigue syndrome) என அறியப்படும் மியால்ஜிக் என்செஃபாலோமைலிடிஸ் (ME – myalgic encephalomyelitis) எனப் பல பிரச்னைகளில் இந்த செல்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக சிலர் நம்புகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மைக்ரோக்லியா என்பது என்ன?

நமது மூளையில் இரு வகையான செல்கள் உள்ளன. ஒன்று நரம்பு செல்கள் என அறியப்படும் நியூரான்கள், இவை மின் தூண்டுதல் மூலம் உடல் முழுவதும் தகவல்களை அனுப்பும் தூதர்களாகச் செயல்படுகின்றன.

இரண்டாவது வகை செல்கள், க்லியா (glea). இந்த க்லியா செல் குடும்பத்தின் மிகச் சிறிய உறுப்பினர்தான் மைக்ரோக்லியா. மூளையில் உள்ள அனைத்து செல்களிலும் இது 10 சதவீதம்தான் உள்ளது. மையத்தில் நீள் உருளை வடிவிலான “உடலமைப்பைக்” (body) கொண்டுள்ள இந்தச் சிறிய செல்களில், மெல்லிய கொடி போன்ற கிளைகள் காணப்படும்.

“தனது சுற்றுப்புறத்தைக் கண்காணிக்கத் தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டே இருப்பதற்கான அதிக கிளைகளை அவை கொண்டுள்ளன,” என்கிறார், ஜெர்மனியில் உள்ள ஃபிரெய்பெர்க் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் பாவ்லோ டி’எரிக்கோ.

அவர், “சாதாரணமான சூழல்களில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய, மைக்ரோக்லியா அந்தக் கிளைகளை நீட்டிவிட்டு பின்னர் மீண்டும் பழையை நிலைக்கே கொண்டு வரும்” என்கிறார்.

ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு மைக்ரோக்லியா முக்கியமானவை. நம்முடைய இளம் பருவத்தில் நரம்புகளுக்கு இடையிலான தேவையற்ற நரம்பு இணைப்புகளை அழித்து, மூளையின் வளர்ச்சியை இந்த செல்கள் ஒருங்கமைக்கின்றன.

எந்த செல்கள் நியூரான்களாக மாறுகின்றன என்பதிலும் அவை தாக்கம் செலுத்துகின்றன. மேலும், மைலின் (myelin ) எனப்படும் நியூரான்களை சுற்றியுள்ள உறை போன்ற பாதுகாப்புப் படலத்தைச் சரிசெய்து அவற்றை நிர்வகிக்கின்றன. இந்தப் பாதுகாப்புப் படலம் இல்லாமல் மூளையின் மின் தூண்டுதல் மூலம் தகவல்களைக் கடத்துவது சாத்தியமில்லை.

பாக்டீரியா, வைரஸ்களை கண்டறிந்து, அழித்து நம் மூளையை மைக்ரோக்லியாக்கள் பாதுகாக்கின்றன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாக்டீரியா, வைரஸ்களை கண்டறிந்து, அழித்து நம் மூளையை மைக்ரோக்லியா செல்கள் பாதுகாக்கின்றன

அத்துடன் மைக்ரோக்லியாவின் பங்கு முடிந்துவிடுவதில்லை. நம் வாழ்நாள் முழுதும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை கண்டறிந்து, அவற்றை அழித்து மூளையை நோய்த்தொற்றில் இருந்து காக்கின்றன.

நரம்பு செல்களுக்கு இடையே குவியும் கழிவுகளைச் சுத்தம் செய்கின்றன. மேலும், அல்சைமர் நோயில் பங்கு வகிக்கும் அமிலாய்டு புரதக்கற்றை போன்ற வழக்கத்திற்கு மாறான மடிப்புகளைக் (misshapen proteins) கொண்ட நச்சுப் புரதங்களைக் கண்டறிந்து அழிப்பதும் இதன் வேலையாக உள்ளது.

தீங்கு விளைவிப்பது ஏன்?

எனினும் சில சூழல்களில் இந்த செல்களும் தீங்கு விளைவிக்கலாம்.

“மைக்ரோக்லியா செல்களுக்கு நல்லது, கெட்டது என இரு பக்கங்கள் உண்டு,” என்கிறார் கொலரடோ பௌல்டர் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானி லிண்டா வாட்கின்ஸ்.

“மைக்ரோக்லியா செல்கள் பிரச்னைகளைக் கண்டறியும். மூளையில் நிகழும் அசாதாரண நரம்பியல் செயல்களைக் கண்டறிந்து அழிக்கும். மூளைக்குள் நிகழும் எந்தவிதமான பிரச்னைகளையும் அவை கண்காணித்துக் கொண்டே இருக்கும். ஆனால், அந்த நல்ல செல்கள் தூண்டப்பட்டால், நோய்த்தொற்றை ஏற்படுத்தும் தீய செல்களாகிவிடும்” என்கிறார் லிண்டா வாட்கின்ஸ்.

மைக்ரோக்லியா: போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் செல்கள் மூளைக்கு செய்யும் நன்மை, தீமைகள்

பட மூலாதாரம், Getty Images

இந்த செல்கள் ஏன் அந்த நிலைக்குச் செல்கின்றன?

மூளையில் தொற்று போன்று ஏதோ தவறு நிகழ்வதாக மைக்ரோக்லியா உணரும்போதோ அல்லது அமிலாய்டு புரதக்கற்றை அதிகளவில் இருக்கும்போதோ, அவை உயர்-வினை (super-reactive) நிலைக்குச் செல்கின்றன.

“கிட்டத்தட்ட பெரிய பலூன்கள் அளவுக்கு அவை அளவில் பெரிதாகிவிடும். மேலும், தன் இணை உறுப்புகளுடன் நகர ஆரம்பித்து, தீங்குகளை ஏற்படுத்தும்,” என்கிறார் வாட்கின்ஸ்.

இத்தகைய செல்கள் அழற்சி சைட்டோகைன்களை (inflammatory cytokines) வெளியேற்றும். இந்த சைட்டோகைன்கள் மற்ற நோய் எதிர்ப்பு செல்கள் மற்றும் மைக்ரோக்லியாவை இவற்றை எதிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வழிகாட்டும்.

நோய்த் தாக்குதல்களில் இருந்து எதிர்த்துப் போராட இத்தகைய எதிர்வினை அவசியம். வழக்கமாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் மைக்ரோக்லியா செல்கள் தன்னுடைய “நல்ல” நிலைக்குத் திரும்பிவிடும்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல்

எனினும், சில நேரங்களில் நோய்த்தொற்று காரணி மறைந்துவிட்ட பின்பும், மைக்ரோக்லியா செல்கள் தீய நிலையிலேயே நீண்ட காலத்திற்கு இருக்கின்றன.

இந்தக் கட்டுக்குள் இல்லாத மைக்ரோக்லியா பலவித நவீன நோய்கள் மற்றும் நிலைகளுக்குக் காரணமாக உள்ளதாக அறியப்படுகின்றன.

போதைப் பொருளுக்கு அடிமையாதலை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பாதிக்கப்பட்டவரின் அதிகமான போதைப்பொருள் பயன்பாடு காரணமாக, டோபமின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் நரம்பியல் குறைபாடு காரணமாகவே அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதாக முன்பு அறியப்பட்டது.

மூளையில் ஏதோ தவறு நிகழ்வதாக உணரும்போது, மைக்ரோக்லியா செல்கள் அதி-வினை செல்களாக மாறுகின்றன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூளையில் ஏதோ தவறு நிகழ்வதாக உணரும்போது, மைக்ரோக்லியா செல்கள் உயர்-வினை செல்களாக மாறுகின்றன

ஆனால், வாட்கின்ஸ் இதற்கு வேறொரு கோட்பாட்டைக் கூறுகிறார். ஒருவர் போதைப்பொருளை உட்கொள்ளும்போது, அவர்களின் மூளையில் உள்ள மைக்ரோக்லியா அந்தப் பொருளை “தீங்கு ஏற்படுத்தும் ஒன்றாக” கருதுவதாக, சீனா அகாடமி ஆஃப் சயின்சஸை சேர்ந்த விஞ்ஞானிகளும் வாட்கின்ஸும் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் வாதிட்டுள்ளனர்.

“பலவித ஓபியேட் (opiates) வகை மருந்துகள் (ஓபியத்தில் இருந்து தயாரிக்கப்படுபவை) மைக்ரோக்லியல் செல்களை தூண்டிவிடுகின்றன என்பதை எங்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளோம். இந்தத் தூண்டுதல், நோய் எதிர்ப்பு அமைப்பின் டி.எல்.ஆர். ஏற்பிகள் (toll like receptor – நோய் எதிர்ப்பு அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் புரத ஏற்பிகள்) எனும் அமைப்பின் வழியாக நிகழ்கிறது,” என்கிறார் வாட்கின்ஸ்.

