கருவிலுள்ள சிசு ஆணா, பெண்ணா எனக் கண்டறிவதை சட்டப்பூர்வமாக்குமாறு கூறும் ஐ.எம்.ஏ தலைவர் – ஏன்?

பெண்கள், பெண் சிசுக் கொலை, ஆண்-பெண் விகிதம், கரு, மருத்துவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கருவின் பாலின பரிசோதனையை ஆதரிப்பதன் மூலம் இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளார். (சித்தரிப்புப் படம்)
  • எழுதியவர், சுஷீலா சிங்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவர் டாக்டர் ஆர்.வி. அசோகன், கரு பாலின பரிசோதனையை சட்டப்பூர்வமாக்குவது குறித்துப் பேசியிருப்பது புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கோவாவில் நடந்த ஒரு நிகழ்வின்போது டாக்டர் ​​ஆர்.வி. அசோகன், “30 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் சட்டத்தால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது? இதன் மூலம் பாலின விகிதத்தை மாற்ற முடிந்ததா? இந்தச் சட்டம் சில இடங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று கூறினார்.

டாக்டர் அசோகனின் இந்தப் பேச்சு குறித்த நிபுணர்களின் கருத்துகள் பிளவுபட்டுள்ளன.

ஆனால் தற்போதுள்ள சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கருவின் பாலினத்தை அறிந்து, அது பெண் குழந்தையாக இருந்தால் அதை உலகத்திற்குக் கொண்டு வருவதை உறுதி செய்யும் வகையிலான சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்றும் பிபிசியிடம் பேசிய டாக்டர் அசோகன் வலியுறுத்தினார்.

கருக்கலைப்பில் பலருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் பிசி-பிஎன்டிடி (கருத்தரிப்புக்கு முன் மற்றும் பிறப்புக்கு முந்தைய நோய் கண்டறிதல் நுட்பங்கள் சட்டம்) சட்டத்தின் கீழ் மருத்துவர் மட்டுமே இதற்குப் பொறுப்பாகக் கருதப்படுகிறார் என்று அவர் கூறினார்.

பிசி-பிஎன்டிடி சட்டத்தின் கீழ் கர்ப்ப காலத்தில் கருவின் பாலினத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் சட்டவிரோதமானது. இந்தச் சட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1994இல் கொண்டு வரப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘பாலின விகிதம் இன்னும் சமமாகவில்லை’

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் கடந்தும் பாலின விகிதம் இன்னும் சமமாகவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

”சில பகுதிகளில் சட்டத்தைவிட சமூக விழிப்புணர்வு காரணமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிசி-பிஎன்டிடி சட்டம் மருத்துவர்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறுகிறார்.

“நீங்கள் மகப்பேறு மருத்துவர்களிடம் அல்லது கதிரியக்க நிபுணர்களிடம் பேசினால் அவர்கள் எப்படி துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். ஒருவேளை இரண்டு அல்லது ஐந்து சதவீத மருத்துவர்கள் இதைச் செய்யக்கூடும். ஆனால் ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகிறது,” என்று டாக்டர் அசோகன் குறிப்பிட்டார்.

ஐஎம்ஏ தலைவர் என்ற முறையில் மருத்துவத்தின் சிறந்த கொள்கைகளை அவர் ஊக்குவிக்க வேண்டும். அதை சட்டப்பூர்வமாக்குவது பற்றிப் பேசக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிசி-பிஎன்டிடி சட்டம் 1994ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. 2003ஆம் ஆண்டில் அது திருத்தப்பட்டு மிகவும் தீவிரமான முறையில் செயல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் நோக்கம் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் விதமாக கருக்களின் பாலினத்தைத் தெரிந்து கொள்வதை நிறுத்துவதாகும்.

அதேநேரம் இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

வர்ஷா தேஷ்பாண்டே மகாராஷ்டிராவில் பெண் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக ‘லேக் லட்கி அபியான்’ என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். கூடவே அவர் பிசி-பிஎன்டிடி-இன் இரண்டு குழுக்களிலும் உள்ளார்.

சட்டத்தை மாற்றுவதன் விளைவு

பெண்கள், பெண் சிசுக் கொலை, ஆண்-பெண் விகிதம், கரு, மருத்துவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிசி-பிஎன்டிடி சட்டத்தின் நோக்கம் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் விதமாக கருக்களின் பாலினத்தை தெரிந்துகொள்வதை நிறுத்துவதாகும்

“ஐஎம்ஏ தலைவர் மனதில் வந்ததைப் பேசுகிறார். இந்தப் பதவியின் கண்ணியத்தை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்” என்று வர்ஷா தேஷ்பாண்டே பிபிசியிடம் தெரிவித்தார்.

