குடியேற்ற எண்ணிக்கையை குறைப்பதாக அறிவித்த ட்ரூடோ அரசு – கனடா செல்ல விரும்பும் தமிழர்களை பாதிக்குமா?

கனடா, புலம்பெயர்ந்தவர்கள், குடியுரிமை, ஜஸ்டின் ட்ரூடோ, மாணவர்கள், கல்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனடாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புலம் பெயர்பவர்கள் தொடர்பான விவகாரம் முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளது

கனடாவில் குடியேறும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையைத் தற்காலிகமாகக் குறைக்கவுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவிற்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கான மாணவர் விசாக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜஸ்டின் ட்ரூடோ ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

“இந்த ஆண்டு, 35 சதவீதத்திற்கும் குறைவாகவே வெளிநாட்டு மாணவர்களுக்கு நாங்கள் விசா வழங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு, இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் குறைக்கப்படும்” என்று கடந்த மாதம் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை அன்று “அடுத்த இரண்டு ஆண்டுகளில் கனடாவுக்கு வரும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உள்ளோம். இதுவொரு தற்காலிக முடிவு. இது எங்கள் மக்கள் தொகை வளர்ச்சியைத் தடுக்கவும், எங்களது பொருளாதாரத்தை உயர்த்தவும் எடுக்கப்பட்டுள்ளது” என்று ட்ரூடோ கூறினார்.

கனடா, புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான விதிகளைக் கடுமையாக்குவது இது முதல்முறையல்ல. கனடாவின் இந்தப் புதிய அறிவிப்புகளால் இந்தியா மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கனடா செல்ல திட்டமிடுபவர்களுக்கு என்ன பாதிப்புகள் இருக்கும்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘கனடாவில் அதிகளவில் புலம்பெயர்ந்தோர்’

கனடா, புலம்பெயர்ந்தவர்கள், குடியுரிமை, ஜஸ்டின் ட்ரூடோ, மாணவர்கள், கல்வி

பட மூலாதாரம், @JustinTrudeau

“நாங்கள் அனைத்து கனேடியர்களுக்கும் ஏற்ற வகையில் வேலை செய்ய வேண்டும். கனடாவில் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் போகிறோம்” என்று கூறியிருந்தார்.

மேலும், “வேலைகளில் கனேடிய தொழிலாளர்களுக்கு ஏன் முன்னுரிமை கொடுக்க முடியவில்லை என்பதற்குத் தகுந்த காரணங்களை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்ற வகையில், கடுமையான விதிகளை நாங்கள் கொண்டு வருகிறோம்” என்றும் தெரிவித்திருந்தார்.

“இந்தப் புதிய திட்டத்தால், 2025இல் கனடாவுக்கு வரும் நிரந்தர குடியிருப்பாளர்களின் (Permanent residents- பிஆர்) எண்ணிக்கை ஐந்து லட்சத்தில் இருந்து 395,000 ஆகக் குறையும். 2026இல் இது 3,80,000 என்ற அளவிற்கும், 2027இல் 3,65,000 என்ற அளவிற்கும் மேலும் குறைக்கப்படும்” என கனடா அரசு அதிகாரி ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அதேபோல, புதிய தற்காலிக குடியிருப்பாளர்களின் (Temporary residents) வருகைக்கான இலக்குகள் 2025ஆம் ஆண்டிற்கு 6,73,650 ஆகவும், 2026இல் 516,600 ஆகவும், 2027இல் 543,600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும், இந்தப் புள்ளிவிவரங்கள் கனடாவுக்கு புதிதாக வருபவர்களுக்கு வழங்கப்படும் வேலை மற்றும் கல்விக்கான அனுமதிகளைக் குறிப்பதாகவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

கனடாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புலம் பெயர்பவர்கள் தொடர்பான விவகாரம் முக்கியமான பிரச்னையாக மாறியுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின்படி, ‘கனடாவில் அதிகளவில் புலம் பெயர்ந்தோர் இருப்பதாக கனேடிய மக்களில் பெரும் பகுதியினர் நினைக்கின்றனர்.’