“தீங்கு விளைவிப்பவற்றைக் கண்டறிவதற்காக இந்த டி.எல்.ஆர் ஏற்பிகள் வெகுகாலமாக உள்ளன. பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கண்டறிவதற்காக அவை உள்ளன.”

புதிய ஆராய்ச்சி கூறுவது என்ன?

ஓபியேட், கொகைன் அல்லது மெத்தம்பெட்டமைன் போன்றவற்றை மைக்ரோக்லியா கண்டறியும்போது, அவை சைட்டோகைன்களை வெளியிடுகின்றன. அத்தகைய போதைப் பொருட்களை எடுத்துக் கொள்ளும்போது தூண்டப்பட்ட நியூரான்களை இந்த சைட்டோகைன்கள் உயர்-வினை கொண்டவையாக மாறுவதற்கு வழிவகுக்கின்றன.

இது, நியூரான்களிடையே புதிய மற்றும் வலுவான இணைப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கிறது. மேலும், அந்த நேரத்தில் அதிகப்படியான டோபமின் வெளியேறுகிறது. இதனால், போதைப்பொருட்கள் மீதான ஆசையை வலுப்படுத்தி, அதன் மீதான நாட்டத்தைத் தூண்டுகிறது. மூளை நியூரான்களின் கட்டமைப்பை மைக்ரோக்லியா மாற்றி, வாழ்நாள் முழுதும் நீடிக்கும் வகையிலான போதைப் பழக்கத்திற்கு வழிவகுக்கும்.

இந்தக் கோட்பாட்டை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் மூளையில் அழற்சியை ஏற்படுத்தும் சைட்டோகைன்கள் (inflammatory cytokines) அதிகமாக இருக்கும். விலங்குகளில் இதைக் குறைக்கும்போது அவை போதைப் பொருட்களை நாடும் பழக்கமும் குறைகிறது. டி.எல்.ஆர் ஏற்பிகளை தடுப்பதன் மூலமும் மைக்ரோக்லியல் செல்களை தூண்டுவதை தடுப்பதன் மூலமும் எலிகள் தொடர்ச்சியாக கொகைன் போன்ற போதைப்பொருட்களை நாடுவதை நிறுத்த முடியும் என்பதை வாட்கின்ஸ் குழு நிரூபித்துள்ளது.

மைக்ரோக்லியா: போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் செல்கள் மூளைக்கு செய்யும் நன்மை, தீமைகள்

பட மூலாதாரம், Getty Images

மைக்ரோக்லியா செல்கள், 12 வாரங்களுக்கும் மேல் நீடிக்கும் நாள்பட்ட வலியிலும் முக்கியப் பங்கை வகிக்கலாம். காயம் ஏற்பட்ட பிறகு முதுகுத் தண்டுவடத்தில் உள்ள மைக்ரோக்லியா தூண்டப்பட்டு, வலி நியூரான்களிடையே கூர் உணர்ச்சியை ஏற்படுத்தும் சைட்டோகைன்களை வெளியிடுவதாக வாட்கின்ஸின் ஆய்வு நிரூபித்துள்ளது.

“மைக்ரோக்லியா தூண்டப்படுவதைத் தடுப்பதன் மூலம் உங்களால் வலியைத் தடுக்க முடியும்,” என்கிறார் வாட்கின்ஸ்.

மூத்த குடிமக்கள் அறுவை சிகிச்சை அல்லது நோய்த்தொற்றுக்கு பின்பு ஏன் அறிவாற்றலை இழக்கின்றனர் என்பதற்கு வாட்கின்ஸ் மற்றொரு பார்வையையும் வழங்குகிறார். அறுவை சிகிச்சையோ அல்லது நோய்த் தொற்றோ மைக்ரோக்லியா அதன் தீய பக்கத்தை தகவமைத்துக் கொள்வதற்கான முதல் அடியாகப் பார்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளிகளுக்கு வலி நிவாரணியாக ஓபியாய்டுகள் வழங்கப்படுகின்றன, துரதிருஷ்டவசமாக அவை மீண்டும் மைக்ரோக்லியாவை தூண்டுகின்றன. இதனால் நியூரான்கள் அழிவுக்கு வழிவகுக்கின்றன.

