ரேஷன் கடைகளில் வங்கி சேவை, மினி ஏ.டி.எம் வழங்க திட்டம் – சாத்தியமா? இதிலுள்ள சவால்கள் என்ன?

ரேஷன் கடை, தமிழ்நாடு அரசு, சேமிப்பு, வங்கிச் சேவை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரேஷன் கடைகளில் மினி ஏ.டி.எம் கொண்டு வரும் திட்டம் உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஐ.ஏ.எஸ் கூறுகிறார் (கோப்புப் படம்)
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

ரேஷன் கடைகள் மூலமாக வங்கி சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

மேலும், ரேஷன் கடைகளில் மினி ஏ.டி.எம் கொண்டு வரும் திட்டம் உள்ளதாகவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஐ.ஏ.எஸ் கூறுகிறார்.

ஆனால், இந்தத் திட்டம் குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை என்கின்றன, கூட்டுறவு ஊழியர் சங்கங்கள். அதோடு, ஊக்கத்தொகை, போனஸ் உள்பட அரசின் சலுகைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக ரேஷன் ஊழியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், ரேஷன் கடை ஊழியர்கள் வங்கி சேவைகளை நேரடியாக வழங்க மாட்டார்கள் என்றும் சேமிப்புக் கணக்கு தொடங்குவது உள்ளிட்ட வசதிகளை மட்டுமே செய்து கொடுப்பார்கள் என்றும் கூறினார்.

மேலும், ஊக்கத்தொகை, போனஸ் குற்றச்சாட்டு குறித்துப் பேசிய அவர், அது அரசின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

ரேஷன் கடைகளில் வங்கி சேவைத் திட்டம் சாத்தியமா? இந்தத் திட்டத்தால் யாருக்கு பலன்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்குப் பயிர்க்கடன், கால்நடை வளர்ப்புக் கடன், உரக்கடன் உள்படப் பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு 18.36 லட்சம் விவசாயிகளுக்கு 15,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுகிறவர்களின் சராசரி வயது 50 ஆக உள்ளதால், இளைஞர்களை அதிகம் ஈர்க்கும் வகையில் வங்கி சார்ந்த திட்டங்களைக் கொண்டு செல்லும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை கூறுகிறது.

அதன் ஒரு பகுதியாக, ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி வங்கி சேவைகளை மக்களுக்கு வழங்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

ரேஷன் கடை, தமிழ்நாடு அரசு, சேமிப்பு, வங்கிச் சேவை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல ரேஷன் கடைகள் வாடகைக் கட்டடங்களிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளன என்கிறார் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி

இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஐ.ஏ.எஸ், மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது,

  • வங்கியியல் திட்டங்களை வகுத்து இளைஞர்களை ஈர்க்கும் வகையில் கூட்டுறவு நிறுவனங்களில் அவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ரேஷன் கடைகள் மூலமாக கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு மற்றும் கடன் சேவை மக்களைச் சென்றடையும் வகையில் சேமிப்புக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அனைத்து ரேஷன் கடைகளிலும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்புத் திட்டங்கள், நிரந்தர வைப்புத் திட்டங்கள், கடன் திட்டங்கள் குறித்த கையேடு விநியோகிக்கப்பட வேண்டும்.
  • ரேஷன் கடை ஊழியர்களைக் கொண்டு சேமிப்புக் கணக்கு விண்ணப்பத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்.
  • சேமிப்பு கணக்குதாரர்களுக்கு கூட்டுறவு வங்கிக் கடன் திட்டங்கள், அரசின் கடன் திட்டங்கள், வங்கியின் மின்னணு பரிவர்த்தனை வசதி, ஏ.டி.எம் கார்டு ஆகிய வசதிகளை வழங்க வேண்டும்.

மினி ஏ.டி.எம் அமைப்பது சரியா?

ரேஷன் கடை, தமிழ்நாடு அரசு, சேமிப்பு, வங்கிச் சேவை

படக்குறிப்பு, தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி

“சேமிப்புக் கணக்குகள் மூலம் பெறப்படும் பணம் அரசின் திட்டங்களுக்குப் பயன்படும் என்பதால் இதை வரவேற்கிறோம். ஆனால், இதில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய விஷயங்களும் உள்ளன” என்கிறார், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக் கணக்கை அதிகப்படுத்துவது அரசின் நோக்கமாக உள்ளது. ஆனால், அங்கு மினி ஏ.டி.எம் உள்பட பரிவர்த்தனைகளை நடத்துவது சரியான ஒன்றாக இருக்காது. காரணம், பல ரேஷன் கடைகள் வாடகைக் கட்டடங்களிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளன. இதுகுறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கான நேரடித் தொடர்பு மையமாக ரேஷன் கடைகள் உள்ளதாகக் கூறும் கிருஷ்ணமூர்த்தி, “கிராமப்புற மக்களுக்கு வங்கி சேவைகள் சரியாகச் சென்று சேர்வதில்லை. விவசாயிகள் மட்டுமே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களால் மட்டும்தான் வேளாண் கடன்களைப் பெற முடிகிறது.