“ஒரு மருத்துவர் தவறாகச் சிக்க வைக்கப்பட்டால் அவர் புகார் செய்யலாம். ஆனால் மருத்துவர்கள் கருவின் பாலின பரிசோதனை செய்கிறார்கள் என்பதுதான் உண்மை,” என்றார் அவர்.

‘‘சட்டத்தை மீறி இதுபோன்ற செயல்களைச் செய்யும் ஊழல் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஐஎம்ஏ தலைவர் குரல் எழுப்ப வேண்டும். அதில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று வர்ஷா தேஷ்பாண்டே கூறினார்.

தனது கவலையை வெளிப்படுத்திய அவர், “இந்தப் பரிசோதனை சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டால் பெண்கள் அதற்கு வரிசையில் நிற்பார்கள். அவர்கள் வீட்டுக்குக்கூட செல்லமாட்டார்கள். மருந்துகளை உட்கொண்டு கருவைக் கலைத்துவிடுவார்கள். அதிக ரத்த இழப்பு காரணமாக அவர்கள் இறக்கும் நிலையும் ஏற்படக்கூடும் அல்லது அவர்கள் கருக்கலைப்பு செய்வார்கள். இதற்கான மருந்துகள் எளிதாகக் கிடைக்கின்றன. சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள கிளினிக்குகளில் போலி வைத்தியர்கள் இப்போதுகூட ரகசியமாக இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு கருக்கலைப்பு செய்து வருகின்றனர்,” என்று குறிப்பிட்டார்.

மருத்துவர்கள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வதேச மக்கள்தொகை அறிவியல் கழகத்தின் பேராசிரியர் எஸ்.கே.சிங் தெரிவித்தார்.

ஐஎம்ஏ தலைவர் மருத்துவர்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார். ஆனால் அதை பெண்களின் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் என்று எஸ்.கே.சிங் கூறினார். பேராசிரியர் எஸ்.கே.சிங் இந்த அமைப்பின் சர்வே ரிசர்ச் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.

சட்டம் பற்றிய சந்தேகம் என்ன?

பெண்கள், பெண் சிசுக் கொலை, ஆண்-பெண் விகிதம், கரு, மருத்துவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாலின விகிதத்தில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது

​​“சமூகத்தின் பல பகுதிகளில் இப்போதும் ஒரு மகனைப் பெற்றெடுக்க வேண்டுமென்று பெண்கள் மீது அழுத்தம் உள்ளது. முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை இல்லையென்றால், கருவை பரிசோதித்து, கருக்கலைப்பு செய்யப்படுகிறது,” என்று எஸ்.கே.சிங் கூறினார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாலின விகிதத்தில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. 1991இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 926 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், 2011இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 943 பெண் குழந்தைகளாக அந்த விகிதம் அதிகரித்தது.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4இல், 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் இருந்தபோது, ​​கணக்கெடுப்பு-5இல் அவர்களின் எண்ணிக்கை 929 ஆக இருந்தது. (0-5 வயதுடைய குழந்தைகளின் பாலின விகிதம்)

இருப்பினும், “இந்த அதிகரிப்பு மிகவும் சிறியது மற்றும் பெண் சிசுக் கொலையைத் தடுப்பதில் பிசி-பிஎன்டிடி சட்டம் பயனுள்ளதாக இல்லை” என்று டாக்டர் ஆர்.வி.அசோகன் சுட்டிக்காட்டுகிறார்.

“பெண் சிசுக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை மருத்துவ சமூகம் ஒப்புக்கொள்வதாக ஐஎம்ஏவின் மத்திய செயற்குழு இரண்டு வாரங்களுக்கு முன்பு இறுதி முடிவை எடுத்துள்ளது.” ஆனால் பிசி-பிஎன்டிடி சட்டத்தின் தற்போதைய வடிவம் மருத்துவத் துறையில் பணிபுரிபவர்களுக்கு அநீதி இழைப்பதாக டாக்டர் ஆர்.வி.அசோகன் கூறுகிறார்.

ஆனால் கருவின் பாலினம் தெரிந்து அதற்குப் பிறகு தம்பதி கருக்கலைப்பு செய்தால், பெண் சிசுக்கொலையை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வி இங்கு எழுகிறது.

ஏனெனில் இதுபோன்ற பல கிளினிக்குகள் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு, இதுபோன்ற கருக்கலைப்புகளைச் செய்கின்றன.

பாலின விகிதம் பற்றிய கவலை

பெண் குழந்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

​​“அல்ட்ராசவுண்ட் செய்து பார்க்கும்போது ​​அதன் அறிக்கையை டேட்டாபேஸில் பதிவேற்றி, கருவில் பெண் குழந்தை வளர்கிறது என்று சொல்லுங்கள். F படிவமும் அங்கு நிரப்பப்படுகிறது. இந்தத் தகவல்கள் அரசுக்குச் செல்கின்றன. கர்ப்பிணிப் பெண் மற்றும் கருவின் ஆரோக்கியம் குறித்து அவ்வப்போது பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கர்ப்பத்தின்போது எல்லாம் சரியாக இருந்தும் கருச்சிதைவு ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டால், அது ஏன் நடந்தது என்பது நமக்குத் தெரிந்துவிடும்,” என்று டாக்டர் ஆர்.வி.அசோகன் தெரிவித்தார்.

“ஒரு விஷயத்தை சொல்லுங்கள், குழந்தையின் பாலினமே தெரியாதபோது, ​​​​அது பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு செய்யப்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்ற வாதத்தை அவர் முன்வைத்தார்.

“கரு பற்றிய தரவுகள் மாநில அரசுக்குச் செல்வதால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான அவற்றின் பொறுப்பு அதிகரிக்கிறது. இது பெண் சிசுக் கொலையைக் குறைக்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை. பெண் சிசுக்கொலை சட்டவிரோதமானது, ஆனால் கருவின் பாலினத்தை தெரிந்துகொள்வது அப்படி இருக்கக்கூடாது,” என்றார் டாக்டர் ஆர்.வி.அசோகன்.

அதேநேரம் ​​“பிசி-பிஎன்டிடி சட்டத்தால் கடந்த 15 ஆண்டுகளில் பாலின விகிதத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை டாக்டர் அசோகனின் முன்மொழிவு தலைகீழாக மாற்றும் அபாயம் உள்ளது. இது கிரிமினல் சிந்தனை. டாக்டர் அசோகன் மருத்துவர்களை மட்டுமே காப்பாற்ற முயல்கிறார்” என்று குற்றம் சாட்டுகிறார் பேராசிரியர் எஸ்.கே.சிங்.

“இன்று ஒரு பெண்ணுக்கு இரண்டு மகள்கள் இருந்தால், அவர்களில் 63 சதவீதம் பேர் மூன்றாவது குழந்தையை விரும்புவதில்லை. தெற்கில் இது 80 சதவீதம். வடக்கில் இது 60 சதவீதம் வரை உள்ளது. இந்தச் சட்டம் செய்துள்ள உதவியால் மக்கள்தொகை ஆய்வாளர்களான நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார் அவர்.

‘பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்’ திட்டத்தால் என்ன பயன்?

பெண்கள், பெண் சிசுக் கொலை, ஆண்-பெண் விகிதம், கரு, மருத்துவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2015இல் பிரதமர் மோதி ’மகளைக் காப்பாற்றுங்கள், மகளைப் படிக்க வையுங்கள்’ திட்டத்தை ஹரியாணாவின் பானிபத்தில் தொடங்கி வைத்தார்.

“பொருளாதார நலன்களுக்காக கருவின் பாலினத்தை மருத்துவர் பரிசோதனை செய்வார். ஆனால் கருவின் உயிரைக் காப்பாற்றுவது என வரும்போது ​​​​அதை அரசு செய்ய வேண்டும் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை,” என்று பேராசிரியர் எஸ்.கே.சிங் கூறினார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நாடாளுமன்றக் குழு மக்களவையில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தபோது, ​​’பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (மகளைக் காப்பாற்றுங்கள், மகளைப் படிக்க வையுங்கள்)’ திட்டத்தின் கீழ் 80 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தது.

பிரதமர் நரேந்திர மோதி 2015ஆம் ஆண்டு இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் நோக்கம் குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்துதல், பாலின அடிப்படையிலான பாகுபாடுகளை அகற்றுதல் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும்.

ஆரம்பத்தில் இதற்கெனெ 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு அவ்வப்போது அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்திய சமூகத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்ற சிந்தனை இப்போது வளர்ந்து வருகிறது. ஆனால் பாகுபாட்டின் வேர்கள் மிகவும் ஆழமாக இருப்பதால், சிந்தனையில் முழுமையான மாற்றம் ஏற்பட இன்னும் காலம் எடுக்கும்.

பிசி-பிஎன்டிடி சட்டத்தின் காரணமாக, ஹரியாணா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளதாக வர்ஷா தேஷ்பாண்டே கூறுகிறார்.

‘பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்’ என்பது அழகான முழக்கம். பெண் குழந்தைகள் அதிகாரம் பெற்றால் சமுதாயத்தில் மாற்றம் தெரியும். இது பெரிய பணி. ஆனால் இதற்கு மருத்துவர்களை ஏன் பொறுப்பாக்க வேண்டும்?” என்று டாக்டர் ஆர்.வி.அசோகன் கேள்வி எழுப்பினார்.

தனது முன்மொழிவை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாகவும், சட்டத்தை மாற்ற அரசு விரும்பவில்லை என்றால் மருத்துவர்களைப் பொறுப்பாக்கும் பிரிவை அதிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.