தபால் துறைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

அந்நியன் திரைப்படத்தில் 50 பைசா திருப்பி தராத நபரிடம் கதாநாயகன் சண்டை போடும் போது, “50 பைசா தானே. அதை திருப்பி தராவிட்டால் குற்றமா?” என்று கேட்பார். பல லட்சம் பேரிடம் 50 பைசாக்களை எடுத்துக் கொண்டே இருந்தால் அது குற்றமில்லையா என்று கதாநாயகன் எதிர் கேள்வி கேட்பார்.

அதே போன்ற ஒரு சம்பவத்தில், பதிவு தபால் அனுப்பிய நுகர்வோர் ஒருவருக்கு 50 பைசா திருப்பித் தராத தபால் துறைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம்.

சென்னைக்கு அருகே செங்கல்பாட்டு மாவட்டம் பொழிச்சலூரில் உள்ள தபால் நிலையத்தில் 29 ரூபாய் 50 பைசாவுக்கு பதிவு தபால் அனுப்பிய மானஷாவிடம் ரூ.30 வசூல் செய்யப்பட்டது. ஆனால் புழக்கத்தில் இல்லாததால் 50 பைசா திருப்பித் தரப்படவில்லை. அவர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துகிறேன் என்று கூறியதையும் மென்பொருள் கோளாறு காரணமாகத் தபால்துறை மறுத்துவிட்டது.

இதுகுறித்து மானஷா காஞ்சிபுரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட 50 பைசா கூடுதலாக வசூலிக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் தபால் துறைக்கு காஞ்சிபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஆனால், “ஐம்பது பைசா புழக்கத்தில் இல்லாததால் 1 ரூபாயாக வரவு வைக்கப்படுகிறது. தபால் ஊழியர்கள் தவறு செய்யவில்லை” என்று பிபிசி தமிழிடம் பேசிய தபால் துறை அதிகாரி தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காஞ்சிபுரம் வழக்கில் என்ன நடந்தது?

சென்னை கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த மானஷா என்பவர், பொழிச்சலூரில் உள்ள தபால் நிலையத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி சென்றுள்ளார்.

அங்கு அவர் பதிவுத் தபால் ஒன்றை அனுப்பியுள்ளார். அதற்கு ஏற்பு (acknowledgement) கட்டணமாக 3 ரூபாய், பதிவுக்கட்டணம் 17 ரூபாய், சரக்கு மற்றும் சேவை வரி 4.50 காசுகள் என மொத்தம் ரூ.29.50 ஆனதாக அங்கிருந்த தபால் ஊழியர் கூறியுள்ளார்.

தற்போது 50 பைசா புழக்கத்தில் இல்லாததால் 30 ரூபாயை முழுதாகச் செலுத்துமாறும் அவர் கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த மானஷா, “அவ்வாறு செலுத்த முடியாது. டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகப் பணம் அனுப்புகிறேன்” எனக் கூறியுள்ளார். ஆனால், “அதற்கான வசதிகள் இங்கு இல்லை” எனக் கூறிவிட்டு 30 ரூபாயை அந்த ஊழியர் வசூலித்துள்ளார்.

தபால் நிலையத்தின் செயலை விரும்பாத மானஷா, கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தபால் துறைக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதற்குப் பதில் அளித்த தபால் துறை, 50 பைசா என்பதை 1 ரூபாயாக (Round off) தபால் நிலைய கணினி தன்னிச்சையாக எடுத்துக் கொள்வதாகவும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனை சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கியிருந்தது.

இந்தப் பதிலில் திருப்தியடையாத மானஷா, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

‘நியாயமற்ற சுரண்டல்’

தபால் துறைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, பொழிச்சலூர் தபால் நிலையம்

அவர் தனது மனுவில், மக்களை முட்டாளாக்கும்விதமாக தபால்துறை செயல்படுவதாகவும், லட்சக்கணக்கான மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகையால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், “இந்த ஐம்பது பைசாக்களால் கறுப்புப் பணம் எவ்வளவு புழங்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இது நியாயமற்ற சுரண்டலாக உள்ளது. இதன்மூலம் தபால்துறை சட்டவிரோத வணிக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது.

இதனால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. மீதித் தொகையையும் தராதது மட்டுமின்றி டிஜிட்டல் பரிவர்த்தனையையும் தபால் துறை ஏற்கவில்லை என்பதால் குறைதீர் ஆணையத்தை நாடியதாக” குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தபால் துறை நடந்து கொண்டதால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி இழப்பீடாக ரூ.2.50 லட்சம் மற்றும் வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் தர வேண்டுமெனவும் மானஷா கோரியிருந்தார்.

தபால் துறை அளித்த விளக்கம்

தபால் துறைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

படக்குறிப்பு, தபால் நிலைம் வசூலித்த தொகையின் விவரம்

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நடந்த இந்த வழக்கில் தபால் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “பொழிச்சலுர் தபால் நிலையத்தில் மானஷா (No.RT266685108IN) பதிவுத் தபால் ஒன்றை அனுப்பியுள்ளார். 50 பைசா என்பது கணினியில் தன்னிச்சையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தபால் நிலையத்தின் வருவாயில் இது காட்டப்படுவதில்லை.

மாறாக, பதிவுத் தபால், விரைவுத் தபால் ஆகியவற்றுக்கு கவுன்டர்களில் இருந்து சமர்ப்பிக்கப்படும் கணக்குகளில் இது தனியாகக் காட்டப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்த புகாருக்கு விளக்கம் அளித்த தபால் துறை, கடந்த நவம்பர் 2023ஆம் ஆண்டு முதல் பே யு (PAY U) டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயல்படவில்லை என்று கூறியுள்ளது.

அதைச் சரிசெய்யும் முயற்சியில் தொழில்நுட்பக் குழு ஈடுபட்டதாகவும், அது பலன் அளிக்காததால் கடந்த 2024 மே மாதத்துடன் இந்த சேவை நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தபால் துறை தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

தீர்ப்பில் நீதிபதி சொன்னது என்ன?

இந்திய தபால் துறை

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆகஸ்ட் மாதம் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி காசிபாண்டியன்.

அதில், “மனுதாரருக்கு எந்தத் தீர்வையும் தபால் துறை கொடுக்கவில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான வாய்ப்பைத் தரவில்லை” என்று தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

“ஐம்பது பைசா வரவு வைக்கப்பட்டது குறித்து கணினி மென்பொருள் தானாக எடுத்துக் கொள்வதாக தபால் துறை கூறினாலும், மென்பொருள் கோளாறு காரணமாக அதிக கட்டணம் வசூலித்ததை தபால் துறை ஒப்புக் கொண்டுள்ளதாக” நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

“நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 பிரிவு 2 (47)ன்படி நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் தொகையை வசூலித்தது நியாயமற்ற வர்த்தகம்” என நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

“கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை தனிக் கணக்காகப் பராமரிக்கப்படுவதாக தபால் துறை கூறுகிறது. இந்த நிதியை மாநில நுகர்வோர் நல நிதிக்கு அளிக்கலாம்” என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, “முறையற்ற வர்த்தகம் மற்றும் சேவைக் குறைபாடு ஆகியவற்றால் மன உளைச்சலை ஏற்படுத்திய வகையில் மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர, வழக்கு செலவாக ஐந்தாயிரம் ரூபாயும் மானஷாவிடம் இருந்து பெறப்பட்ட 50 பைசாவையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

தபால் துறையில் தவறு நடக்கிறதா?

தபால் துறைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இதுகுறித்து, பொழிச்சலூர் தபால் நிலைய அலுவலர் நித்ய கல்யாணியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “எங்கள் மீது மானஷா என்பவர் வழக்கு போட்டது தெரியும். டிவிஷன் அலுவலகத்தில் இந்த வழக்கைக் கையாண்டு வருகின்றனர்” என்றார்.

தபால் அனுப்புவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “விரைவுத் தபால் அனுப்பும்போது குறைந்தபட்ச தொகையாக 41 ரூபாய் 30 பைசா வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், 41 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

நுகர்வோர், 49 பைசா என வந்தால்கூட அந்தக் கூடுதல் பைசாவை தராமல் சென்றுவிடுவார். 50 பைசா என வரும்போது கணக்கு முழுமை பெறுவதற்காக 1 ரூபாய் என கணினி தானாகவே எடுத்துக் கொள்கிறது. இது வடிவமைக்கப்பட்ட மென்பொருளாக உள்ளது,” என்று கூறினார்.

ரசீதில் 29 ரூபாய் 50 பைசா என இருந்தாலும் அதற்குப் பக்கத்தில் உள்ள அடைப்புக் குறிக்குள் முப்பது ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் எனக் கூறிய அவர், “தபால் அலுவலகத்தின் அன்றைய நாளின் முடிவில் வருவாயில் பிளஸ், மைனஸ் குறித்த விவரங்கள் தெரிய வரும்” என்கிறார்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பதிவு மற்றும் விரைவுத் தபால்களுக்கான கட்டணம் என்பது 25 ரூபாய், 30 ரூபாய், 35 ரூபாய் என இருந்தது. அப்போது 50 பைசா பிரச்னை வரவில்லை” என்கிறார் நித்ய கல்யாணி.

மேலும், “50 பைசா புழக்கத்தில் இருந்தால் நாங்கள் கொடுக்காமல் இருக்கப் போவதில்லை. கணினியில் என்ன காட்டுகிறதோ அது மட்டுமே வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படுகிறது” என்றார்.

தபால்களுக்கு ஜி.எஸ்.டி வந்த பிறகே இதுபோன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதாகக் கூறுகிறார், தபால் துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர். பொழிச்சலூர் விவகாரத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.4.50 (18%) வசூலிக்கப்பட்டதால் 50 பைசா பிரச்னை ஏற்பட்டதாக பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

அதோடு, “வரும் காலங்களில் 50 பைசா பிரச்னையைத் தீர்க்கும் வகையில் முழுமையான தொகையாக வசூலிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவும் தலைமைத் தபால்துறை தலைவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக” கூறினார்.

சிறிய பணம் தான்… ஆனால்?

தபால் துறைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, நுகர்வோர் வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் எஸ்.நடராஜன்

“ஐம்பது பைசா என்பது மிகச் சிறிய பணமாக இருந்தாலும் அரசின் பொதுத்துறை வங்கிகள், வருமான வரித்துறை, மின்வாரியம், ஜி.எஸ்.டி, சொத்து வரி, ரயில் டிக்கெட் முன்பதிவு, காப்பீடு பிரீமியம், கல்விக் கட்டணம், ரேஷன் கடைகள் ஆகியவற்றில் இந்தப் பிரச்னைகள் உள்ளன,” என்கிறார் நுகர்வோர் வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் எஸ்.நடராஜன்.

இதுபோன்ற பிரச்னைகள் வரும்போது அதற்கு அருகிலுள்ள தொகையை ஒட்டி வசூலிக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார். அரசுத் துறைகள் மட்டுமின்றி அங்காடிகள், மொபைல் கடைகள், எழுதுபொருள் அங்காடிகள் ஆகியவற்றிலும் பைசா பிரச்னை இருப்பதாகச் சுட்டிக் காட்டினார்.

பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், “நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் வந்த பிறகு, 5 பைசா சுரண்டப்பட்டால்கூட தண்டிப்பதற்கான வழிகள் உள்ளன. 50 பைசாவை ரவுண்ட் ஆஃப் (Round off) செய்வதன் மூலம் மக்களிடம் இருந்து ஏராளமான தொகை சுரண்டப்படுகிறது” என்கிறார்.

“ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும் ரொக்கப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் குடிமக்களும் உள்ளனர். அவர்களை அனைத்து வகையான சுரண்டல்களில் இருந்தும் பாதுகாப்பதற்கு அரசு புதிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் எஸ்.நடராஜன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு