அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் கழுதை மற்றும் யானை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் கழுதை மற்றும் யானை
ஜனநாயக கட்சியின் சின்னமாக கழுதை உள்ளது. இது 1828இல் தொடங்கியதாக கருதப்படுகிறது.
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ ஜாக்ஸனை கழுதை என பொருள்படும் விதமாக ‘ஜாக் ஆஸ்’ என குடியரசுக் கட்சியினர் அழைத்தனர்.
இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அவர், கழுதையை பிரசாரங்களில் சின்னமாகப் பயன்படுத்திக்கொண்டார். கழுதை பிடிவாதம் நிறைந்தது, முட்டாள்தனமானது என விமர்சகர்கள் பார்த்தனர். ஆனால், அது அடக்கமானது மற்றும் புத்திசாலிதனமானது என ஜனநாயகவாதிகள் சிலர் கூறினர்.
இப்போது குடியரசு கட்சியினரின் யானையைப் பற்றி பார்க்கலாம். 1860களில் ஆப்ரஹாம் லிங்கனின் தேர்தல் பிரசாரங்களின்போது, செய்தித்தாள்களில் இது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது என சிலர் கூறுகின்றனர். ஒருவேளை வலிமையின் சின்னமாக இருக்கலாம்.
எனினும், கார்டூனிஸ்டும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான தாமஸ் நஸ்ட் 1874இல் இதை பத்திரிகையில் வரைந்த பின்னரே அது பிரபலமடையத் தொடங்கியது.
ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் யானையை முட்டாள்தனமானது, விகாரமானது எனக் கூறலாம். ஆனால், குடியரசுக் கட்சியினர் இதை வலிமை மற்றும் புத்திசாலிதனத்தின் சின்னம் என்று கூறினர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்த இரு சின்னங்களும் அமெரிக்காவின் இரு பிரதான கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு