- எழுதியவர், பார்கவா பரிக்
- பதவி, பிபிசி குஜராத்தி
குஜராத் தலைநகர் காந்திநகரின் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகம். மக்கள் காலையிலிருந்து குறுகிய படிக்கட்டுகளில் அமர்ந்து தங்கள் முறை வருவதற்காகக் காத்திருக்கிறார்கள். பெய்லி சீருடையில் நிற்கும் ஒரு நபர் கூச்சலிட, மக்கள் தங்கள் வழக்கறிஞர்களுடன் ஓடுகிறார்கள். நீதிபதி நாற்காலியில் அமர்ந்திருப்பவர் இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பு வழங்குகிறார்.
ஒரு சாதாரண நீதிமன்றத்தைப் போலவே வழக்கமான வேலைகள் நடக்கின்றன. ஆனால், மாலையில் எல்லாம் மாறுகிறது. மாலையில் நீதிமன்ற வேலை முடிந்ததும், வாடிக்கையாளருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்க நீதிபதி பணம் கேட்கிறார். வாடிக்கையாளருடன் ஒப்பந்தம் ஏற்பட்டால் பிறகு அவருக்குச் சாதமாகத் தீர்ப்பு வழங்கப்படும்.
சினிமா கதையுடன் போட்டிபோடும் அளவுக்கு இருக்கும் இந்தச் சம்பவம், குஜராத் தலைநகரில் உண்மையாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு ‘போலி நீதிமன்றம்’ ஒன்று வழக்குகளை நடத்தி தீர்ப்பு வழங்கி வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதில், கைது செய்யப்பட்ட போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்பவரை அக்டோபர் 22ஆம் தேதியன்று போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர் தன்னை மத்தியஸ்தர் என்று நீதிபதி முன்பாகக் கூறினார்.
அதுமட்டுமின்றி, தன்னை போலீசார் தாக்கியதாகவும், குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்ததாகவும் நீதிபதி முன்பாகப் புகாரளித்தார். அதையடுத்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
குஜராத்தில் கடந்த காலங்களில், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறிய போலி உயரதிகாரிகள், முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறிய போலி உயரதிகாரிகள், போலி அரசு அலுவலகங்கள், போலி போலீஸ் அதிகாரிகள் பிடிபட்டுள்ள நிலையில், தற்போது இந்த ‘போலி நீதிமன்றம் மற்றும் போலி நீதிபதி” சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
போலி நீதிபதி எப்படி போலி நீதிமன்றத்தை நடத்தி பிடிபட்டார்? மக்களை எப்படி ஏமாற்றினார்? இதுகுறித்து வழக்கறிஞர்களும் வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரியும் பிபிசியிடம் விவரித்தனர்.
500 தீர்ப்புகள் வழங்கிய போலி நீதிமன்றம்
மோரிஸ் கிரிஸ்டியன் இந்த போலி நீதிமன்றத்தைக் கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார்.
காவல்துறை வெளியிட்ட தகவல்களின்படி, மோரிஸ் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் ஆமதாபாத், வடோதரா, காந்தி நகரில் நிலத் தகராறுகளைக் கையாளும் மத்தியஸ்தராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
காந்திநகரில் தொடங்கிய போலி நீதிமன்றம் குறித்த புகார் எழுந்ததால் காந்திநகரில் உள்ள செக்டர் 24 பகுதிக்கு நீதிமன்றத்தை மோரிஸ் மாற்றி அமைத்ததாக ஆமதாபாத் மண்டலம்-2 காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீபால் ஷேஷ்மா பிபிசியிடம் பேசுகையில் கூறினார்.
ஆமதாபாத், வடோதரா, காந்தி நகரில் நிலத் தகராறு குறித்த 500 வழக்குகளில் கடந்த ஓராண்டில் தீர்ப்பளித்துள்ளதாக மோரிஸ் மாநகர நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோரிஸ் கிரிஸ்டியன் யார்?
சாமுவேல் ஃபெர்னாண்டஸ், மோரிஸ் கிரிஸ்டியனின் பக்கத்து வீட்டுக்காரர். அவர் ஆமதாபாத் நகரில் சாபர்மதி பகுதியில் காபிர்சௌக் என்ற இடத்தில் வசித்து வருகிறார்.
“சிறு வயதிலிருந்தே மோரிஸின் கனவுகள் பெரிதாக இருந்தன. மோரிஸின் தாய் கோவாவை சேர்ந்தவர், அவரது தந்தை ராஜஸ்தானை சேர்ந்தவர்” என்றார் சாமுவேல் ஃபெர்னாடிஸ்.
மோரிஸ் பிறரிடம் இருந்து கடனாகப் பெறும் பணத்தைத் திருப்பித் தந்ததில்லை என்று அவர் தெரிவித்தார்.
“இந்தப் பழக்கம் காரணமாகவே சாபர்மதியில் பலர் அவரிடம் இருந்து தள்ளியே இருந்தனர். மோரிஸின் குடும்பம் அதன் பிறகு வேறு இடத்திற்கு மாறிவிட்டனர். சில ஆண்டுகள் கழித்து அவரைச் சந்தித்த போது, வெளிநாட்டில் படித்துவிட்டு தற்போது நீதிபதியாகி இருப்பதாகக் கூறினார்” என்றார்.
சாமுவேலின் கூற்றுப்படி, காரில் செல்வது, தனது பைகளைத் தூக்கிச் செல்ல தனியாக ஆட்கள் என மோரிஸ் ஒரு பெரிய அதிகாரி போல் வாழ்ந்துள்ளார்.
போலி நீதிமன்றம் எப்படி உருவாக்கப்பட்டது?
கடந்த 2015ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் சுமையைக் குறைக்க, அரசு மத்தியஸ்தர்கள் பலரை நியமித்தது. இரு தரப்பினருக்கும் இடையே சமாதானம் செய்துகொள்ள விருப்பம் இருக்கும் வழக்குகளை அவர்களைக் கொண்டு தீர்த்து வைத்தனர்.
அந்த நேரத்தில் மோரிஸ் தானும் ஒரு மத்தியஸ்தர் என்று ‘போலியாக ஒரு சான்றிதழைப் பெற்று, இந்த போலி நீதிமன்றத்தை’ தொடங்கியுள்ளார். இந்தத் தகவல்களை அரசு வழக்கறிஞர் வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முதலில் காந்திநகர் செக்டார் 21 பகுதியில் அவர் நீதிமன்றத்தை உருவாக்கியுள்ளார். அங்கு நீதிபதி அமர்வது போன்ற ஓர் இருக்கை, இரண்டு தட்டச்சுப் பணியாளர்கள், ஒரு பெய்லி ஆகியோரை பணிக்கு அமர்த்திக் கொண்டு நீதிமன்றத்தைத் தொடங்கி, நிலத் தகராறு வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
மத்தியஸ்தரின் பணி என்ன?
நீதிமன்றங்களின் சுமையைக் குறைப்பதற்காக வழக்கு விசாரணைகள் இல்லாமல் இரு தரப்பும் ஒரு சமாதானமான தீர்வை எட்ட முடியும் என்ற நிலை நிலவினால், அதற்கு வழி வகை செய்து தருவது மத்தியஸ்தரின் பணியாகும்.
இதுகுறித்து சமூக நல இந்திய கவுன்சிலின் சட்டத் தலைவர் வழக்கறிஞர் தீபக் பட் கூறுகையில், “மத்தியஸ்தர்கள் விதியின் கீழ் சரத்து (article) 7 மற்றும் 89-இன் கீழ் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இரு தரப்பினருக்கும் விஷயங்களை எடுத்துக் கூறி ஒரு சமாதானத்தை எட்ட முயல்வதே மத்தியஸ்தரின் பணி. இரு தரப்பும் ஒப்புக்கொண்டு மத்தியஸ்தரும் கையெழுத்திட்டால் மட்டுமே மத்தியஸ்தம் செய்யப்பட்ட தீர்வு செல்லும். இந்தத் தீர்வு, நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். மத்தியஸ்தரே நீதிமன்றம் போல தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் வழங்க முடியாது” என்றார்.
மோரிஸுக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டவுன், செக்டார் 21இல் இருந்த நீதிமன்றத்தை செக்டார் 24க்கு அவர் மாற்றியுள்ளார்.
“புதிய இடத்தை வாடகைக்கு எடுக்கும் முன், அங்குள்ள நாற்காலி, மேஜைகளை தனக்கு ஏற்றப்படி மாற்றிக் கொள்வேன் என்று கூறியுள்ளார்” என்று காவல் துணை ஆணையர் ஸ்ரீபால் சேஷமா தெரிவித்தார்.
மோரிஸுக்கு எதிரான வழக்குகள்
மோரிஸுக்கு எதிராக ஏற்கெனவே சில சந்தர்ப்பங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆமதாபாத் குற்றப்பிரிவில், மணிநகர் மற்றும் சந்த்கேதாவில் அவர் மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குஜராத் பார் கவுன்சில் அவர் மீது புகார் கொடுத்துள்ளது.
அவரிடம் இருந்தது போலிச் சான்றிதழ் என்று தெரிய வந்தபோது அவர் மீது குற்றப்பிரிவில் புகார் அளித்ததாகக் கூறுகிறார் குஜராத் பார் கவுன்சிலின் ஒழுங்குக் குழுத் தலைவர் வழக்கறிஞர் அனில் கெல்லா.
பிபிசியிடம் அவர் பேசுகையில், “அவர் வெளிநாட்டில் படித்ததாக அங்கிருந்து பெற்ற சான்றிதழைக் காண்பித்தார். அந்தச் சான்றிதழை வைத்து எந்த நாட்டில் வேண்டுமானாலும் வழக்கறிஞராகப் பணிபுரியலாம் என்றார். அப்படி வெளிநாட்டில் படித்து மதிப்புமிக்க ஒரு சான்றிதழைப் பெற்றிருந்தால் அவர் ஏன் உச்சநீதிமன்றத்திலோ உயர்நீதிமன்றத்திலோ பணிபுரியாமல் கீழ் நீதிமன்றத்தில் பணிபுரிகிறார் என்பதுதான் எங்களுக்கு வந்த முதல் சந்தேகம்” என்றார்.
“அவர் கொடுத்த சான்றிதழைச் சரிபார்த்தபோது அது போலி என்பது தெரிய வந்தது. எனவே குற்றப்பிரிவில் அவர் மீது புகார் கொடுத்தோம்,” என்றார்.
“வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகாத போதுதான், அவர் மும்பையில் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஒன்பது பாஸ்போர்ட்டுகள் மற்றும் போலி விசாக்கள் வைத்திருந்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் போலி நீதிமன்றம் நடத்தி வந்தார் என்பது அப்போது தெரியாது” என்கிறார் அவர்.
மோசடி குற்றத்திற்காக 2012இல் சந்த்கேதா காவல் நிலையத்திலும் 2015ஆம் ஆண்டு மணிநகர் காவல் நிலையத்திலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆமதாபாத் காவல் துறையினர் தெரிவித்தனர்.
மோரிஸ் கிறிஸ்டியனை சிக்கவைத்த மணிநகர் வழக்கு
ஆமாதாபாத்தை சேர்ந்த உமாபென் பட்டேல், 1970இல் ஷைலேஷ் பட்டேலை திருமணம் செய்தார். இந்தத் திருமணத்தில் அவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். பின்னர் 1986இல் அவர்கள் விவாகரத்து பெற்றனர். அதற்குப் பிறகு அவர் 1986இல் மும்பையின் போரிவலியில் வசிக்கும் பொடாட்டை சேர்ந்த தல்சுக் பட்டேலை திருமணம் செய்துகொண்டார்.
தல்சுக் பட்டேல், உமாபென்னுடைய இரண்டு மகள்களையும் 1988ஆம் ஆண்டு சட்டப்படி தத்தெடுத்தார். முதல் திருமணத்தில் பெற்ற விவாகரத்து பணத்தில் இருந்து உமாபென் ஆமதாபாத்தில் உள்ள மணிநகரில் ஒரு வீடு வாங்கினார்.