“அத்தகைய ஓர் எண்ணம் இந்நாட்டு மக்களிடையே இருப்பது உண்மைதான். ஆனால் கனடா தேசம் புலம்பெயர்ந்தவர்களால் கட்டி எழுப்பப்பட்டது என்பதை நாம் மறுக்க முடியாது. தேர்தல் நேரம் என்பதால் இந்த விவகாரம் பெரிதாக்கப்படுகிறது. மற்றபடி தேர்தல் முடிந்தவுடன் சகஜ நிலை திரும்பும் என நம்புகிறேன்” என்கிறார் கனடாவில் கட்டடப் பொறியாளராகப் பணிபுரிந்து வரும், சேலத்தைச் சேர்ந்த நகுலன்.

“நிரந்தரக் குடியுரிமை பெறலாம் என்ற எண்ணத்தில்தான் பல இந்தியர்கள், தமிழர்கள் தற்காலிக விசாவில் இங்கு வருகிறார்கள். நிரந்தரக் குடியுரிமைகளுக்கான எண்ணிக்கை குறையும்போது, கனடா மீது நம்மூர் மாணவர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு குறையும்” என்கிறார் நகுலன்.

கனடா, புலம்பெயர்ந்தவர்கள், குடியுரிமை, ஜஸ்டின் ட்ரூடோ, மாணவர்கள், கல்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்காலிகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதாக கனடா அறிவித்துள்ளது

புதிதாக கனடாவிற்கு வருபவர்கள் எதிர்மறையான விளைவுகளைச் சந்திப்பதாகவும், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் வழக்கறிஞர்கள் மற்றும் சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

“கனடா வரலாற்றில் மிக மோசமான குடியேற்ற உரிமை மீறலை நாங்கள் காண்கிறோம்” என்று புலம்பெயர்ந்தோர் உரிமைகள் செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் சையத் ஹுசைன் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

“நிரந்தரக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைப்பு என்பது புலம் பெயர்ந்தோருக்கு நேரடி அடி. அவர்கள் தற்காலிக குடிமக்களாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும் அல்லது ஆவணங்கள் இல்லாமல், மோசமான வேலைகளுக்குத் தள்ளப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க தற்காலிக குடியிருப்பாளர்கள் தொடர்பான விதிகளை கனடா அரசாங்கம் முன்பு தளர்த்தியது. இப்போது கொண்டு வரப்படும் இந்தப் புதிய குடியேற்ற இலக்குகள், இந்த விவகாரத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளதை பிரதிபலிக்கிறது.

கனடா அரசு கடந்த ஆண்டு, ‘2025இல் 5,00,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு அனுமதி வழங்கலாம் என்றும், 2026ஆம் ஆண்டிற்கும் அதே எண்ணிக்கையிலான அனுமதிகளை வழங்கலாம் என்றும் திட்டமிட்டது.’ ஆனால் தற்போது அதற்கு நேரெதிரான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கனடா நாட்டின் புள்ளிவிவரங்கள்படி, ‘2024ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி, தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட கனடாவில் 2.8 மில்லியன் தற்காலிகக் குடியிருப்பாளர்கள் உள்ளனர்.’

கனடா செல்ல ஆர்வம் காட்டும் மாணவர்களின் நிலை

கனடா, புலம்பெயர்ந்தவர்கள், குடியுரிமை, ஜஸ்டின் ட்ரூடோ, மாணவர்கள், கல்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழக மாணவர்கள் அதிகம் ஆர்வம் செலுத்துவது கனடா சென்று படிக்கத்தான் என்கிறார் ‘கான் அப்ரூவ் இமிகிரேஷன் கன்சல்டன்ட்ஸ்’ என்ற தனியார் அமைப்பின் மேலாளர் கீதா

சென்னையிலுள்ள ஒரு தனியார் இமிகிரேஷன் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாளர் கீதா இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, “டொரான்டோ, ஒட்டாவா போன்ற கனடாவின் முக்கிய நகரங்களில் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கனடா அரசு நினைக்கிறது. எனவே இதுபோன்ற விதிகளைக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இது வழக்கமான ஒன்றுதான், கவலைக்குரிய விஷயமல்ல” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கனடாவில் சென்று கல்வி பயிலவே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். நாம் செய்திகளில் பார்ப்பது வேறு, அங்குள்ள நிலை வேறு. அங்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளார்கள். படித்து முடித்தால், அங்கு வேலை கிடைப்பதில்லை என்பது உண்மையில்லை.”

டொரான்டோ, ஒட்டாவா போன்ற முக்கிய நகரங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளிலும் வேலை வாய்ப்புகள், பல்கலைக்கழங்கள் உள்ளதாகவும் புலம் பெயர்ந்தவர்கள் அவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என கனடா அரசு எண்ணுவதாகவும் கூறுகிறார் கீதா.

பல நாடுகள் புலம்பெயர்ந்தோர் தொடர்பான விதிகளை அவ்வப்போது கடுமையாக்குவதும், பின்னர் தளர்த்துவதும் வழக்கமான நடவடிக்கைதான் என்றும், முற்றிலுமாக தடை விதித்தால்தான் பிரச்னை என்றும் அவர் விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, கனடாவுக்கு, இந்தியர்களின் வருகை மிகவும் முக்கியம். அந்த நாட்டின் பொருளாதாரத்தில் இந்திய மாணவர்களின் வருகை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் “இந்தப் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய பெற்றோர்களின் கவனம் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் பக்கம் திரும்பியுள்ளதையும் மறுக்க முடியாது.”

கனடா அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தின் தகவல்படி, ‘சர்வதேச கல்வி என்பது கனடாவில் 2,00,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளின் ஆதாரமாக இருப்பதோடு மட்டுமல்லாது, ஆண்டுதோறும் 22 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கைகளுக்கும் காரணமாக உள்ளது. இது மரம் (Lumber), வாகன பாகங்கள் உற்பத்தி, வானூர்தி ஆகிய துறைகளில் கனடா ஏற்றுமதி செய்வதைவிட அதிகம்.’

இதற்கு முன்பு செய்யப்பட்ட மாற்றங்கள்

கனடா, புலம்பெயர்ந்தவர்கள், குடியுரிமை, ஜஸ்டின் ட்ரூடோ, மாணவர்கள், கல்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாணவர் விசா தொடர்பாக கனடா பல மாற்றங்களைச் செய்துள்ளது

இருப்பினும், புலம்பெயர்ந்தோருக்கான விதிகளை மாற்றவோ அல்லது கடுமையாக்கவோ கனடா அழைப்பு விடுப்பது இது முதல் முறையல்ல.

முன்னதாக செப்டம்பர் 19ஆம் தேதி, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மாணவர் விசாக்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த ஆண்டு வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவை மேலும் குறைப்பதாகக் கூறியிருந்தார்.

“இந்த ஆண்டு சர்வதேச மாணவர்களுக்கு அனுமதி வழங்குவதை நாங்கள் 35 சதவீதம் குறைத்துள்ளோம். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் குறைக்கப்படும்” என்று ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“குடியேற்றம் நமது பொருளாதாரத்திற்கு நல்லது, ஆனால் தவறான நபர்கள் அதை துஷ்பிரயோகம் செய்து, மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும்போது நாங்கள் அதற்கு எதிராகச் செயல்படுவோம்” என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனுடன், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ‘வெளிநாட்டு தொழிலாளர் விதிகளை’ கடுமையாக்குவதாகவும் அவர் அறிவித்தார்.

கனடா, புலம்பெயர்ந்தவர்கள், குடியுரிமை, ஜஸ்டின் ட்ரூடோ, மாணவர்கள், கல்வி

பட மூலாதாரம், Getty Images

ஜிஐசி கட்டணம் அதிகரிப்பு

அதே நேரத்தில், உத்தரவாத முதலீட்டுச் சான்றிதழ் (GIC- ஜிஐசி) கட்டணம் 10 ஆயிரம் கனேடியன் டாலர்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான கனேடியன் டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜிஐசி தொடர்பான புதிய விதிகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.

ஒவ்வொரு வெளிநாட்டு மாணவரும் ஜிஐசி என்ற பெயரில் ஒரு டெபாசிட் செய்ய வேண்டியுள்ளது. மாணவர்கள் கனடாவுக்கு செல்லவும் அங்கே வாழவும் தங்களிடம் போதிய பண வசதி உள்ளது என்பதைக் குறிக்கும் ஆதாரமே ஜிஐசி டெபாசிட் ஆகும்.

படித்து முடித்த பிறகு, இது மாணவர்களுக்குத் தவணை முறையில் திருப்பி அளிக்கப்படும்.

வாழ்க்கை துணைக்கான விசாவில் மாற்றம்

கனடா, புலம்பெயர்ந்தவர்கள், குடியுரிமை, ஜஸ்டின் ட்ரூடோ, மாணவர்கள், கல்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனடாவிற்கு படிக்கச் செல்லும் ஒவ்வொரு வெளிநாட்டு மாணவரும் ஜிஐசி என்ற பெயரில் ஒரு டெபாசிட் செய்ய வேண்டியிருக்கிறது

வாழ்க்கைத் துணை விசா என்பது ஒரு வகையான சார்பு விசா. இந்த விசாவை வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் வசிப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர்.

கனடாவில் முதுநிலை அல்லது முனைவர் பட்டம் படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் வாழ்க்கைத் துணைக்கு மட்டுமே இனி விசா வழங்கயிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.

இளநிலை கல்வி பயிலும் மாணவர்களின் வாழ்க்கைத் துணைக்கு இந்த விசா வழங்கப்படாது.

கனடா, புலம்பெயர்ந்தவர்கள், குடியுரிமை, ஜஸ்டின் ட்ரூடோ, மாணவர்கள், கல்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான இந்திய மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு செல்கின்றனர்

வேலை நேரம் குறைப்பு

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெளிநாட்டு மாணவர்கள் பகுதி நேரமாகப் பணி புரிவதற்குமான நேரத்தையும் கனடா குறைத்தது.

கனடா அரசாங்கத்தின் தற்போதைய முடிவின்படி, வெளிநாட்டு மாணவர்கள் ஒரு வாரத்தில் மொத்தம் 24 மணிநேரம் வரை பகுதி நேர வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை வெளிநாட்டு மாணவர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வரை பகுதி நேர வேலைக்குச் செல்ல அனுமதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கனடாவிற்கு அதிகளவில் செல்லும் இந்திய மாணவர்கள்

கனடா, புலம்பெயர்ந்தவர்கள், குடியுரிமை, ஜஸ்டின் ட்ரூடோ, மாணவர்கள், கல்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் கனடா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 4,27,000 ஆகும்

ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான இந்திய மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு செல்கின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைப்படி, இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் படிப்பதற்காக கனடா செல்கின்றனர்.

இவ்வாறான நிலையில் கனடா அரசாங்கத்தின் புதிய முடிவு அந்த மாணவர்களுக்கு மேலும் சிரமங்களை ஏற்படுத்தலாம். இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் கனடா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 4,27,000 ஆகும்.

அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது, இந்த ஆண்டு 3,37,630 அமெரிக்க மாணவர்கள் உயர்கல்விக்கு கனடா சென்றுள்ளனர். பிரிட்டன் 1,85,000 மாணவர்கள் கனடா படிக்கச் சென்றுள்ள நிலையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (1,22,202 மாணவர்களுடன்), ஐந்தாவது இடத்தில் ஜெர்மனியும் உள்ளது. அங்கிருந்து 42,997 மாணவர்கள் கனடா சென்றுள்ளனர்.

மாநிலங்களவையில் வெளியிடப்பட்ட இந்தத் தரவுகளில், 2019ஆம் ஆண்டில், 6,75,541 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு படிக்கச் சென்றதாகவும், அதுவே 2024ஆம் ஆண்டில், 13,35,878 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு படிக்கச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மாணவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், எந்த மாநிலத்தில் இருந்து எத்தனை இளைஞர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது குறித்த மாநில வாரியான தரவு எதுவும் அமைச்சகத்திடம் இல்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.