இதுதொடர்பான ஆராய்ச்சி ஆரம்ப நிலையில் இருப்பதால், இந்த ஆரம்பகட்ட முடிவுகளைக் கவனமாக நோக்க வேண்டும். ஆனால், மைக்ரோக்லியா தூண்டுதலைத் தடுப்பதன் மூலம் அறுவை சிகிச்சைக்குப் பின்னான நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

“எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி நான் உங்களை நோக்கி நடந்து வந்து கண்ணத்தில் அறைந்தால் முதல்முறை நான் அதிலிருந்து விடுபடலாம். ஆனால், இரண்டாவது முறை நீங்கள் என்னை விடமாட்டீர்கள். ஏனெனில், இப்போது நீங்கள் பாதுகாப்புடன் தயாராக இருப்பீர்கள்” என்கிறார் வாட்கின்ஸ்.

“க்லியல் செல்களும் அப்படித்தான். வயதாகும்போது அவை வினையாற்றத் தயாராக இருக்கும். இதுதான் முதன்மைக் காரணி. இரண்டாவது சவால் என்னவென்றால் அறுவை சிகிச்சையின் காரணமாக அவை தூண்டப்பட்டு முன்பைவிட அதிகமாக வினை புரியத் தயாராக இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பின், உங்களுக்கு ஓபியாய்டுகள் வழங்கப்படுகின்றன. இது மூன்றாவது தாக்குதல்.”

கட்டுக்குள் இல்லாத மைக்ரோக்லியா செல்கள் பல தீவிர நிலைமைக்கு காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கட்டுக்குள் இல்லாத மைக்ரோக்லியா செல்கள் பல தீவிர நிலைமைகளுக்குக் காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது

மைக்ரோக்லியாவின் இந்த ‘முதன்மைக் காரணி’தான் அல்சைமர் நோய்க்குக் காரணமாக இருக்கலாம். இந்த நோய்க்கு வயதுதான் முதன்மையான ஆபத்தாக உள்ளது. நமக்கு வயதாகும்போது மைக்ரோக்லியா அதிக வினை புரிவதற்குத் தயாரக இருக்கும் என்றால், வயதுதான் ஒரு காரணியாக இருக்க முடியும்.

அதேநேரம், மூளையில் உருவாகும் அமிலாய்டு புரதக் கற்றைகள் இந்நோய்க்கு முக்கியக் காரணியாக உள்ளது. இது பல தசாப்தங்களுக்கு முன்னதாகவே, குழப்பம் மற்றும் நினைவிழப்பு ஆகிய அறிகுறிகளுடன் உருவாகத் தொடங்கிவிடுகிறது. இந்த அமிலக் கற்றைகளைக் கண்டறிந்து நீக்குவதுதான் மைக்ரோக்லியாவின் வேலை. எனவே, மீண்டும் மீண்டும் தூண்டப்படுவதன் மூலம் மைக்ரோக்லியா நிரந்தரமாகத் தீய செல்களாக மாறுவதற்கு வழிவகுக்கின்றன.

“இந்த அமிலாய்டு குவிவதன் மூலம் மைக்ரோக்லியா தூண்டப்பட்டு அதீத வினை புரியும் வகையில் மாறுகின்றன,” என்கிறார் டி’எரிக்கோ.

“இந்த அமிலாய்டு கற்றைகள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும்போது, நாள்பட்ட, தீராத அழற்சியை ஏற்படுத்தும். இது, நியூரான்களுக்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.”

நாள்படத் தூண்டப்பட்ட இந்த மைக்ரோக்லியா, நியூரான்களை நேரடியாக அழித்து நரம்பு செல்களுக்கு இடையிலான இணைப்பை அழித்துவிடும். இந்த அனைத்து நடைமுறைகளும் குழப்பம், நினைவிழப்பு, அறிவாற்றல் செயல்பாடு போன்ற அல்சைமரின் அறிகுறிகள் ஏற்பட வழிவகுக்கும்.

மூளையைச் சுற்றி இந்த நச்சுத்தன்மை வாய்ந்த அமிலாய்டு கற்றைகளைக் கடத்தி, அல்சைமர் நோய் பரவுவதிலும் மைக்ரோக்லியா பங்காற்றுவதாக டி’எரிக்கோ தனது 2021ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறிந்துள்ளார்.

அல்சைமர் நோயை ஏற்படுத்தும் புரதக்கற்றையை கண்டறிந்து அழிப்பது மைக்ரோக்லியாவின் முக்கிய வேலையாக உள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அல்சைமர் நோயை ஏற்படுத்தும் புரதக்கற்றையைக் கண்டறிந்து அழிப்பது மைக்ரோக்லியாவின் முக்கிய வேலையாக உள்ளது

இந்த நோயின் ஆரம்பத்தில் புறணி (cortex), மூளையின் பின்புற மேடு (hippocampus), ஆல்ஃபாக்டரி பல்ப் (olfactory bulb) போன்ற மூளையின் முக்கியப் பகுதிகளில் இந்தக் கற்றைகள் திரட்டப்படும்,” என்கிறார் டி’எரிக்கோ.

“நோயின் அடுத்தகட்டமாக மூளையின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படும். அமிலாய்டு புரதக் கற்றைகளை மைக்ரோக்லியா வெளியிடுவதற்கு முன்பாக, ஏற்கெனவே உள்ளவற்றை வேறு பகுதிக்கு நகர்த்துவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என்றார் அவர்.

நினைவாற்றல் இழப்பு, அறிவாற்றல் இழப்பு ஆகிய அல்சைமர் நோயின் அறிகுறிகள், நீண்ட கால கோவிட் பாதிப்பின் அறிகுறிகளாகவும் உள்ளன. எனவே, மைக்ரோக்லியா “கவனச் சிதறலுக்கும்” (brain fog) காரணமாக இருக்கலாம். உதாரணமாக மைக்ரோக்லியா தீய செல்களாக மாறுவதற்கு முக்கியக் காரணமாக வைரஸ் தொற்று உள்ளது.

“வழக்கத்திற்கு மாறாகத் தூண்டப்பட்ட மைக்ரோக்லியா மூளையின் ஒத்திசைவை நீக்கி, அறிவாற்றல் இழப்பு, நினைவாற்றல் இழப்பு மற்றும் கவனச் சிதறலுடன் தொடர்புடைய அனைத்து அறிகுறிகளுக்கும் வழிவகுக்கிறது,” என்கிறார், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஃபெடரல் ஃப்ளூமினென்ஸ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உயிரியலாளர் கிளாடியோ அல்பெர்ட்டோ செர்ஃபாட்டி. இந்தக் கோட்பாட்டுக்கான ஆதாரம் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரை தொடர்பாக இவர் பணியாற்றியுள்ளார்.

புதிய சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும்

மைக்ரோக்லியா: போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் செல்கள் மூளைக்கு செய்யும் நன்மை, தீமைகள்

பட மூலாதாரம், Getty Images

இத்தகைய கருத்துகள் புதிய சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.

உதாரணமாக, அமிலாய்டுகளை அழிக்கும் வகையில் மைக்ரோக்லியாவின் திறனை அதிகரிக்கக்கூடிய, அல்சைமருக்கான புதிய மருந்துகளை மனிதர்கள் மீது பரிசோதிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

எனினும், அல்சைமரின் மற்ற மருந்துகளைப் போல இதுவும் பெரியளவில் நரம்பியல் அமைப்பில் அழிவு ஏற்படுவதற்கு முன்பான நோயின் ஆரம்ப நிலையிலேயே சிறப்பாகச் செயலாற்றும் வகையில் உள்ளன.

போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் தொடர்பாக, தீய செல்களாக மாறிய மைக்ரோக்லியாவுக்கு பதிலாக போதைப்பொருட்களைப் பயன்படுத்தாதவர்களின் மூளைகளில் உள்ள “வழக்கமான” மைக்ரோக்லியாவை மாற்றுவது ஒரு யோசனையாக உள்ளது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் மைக்ரோக்லியாவை ஒட்டும் முறையாக இது உள்ளது.

ஆனால், இத்தகைய செயல்பாடு மிகவும் கடினமானது. தூண்டப்பட்ட மைக்ரோக்லியாக்கள் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும் மூளை செயல்பாட்டுக்கும் தேவை என்ற நிலை உள்ளது.

“கோட்பாட்டுரீதியாக இது வேலை செய்யலாம், ஆனால் மூளை முழுவதிலும் உள்ள மைக்ரோக்லியாவுக்கு நீங்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. குறிப்பிட்ட பகுதியில் மைக்ரோக்லியாவை செருகுவது அழிவை ஏற்படுத்தலாம். எனவே, இத்தகைய சிகிச்சைக்கு பாதுகாப்பான வழிமுறையை நாம் கண்டறிய வேண்டும்,” என்கிறார் வாட்கின்ஸ்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.