அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு துணை நிற்கும் ஈலோன் மஸ்க் அடையப் போகும் பலன் என்ன?

டிரம்ப், ஈலோன் மஸ்க், அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ், பைடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த மாதத் தொடக்கத்தில், ஒரு தேர்தல் பேரணியில் டிரம்புடன் ஈலோன் மஸ்க்
  • எழுதியவர், நடா தவ்ஃபிக், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர் & மேக்ஸ் மாட்சா
  • பதவி, பிபிசி நியூஸ்

சாண்டர் மண்டி, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் ஃபோல்சம் நகரிலுள்ள தனது அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஒரு செய்தியைக் கேள்விப்பட்டார். அதாவது, தொழில்நுட்ப பில்லியனர் ஈலோன் மஸ்க் அருகிலுள்ள பள்ளியில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி அது.

“உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான மஸ்க் இந்தச் சிறிய பகுதிக்கு வருவது அரிதல்லவா!” என சாண்டர் நினைத்தார்.

காரணம், 9,000க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஃபோல்சம் ஓர் அமைதியான நகரம். இந்த நகரின் மக்கள் பொதுவாகத் தங்கள் அரசியல் நிலைபாட்டைப் பற்றி அதிகம் பேசுவதில்லை அல்லது வெளிப்படுத்துவதில்லை.

ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் குத்தகை முகவராகப் பணிபுரியும் 21 வயதான சாண்டர், நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தனக்கு விருப்பமில்லை என்பதை ஒப்புக் கொண்டார்.

ஆனால் ஈலோன் மஸ்க் பேசுவதைக் கேட்க ஒரு பெரும் கூட்டம் கூடுவதையும், அவர்களிடையே ஓர் உற்சாகம் இருப்பதையும் உணர்ந்த அவர், அந்தக் கூட்டத்திற்குச் செல்ல முடிவெடுத்தார்.

கூட்டம் முடிந்து பள்ளியைவிட்டு வெளியேறியபோது, கமலா ஹாரிஸைவிட டொனால்ட் டிரம்ப் மீதான தனது மதிப்பு கூடியிருந்ததை அவர் நினைவு கூர்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“இது நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு யார் அதிபர் என்பது மட்டுமல்ல, உலகம் எப்படி இருக்கப் போகிறது என்பதையும் முடிவு செய்யும் தேர்தல் இது.’

இப்படி யாராவது உங்களிடம் சொன்னால், அது மிகவும் முக்கியமான, குறிப்பிடத்தக்க விஷயம் என்று நான் நினைக்கிறேன்” என்று சாண்டர் பிபிசியிடம் கூறினார்.

அரசியலில் பெரிதும் ஆர்வமில்லாத, ஒரு விசித்திரமான தொழில்நுட்ப மேதை என்று முன்பு ஒரு பிம்பத்தைக் கொண்டிருந்த மஸ்க், இப்போது டிரம்பிற்கு தனது முழு ஆதரவையும் அளித்துள்ளார்.

அமெரிக்க பொது மக்களின் பார்வையில், ‘53 வயதான மஸ்க், டிரம்பை மீண்டும் அதிபராக்கும் முயற்சியில் தனது நேரத்தையும், அறிவையும், ஏராளமான பணத்தையும் முதலீடு செய்துள்ளார்.’

புதிய அணுகுமுறை

டிரம்ப், ஈலோன் மஸ்க், அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ், பைடன்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க நாட்டின் பணக்காரர்களிடையே இது வழக்கமான ஒன்று அல்ல, ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் நேரடியாக அரசியல் தலைவர்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் அல்லது திரைமறைவாகவே அரசியலில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

இது முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை. வழக்கமாக பெரு நிறுவன அதிபர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் பலர் தேர்தலுக்கு நிதி திரட்டும் பிரத்யேக விருந்துகளைத் தங்களது ஆடம்பரமான வீடுகளில் நடத்துவார்கள். அங்கு சாத்தியமான நன்கொடையாளர்களை அரசியல்வாதிகள் சந்திப்பார்கள்.