கடந்த 1994ஆம் ஆண்டு, உமாபென் தல்சுக்குடன் குவைத் சென்றார். ஆனால், இருவருக்கும் இடையே இணக்கமில்லை. இதனால் உமாபென் 1996இல் மீண்டும் விவாகரத்து பெற்றார். குடும்ப நீதிமன்றம் அவர்களின் பராமரிப்புக்காக மாதம் ரூ.5000 நிர்ணயம் செய்தது. இந்நிலையில், சகோதரியின் உடல்நிலை மோசமடைந்ததால், 2013இல், ஆமதாபாத்தை விட்டு, மகனுடன் புனே சென்றார். இந்தச் சூழ்நிலையில், குவைத்தில் இருந்து வந்த தல்சுக் பட்டேல், மோரிஸ் கிறிஸ்டியனின் உதவியை நாடி, அவரைத் தவறான தீர்ப்பு வழங்க வைத்து, சட்டவிரோதமாக 2015இல் மணிநகரிலுள்ள உமாபென்னின் வீட்டைக் கைப்பற்றினார்.
மோரிஸ் கிறிஸ்டியன் ஒரு வழக்கறிஞர்கூட இல்லை என்ற உண்மை உமாபென்னுக்கு தெரிய வந்தபோது, அவர் மணிநகர் காவல் நிலையத்தில் மோசடிப் புகார் அளித்தார். இந்த வழக்கில், மோரிஸ் கிறிஸ்டியன் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பிறகு, காந்திநகரில் உள்ள செக்டார் 21இல் இருந்து தனது அலுவலகத்தை மாற்றி, செக்டார் 24இல் உள்ள வணிக வளாகத்தில் இரண்டு அலுவலகங்களை வாடகைக்கு எடுத்துள்ளார்.
வணிக வளாகத்தின் உரிமையாளரைச் சமாதானப்படுத்தி, ஐந்து மாத வாடகையை முன்தொகையாகக் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டார். பின்னர் அங்கு அவர் அமைத்த போலி நீதிமன்றத்தில் பெய்லி, தட்டச்சு செய்பவர் போன்ற ஊழியர்களைப் பணியமர்த்தி, போலி நீதிமன்றம் தொடங்கப்பட்டது.
அங்கிருந்து அவர் தீர்ப்புகளை வழங்கினார். இருமுறை போலீசார் வந்து அவரது அலுவலகத்திற்குப் பதிலாக மற்றோர் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
நில உரிமையாளர் என்ன சொல்கிறார்?
காந்தி நகரிலுள்ள செக்டார்-24இல் ஜிகர் அமி வணிக வளாகத்தை கட்டிய ஜிக்னேஷ் சோனி, அந்தக் கட்டடத்தை மோரிஸ் கிறிஸ்டியன் என்பவருக்கு குத்தகைக்குக் கொடுத்ததில் இருந்தே தனது பிரச்னைகள் தொடங்கியதாகக் கூறினார்.
பிபிசியிடம் பேசிய ஜிக்னேஷ் சோனி, “எனது கட்டடத்தில் பின்புற நுழைவாயில் இருப்பதால் இரண்டாவது மாடியில் வாடகை நன்றாக இல்லை. ஒரு பெரிய வழக்கறிஞர் ஓர் அலுவலகத்தை 30,000 ரூபாய் வாடகைக்கு எடுக்க விரும்புவதாகத் எனக்குத் தெரிந்த தரகர் கூறினார். அவர் எனக்கு 5 மாத வாடகையை முன்கூட்டியே கொடுத்தார். 11 மாத குத்தகைக்கு முன்கூட்டியே கையெழுத்திட்டார்,” என்று நடந்ததை விவரித்தார்.
மேற்கொண்டு பேசிய சோனி, “மோரிஸ் கிறிஸ்டியன் தனது பணி மிகவும் பெரியது என்றும், ஆகவே, தனக்கான நாற்காலிகளைத் தானே செய்து கொள்வதாகவும் கூறினார். நானும் சரி என்றேன். ஆனால், அந்த இடத்தில் போலி நீதிமன்றம் அமைப்பார்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்?” என்று கூறினார்.
ஆனால், ஜிக்னேஷ் சோனியின் இடத்திற்குத் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. “அவர்களது முன்தொகை என்னிடம் இருந்தது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை அவர் அங்கு வேலை செய்தார். அவரிடம் 15 ஊழியர்கள் இருந்தனர். ஆனால், நான்கு மாதங்கள் கடந்த நிலையில் திடீரென அலுவலகம் மூடப்பட்டது. போலீசார் மோரிஸை தேடி வந்து, அவருடைய அலுவலகத்திற்கு சீல் வைத்துவிட்டுச் சென்றனர்,” என்று சோனி கூறினார்.
போலி நீதிமன்ற கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
ஆமதாபாத்தில் உள்ள பல்டியில் இருக்கும் தாகோர்வாஸில் வசித்து, சாதாரண தொழிலாளியாக வேலை செய்து வந்த பாபு தாக்கூருக்கு, நிலம் தொடர்பாக ஆமபதாபாத் மாநகராட்சியுடன் சச்சரவு எழுந்துள்ளது.
பிபிசியுடனான தொலைபேசி உரையாடலில், பாபு தாக்கூர், “நான் ஒரு சாதாரண தொழிலாளி. எனது நிலம் தொடர்பாக சச்சரவு உள்ளது. இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல என்னிடம் பணம் இல்லை. எனவே நாங்கள் மோரிஸ் கிறிஸ்டியன் என்பவரின் உதவியைப் பெற்றோம்.”
“அந்த நிலத்தின் மதிப்பு ரூ.200 கோடி. அந்த நிலத்தை உங்களுக்குத் திருப்பித் தருகிறேன் என்று மோரிஸ் எங்களிடம் கூறினார். நிலத்திற்கான பணம் வரும்போது அதற்குக் கட்டணமாக 30 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு சதவீதம் ஆவணத் தொகை கட்ட வேண்டும் என்றார். நானும் சரி என்றேன். அதனால் ஆமதபாத் ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் பணியமர்த்தப்பட்ட வழக்கறிஞர் சொன்னது போலக் கையெழுத்திட்டேன். கடந்த 2019இல், இந்த நிலம் எனக்குச் சொந்தம் என்று அவர் எனக்கு உத்தரவிட்டார்,” என்று கூறினார்.
அரசு வழக்கறிஞர் வி.பி.சேத், பிபிசியுடன் பேசியபோது, “இந்த வழக்கை நான் பார்த்தபோது, பாபு தாக்கூரின் நிலத்தை அரசு சட்டவிரோதமாக எடுத்துக் கொண்டதாக எழுதப்பட்டிருந்தது. எட்டு முதல் பத்து வரிகள் வரை மட்டுமே இருந்த அந்த உத்தரவில் நிலம் இருந்த பகுதி, நில உரிமையாளர் விவரம் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆர்டரில் ஸ்டாம்ப் பேப்பர் எதுவுமில்லை,” என்று கூறினார்.
மேலும், “போலி நீதிமன்றத்தில் சோதனையிட்டபோது, மோரிஸ் கிறிஸ்டியனுக்கு மத்தியஸ்தர் பதவி இல்லையென்பது தெரிய வந்தது. ஏனெனில், உயர்நீதிமன்றத்தின் 11வது பிரிவின்கீழ் மத்தியஸ்தரை நியமிக்க எந்த உத்தரவும் இல்லை. அவரே விரைவு தபாலில் சம்பந்தப்பட்ட தரப்பினரை ஆஜராகும்படி உத்தரவிடுவது வழக்கம்,” என்றார்.
மேலும், பாபு தாக்கூரின் வழக்கறிஞராகச் செயல்பட்ட கிறிஸ்டினா கிறிஸ்டியனிடம் குறுக்கு விசாரணை நடத்தியபோது, அவர் சிவில் வழக்கறிஞர் அல்ல, குற்றவியல் வழக்கறிஞர் என்பதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதாகவும் வி.பி.சேத் கூறினார்.
“ஒரே சமூகத்தைச் சேர்ந்த மோரிஸும் கிறிஸ்டினாவும் இணைந்து இதுபோன்ற நான்கு வழக்குகளைக் கையாண்டுள்ளனர். மோரிஸ் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அரசு நிலத்தை அபகரிக்க போலி நீதிபதியை நியமித்துள்ளது தெளிவாகத் தெரிந்தது,” என்றும் அவர் தெரிவித்தார்.
வி.பி.சேத் கூற்றுப்படி, இந்த அனைத்து ஆதாரங்களின் அடிப்படையிலும், சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஜெயேஷ் சௌடியா, ‘போலி நீதிமன்றம்’ அமைத்து, போலி உத்தரவு பிறப்பித்த மோரிஸ் கிறிஸ்டியன் மீது உடனடியாக மோசடி மற்றும் சதி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.