இதர கிராமப்புற மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாகக் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என அரசு நினைக்கிறது. அதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்” என்கிறார்.

விவசாயிகள் அல்லாத பொதுமக்கள் நகைக்கடன் உள்பட இதர கடன்களைப் பெறுவதற்கு நகர கூட்டுறவு வங்கிகள் அல்லது வணிக வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

ஊக்கத்தொகையில் பாரபட்சமா?

ரேஷன் கடை, தமிழ்நாடு அரசு, சேமிப்பு, வங்கிச் சேவை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தத் திட்டம் குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை என்கின்றன கூட்டுறவு ஊழியர் சங்கங்கள்

அரசின் வங்கி சேவை முயற்சி குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். “ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு கொடுக்கும்போது அட்டைக்கு தலா 50 காசுகளை ஊக்கத் தொகையாக அரசு கொடுக்கிறது. 1000 கார்டுகள் உள்ள கடையில் பொங்கல் பரிசை 10 நாள்கள் விநியோகித்தால்தான் 500 ரூபாய் கிடைக்கும்.

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கான ஊதியம் குறித்து அமைக்கப்பட்ட சக்தி சரவணன் குழு, ‘சிறப்புப் பணிகளின்போது அட்டைக்கு ஐந்து ரூபாய் தர வேண்டும்’ எனப் பரிந்துரை செய்தது. ஆனால் 50 காசுகள் மட்டுமே தரப்படுகிறது,” என்று கூறினார்.

மேலும், “தற்போது வங்கி சேமிப்புக் கணக்குக்கு 5 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளனர். ரேஷன் பணிகளைத் தாண்டி இதில் ஈடுபடுவதால் குறைந்தபட்சம் பத்து ரூபாயாக உயர்த்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, “அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும் பணியில் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டாலும் அவர்களுக்கான போனஸ் உள்பட அரசின் சலுகைகள் சரியாக வழங்கப்படுவதில்லை” என்கிறார்.

போக்குவரத்து துறை, மின்வாரியம், மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆகிய துறைகளில் லாப, நஷ்டம் பார்க்காமல் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டுறவுத் துறையில் மட்டும் லாப, நஷ்டம் பார்த்து போனஸ் கொடுக்கப்படுவதாக அவர் கூறுகிறார்.

“லாபம் வரும் கடைகளின் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸும் நஷ்டம் வரும் கடைகளுக்கு 10 சதவீத போனஸும் கொடுக்கின்றனர். ஒரே துறை என்றாலும் பாரபட்சம் காட்டப்படுகிறது” என்கிறார்.

கூட்டுறவுத் துறை சொல்வது என்ன?

ரேஷன் கடை, தமிழ்நாடு அரசு, சேமிப்பு, வங்கிச் சேவை

பட மூலாதாரம், www.tncu.tn.gov.in

படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஐ.ஏ.எஸ்

“ரேஷன் கடைகளில் நேரடி வங்கி சேவைகள் நடத்தப்படுமா?” என தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

அவர், “வங்கி சேவைகளை நேரடியாக ரேஷன் கடை ஊழியர்கள் வழங்க மாட்டார்கள். மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பாக சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது உள்ளிட்ட வசதிகளை மட்டுமே செய்து தருவார்கள். குறிப்பாக, கணக்கு தொடங்குவது, வைப்புத் தொகை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்ற வசதிகள் செய்து தரப்படும்” என்றார்.

அதேநேரம், ரேஷன் கடைகளில் மினி ஏ.டி.எம் வசதிகள் கொண்டு வரப்பட உள்ளதாகக் கூறும் சுப்பையன், “ரேஷன் கடைகளின் பாதுகாப்பு என்பது பெரிய பிரச்னையாக இருக்க வாய்ப்பில்லை” என்றார்.

அதோடு, கிராமப்புறங்களைப் போல, நகர்ப்புற மக்களுக்கும் இந்தத் திட்டத்தால் அதிக பலன் கிடைக்கும் என்றும் அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு ரேஷன் கடைகள் உதவியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

வங்கி சேவையைப் பொறுத்தவரை, கிராமம், நகரம் என்ற பிரிவினை பெரிதாக இல்லையென்றும், தற்போதே சில இடங்களில் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார் சுப்பையன் ஐ.ஏ.எஸ்.

ஊக்கத்தொகை, போனஸ் ஆகியவற்றில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுவது குறித்து பதிலளித்த அவர், “அவ்வாறு பாரபட்சம் காட்டப்படுவது இல்லை. கூடுதலாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். அது அரசின் பரிசீலனையில் இருக்கிறது” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.