எனவே மஸ்கின் இந்த வித்தியாசமான, வெளிப்படையான அணுகுமுறை அரசியல் விமர்சகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரிகளின் பாரம்பரிய அரசியல் அணுகுமுறை என்பது ‘பொது வெளிச்சத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்’ என்று மிச்சிகன் பல்கலைக் கழகத்தின், ரோஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில், தொழில்முனைவோர் துறையின் தலைவராக உள்ள எரிக் கார்டன் விளக்குகிறார்.

ஆனால் “மஸ்க், அதைச் சத்தமாகவும் பெருமையாகவும் செய்கிறார். இதன் மூலம், அரசியல் களத்தின் புகழ் வெளிச்சத்தை ஈர்க்கக்கூடிய ஒரு நபராக அவர் இருக்கிறார்” என்கிறார் எரிக்.

மஸ்க்கின் ‘டிரம்ப்-ஆதரவு அரசியல் நடவடிக்கைக் குழுவான, அமெரிக்கா பிஏசி’ – இந்தத் தேர்தலில் ஏற்கெனவே 119 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளதாக ஒரு லாப நோக்கற்ற ட்ராக்கர் அமைப்பான ஓபன் சீக்ரெட்ஸ் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, மஸ்க்கின் சொந்த பங்களிப்புகள் அவரை அதிபர் தேர்தலில் மிகப் பெரிய தனிப்பட்ட நன்கொடையாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளன. மேலும் உறுதியற்ற மாகாணங்களில் முக்கியமானவற்றில், வாக்காளர்களிடையே டிரம்பிற்கான ஆதரவைப் பெருக்குவதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ், தி போரிங் நிறுவனம் உள்ளிட்ட மஸ்க்கின் நிறுவனங்களில் பணிபுரிந்த, மஸ்க்கின் முக்கிய உதவியாளர் ஸ்டீவ் டேவிஸ், இந்தத் திட்டத்தில் உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாககக் கூறப்படுகிறது.

‘ஈலோன் மஸ்க்கின் பெருமளவிலான முதலீடு’

டிரம்ப், ஈலோன் மஸ்க், அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ், பைடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஈலோன் மஸ்க், டிரம்பின் பிரசாரப் பயணத்தில் ஒரு பொதுவான அங்கமாகிவிட்டார்

டிரம்பின் பிரசாரத்தில் மஸ்க்கின் தனிப்பட்ட பெருமளவு முதலீடு சாண்டரால் விரைவாகக் கவனிக்கப்பட்டது. “அது மட்டும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

“வாக்காளர்களிடம் செல்வாக்கு செலுத்துவதற்கு ஒருவர் உண்மையில் இவ்வளவு நேரத்தையும் பணத்தையும் செலவிடுவார் என்றால், மஸ்க் அதை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகச் செய்கிறார்” என்றார் சாண்டர்.

பென்சில்வேனியா செனட்டர் ஜான் ஃபெட்டர்மேன் போன்ற சில ஜனநாயகக் கட்சியினர், தேர்தலுக்கு முன்னதாக மஸ்க் விடுக்கும் அச்சுறுத்தலைப் புறக்கணிக்க வேண்டாம் என்று தங்கள் கட்சியை வலியுறுத்தி வருகின்றனர்.

‘தன்னை ஒரு மிகப்பெரிய புத்திசாலியாகப்’ பார்க்கும் ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவிடம் டிரம்பை ஆதரிக்க மஸ்க் வேண்டுகோள் விடுக்கிறார். அத்தகைய மக்களின் ஆதரவைப் பெறுவது, ஜனநாயகக் கட்சியினருக்குக் கடினமான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஃபெட்டர்மேன் கூறுகிறார்.

ஜூலை 13 அன்று பென்சில்வேனியாவின் பட்லரில், டிரம்பின் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சிக்குப் பிறகுதான், ஈலோன் மஸ்க் முதல் முறையாக டிரம்பை வெளிப்படையாக ஆதரித்தார். அதன்பிறகு மஸ்க், டிரம்பின் பிரசாரப் பயணத்தில் ஒரு பொதுவான அங்கமாகிவிட்டார். ‘டிரம்ப் மட்டுமே அமெரிக்க ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்’ என்ற எச்சரிக்கையையும் அடிக்கடி வழங்கி வருகிறார் ஈலோன் மஸ்க்.

தேர்தலின் இறுதி நாட்களில், டிரம்ப், கமலா ஹாரிஸ் என இருவரும் கவனம் செலுத்தக்கூடிய ஒரு தேர்தல் களமாகவும், ஒரு முக்கியமான உறுதியற்ற மாகாணமாகவும் (Swing State) உள்ள பென்சில்வேனியா மாநிலத்திற்கு மஸ்க் விஜயம் செய்துள்ளார்.

அமெரிக்கா பிஏசி அமைப்பு இப்போது, ‘தேர்தல் முடியும்வரை தினமும் ஒரு வாக்காளருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய மதிப்பில் சுமார் 8.3 கோடிகள்.

இந்தத் திட்டத்தின்படி யாரேனும் ஒரு வாக்காளருக்கு, அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, இந்தப் பரிசு கிடைக்கும். ஆனால், அவர் வாக்களிக்கப் பதிவு செய்திருக்க வேண்டும், பிஏசி அமைப்பின் ஒரு மனுவில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு தகுதிகளும் இருந்தால் அந்த நபர் இந்தப் பரிசை வெல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

‘வாக்காளர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் – சட்டவிரோதமானது’

டிரம்ப், ஈலோன் மஸ்க், அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ், பைடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா பிஏசி அமைப்பு, ‘தேர்தல் முடியும்வரை தினமும் ஒரு வாக்காளருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

ஆனால், அமெரிக்க நீதித்துறை (DOJ) ஈலோன் மஸ்க்கின் ‘அமெரிக்கா பிஏசி குழுவிற்கு’ அனுப்பிய கடிதத்தில், “பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு, லாட்டரி முறையில் ஒரு நாளைக்கு 1 மில்லியன் டாலர்கள் கொடுப்பது சட்டவிரோதமானது” என்று எச்சரித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் உட்பட அமெரிக்க செய்தி முகமைகள், ‘இவ்வாறு பணத்தைக் கொடுப்பது, கூட்டாட்சி தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என மஸ்க்கின் குழுவிற்கு அக்கடிதம் எச்சரித்ததாக’ புதன்கிழமை செய்தி வெளியிட்டன.

அமெரிக்க சட்டத்தின்படி, வாக்களிக்கப் பதிவு செய்ய மக்களுக்குப் பணம் கொடுப்பது சட்டவிரோதமானது. ஆனால் ஸ்வீப்ஸ்டேக்ஸ் (Sweepstakes) எனப்படும் இத்தகைய போட்டிகள் ஏதேனும் தேர்தல் சட்டங்களை மீறுகிறதா என்பது தெளிவாக இல்லை.

ஈலோன் மஸ்க்கின் இந்தப் போட்டி, பிஏசி குழு விநியோகித்த ஒரு மனுவில் கையெழுத்திட்டவர்களுக்குப் பணத்தை வழங்குகிறது.

“முதல் மற்றும் இரண்டாவது திருத்தத்திற்கு ஆதரவாக மனுவில் கையெழுத்திட, ஸ்விங் மாகாணங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அல்லது 2 மில்லியன் வாக்காளர்களைப் பெற விரும்புகிறோம்” என்று மஸ்க் சனிக்கிழமை அன்று பென்சில்வேனியாவில் இந்தப் போட்டி குறித்து அறிவித்தபோது கூறினார்.

இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள், வாக்களிக்கப் பதிவு செய்திருக்க வேண்டும் என்று போட்டி விதிகள் கூறுகின்றன. ஆனால் அவர்களுக்கு எந்தக் கட்சி சார்பும் கட்டாயமில்லை.

“மனுவில் கையெழுத்திட்ட நபர்களுக்கு, ஒவ்வொரு நாளும், இப்போதிருந்து தேர்தல் வரை தோராயமாக 1 மில்லியன் டாலர்கள் வழங்கப் போகிறோம்,” என்று மஸ்க் கூறினார்.

‘அமெரிக்கா பிஏசி’ இணையதளம், “1 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை ஸ்விங் மாகாணங்களில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவாக, குறிப்பாக பேச்சு சுதந்திரம், ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமைகளுக்குக் கையெழுத்திட வைப்பதே தங்கள் இலக்கு” எனக் கூறுகிறது.

பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவாடா, அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின், வட கரோலினா ஆகிய ஏழு ஸ்விங் மாகாணங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் நவம்பர் 5.

‘கட்டுப்பாடுகளை எதிர்த்த ஈலோன் மஸ்க்’

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு துணை நிற்கும் ஈலோன் மஸ்க் அடையப் போகும் பலன் என்ன?

பட மூலாதாரம், Getty Images

கடந்த வார இறுதியில் ஹாரிஸ்பர்க் மற்றும் பிட்ஸ்பர்க்கில் நடந்த ‘டவுன் ஹால்’ நிகழ்வுகளில், மஸ்க் வெற்றியாளர்களுக்கு மிகப்பெரிய லாட்டரி மாதிரியான காசோலைகளை வழங்கினார். அப்போது உற்சாகமான கூட்டத்தினர் ‘ஈலோன்’ என்று கோஷமிட்டனர்.

திங்களன்று பிலடெல்பியாவில் நடந்த ஒரு பேரணியில், அமெரிக்க செனட் சபை உறுப்பினர் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ், “அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ளப் போராடும் நம்மில் பலர் முன்பாக, ஒரு மில்லியன் டாலர்களை காட்டி மஸ்க் தனது சொல்படி ஆடச் சொல்கிறார்” என்று விமர்சித்தார்.

“ஈலோன் மஸ்க் உழைக்கும் நபர் ஒருவரின் முன்பாகப் பணத்தைக் காட்டி, அந்த நபரை ஆட்டுவிப்பது அழகான விஷயம் என்று நினைக்கிறார். அமெரிக்காவின் மிக முக்கியமான தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அவரைப் போன்ற மக்களும் கோடீஸ்வரர்களும் அதைத்தான் செய்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், சில அரசியல் பார்வையாளர்கள் மஸ்க்கின் ஆதரவைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளனர். மஸ்க் மற்றும் அவரது வணிகங்கள் டிரம்ப் உடனான உறவால் பயனடையும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அந்த அரசியல் பார்வையாளர்களில் மின்சார வாகன சார்ஜிங் தளமான சார்ஜ்வேயின் (Chargeway) தலைமை நிர்வாக அதிகாரி மாட் டெஸ்கேவும் ஒருவர்.

டெஸ்கேவின் கூற்றுப்படி, ‘மஸ்கின் அரசியல் மாற்றம் மின்சார வாகனத் துறையில் பலருக்கும் கடினமான முடிவாக இருந்தது. ஆனால் பல ஆண்டுகளாக மஸ்க் அரசியலில் காட்டிய அதீத ஆர்வம் காரணமாக இந்த முடிவு அவர்களை ஆச்சரியப்படுத்தவில்லை.’

“மஸ்க்கின் நலன்கள், அவரது வணிகங்கள் தொடர்பான முக்கியமான சில விஷயங்களைச் சுற்றியே கவனம் செலுத்துகின்றன என்று நான் நினைக்கிறேன். கட்டுப்பாடுகள் குறித்து இதற்கு முன்பாகவும் அவர் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளதாக” டெஸ்கே கூறுகிறார்.

கலிஃபோர்னியாவில், கொரோனா தொற்றுநோய் காலத்தின்போது அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை மஸ்க் ‘பெரிதும் எதிர்த்தார்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

டிரம்ப், ஈலோன் மஸ்க், அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ், பைடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அக்டோபர் 5, பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பேரணியில் டிரம்பை ஆதரித்துப் பேசும் மஸ்க்

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்டனும் இதை ஒப்புக்கொள்கிறார். மஸ்க் தன்னை கட்டுப்பாட்டாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட ஒருவராகப் பார்க்கிறார், அரசாங்கத்தின் தலையீடு ‘தன்னியக்க ஓட்டுநர்’ போன்ற தான் கவனம் செலுத்தும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று மஸ்க் நினைப்பதாக கார்டன் கூறுகிறார்.

“ஓர் அதிரடியான, கட்டுப்பாடுகள் இல்லாத தொழிலதிபர் போல, புதிய பாதைகளை உருவாக்கக் கூடிய, ஒழுங்குமுறைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கக்கூடிய ஒருவராக, மஸ்க் முன்னோடியாக இருக்க விரும்புகிறார்” என்று பேராசிரியர் கார்டன் கூறுகிறார்.

“மஸ்க் தனிப் பாதையில் பயணிக்க விரும்புகிறார். அவர் செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல விரும்புகிறார்” என்று கார்டன் கூறுகிறார்.

நவம்பரில் டிரம்ப் வெற்றி பெற்றால், அமெரிக்க அரசாங்கத்தில் ‘செலவு குறைப்பு’ பணிகளை மஸ்க் மேற்பார்வையிட முடியும் என்று டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். அவருக்கு அந்தப் பணி கிடைக்கவில்லை என்றாலும்கூட, பிரசாரத்தின்போது மஸ்க் அளித்த ஆதரவால் அவரது பேச்சிற்கு டிரம்ப் செவிசாய்ப்பார் என அரசியல் பார்வையாளர்கள் நம்புகிறார்கள். மேலும் அரசு நிர்வாகத்தின் முடிவுகளில் மஸ்க் வலுவான செல்வாக்கைக் கொண்டிருக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.

ஃபெடரல் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் பொது ஆலோசகரான லாரன்ஸ் நோபல், தேர்தல் களத்தில் மஸ்க் வழங்கும் பரிசுகள், சலுகைகளின் சட்டப்பூர்வமான தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புகளை மதிக்கும் அமெரிக்கர்களை இந்த வகையான பிரசாரம் கவலையில் ஆழ்த்த வேண்டும் என்று நோபல் நம்புகிறார்.

“வணிகங்கள் சொந்தமாகச் செயல்பட அனுமதிக்கப்படும்போது, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை, கூடுதல் செலவு என்ற பெயரில் ஒதுக்கி விடுகிறார்கள். அவர்கள் லாபம், பங்குதாரர் மதிப்பு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான வெகுமதி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்” என்று நோபல் பிபிசியிடம் கூறினார்.

“வணிகத்தை அப்படிப் பார்க்கும் ஒருவர், அரசாங்கத்தையும் அப்படியே அணுகும் ஒருவர், பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருப்பது ஆபத்தானது,” என்று அவர் கூறுகிறார்.

நவம்பர் தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும், கட்டுப்பாடுகளை மீறுவதிலும் கிளர்ச்சியாளராக இருப்பதிலும் மகிழ்ச்சி அடையும் ஈலோன் மஸ்க், அமெரிக்க அரசாங்கத்துடனான தனது லாபகரமான கூட்டாண்மைகளைத் தொடர்ந்து பேணுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இருப்பினும், அவரது நற்பெயரும் பிராண்டும் இப்போது டொனால்ட் டிரம்ப்புடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதை அவர் நன்றாக அறிந்திருப்பதை அவரது நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.