நவீன தமிழ் தேசிய வாதத்தை முன்னெடுத்து செல்ல உள்ள எங்களுக்கு தமிழ் மக்கள் ஆணையை வழங்க வேண்டும் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
என்னை பொறுத்த வரையில் இந்த மண்ணிலும் அரசியல் மாற்றம் ஏற்பட்ட வேண்டும் அந்த மாற்றம் ஊடாக புதிய அரசியல் கலாச்சாரம் ஏற்பட்டு புதியவர்கள் பாராளுமன்றுக்கு அனுப்பப்பட வேண்டும்.
நீங்கள் கடந்த காலங்களில் யாருக்கு வாக்களித்தீர்களோ , அவர்கள் பல்வேறு கட்சிகளாக இன்று உங்கள் முன் வந்துள்ளார்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாராளுமன்றில் இருந்தும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள் இன்று பல்வேறு வடிவங்களில் உங்கள் முன் வருகின்றார்கள்
தமிழ் மக்கள் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் ஆயின் முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் தேர்ந்தெடுக்காமல் , இளையோரை , தகமையுடையோரை , பல்துறை ஆளுமைகளை கொண்டோரை கொண்டுள்ள ஒரே ஒரு தரப்பான மான் சின்னத்தில் போட்டியிடும் எங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
எந்தவொரு கட்சிக்கு வாக்களித்தாலும் அதில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரே மீண்டும் பாராளுமன்றம் செல்வார். அதனூடாக எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை
கடந்த காலத்தில் எதனை செய்தோம். எதிர்காலத்தில் எதனை செய்ய போறோம் என்று உங்கள் முன் சொல்ல கூடிய ஒரே ஒரு தரப்பும் நாங்கள் தான்
யாழ் . மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவை குறுகிய காலமே எம்மிடம் கையளிக்கப்பட்டது அதில் செய்தவற்றை சொல்லிக்காட்ட கூடிய நிரூபிக்க கூடியவர்கள் நாமே .. எதிர் காலத்தில் பாராளுமன்றில் என்ன செய்ய போகிறோம் என்ன மாற்றத்தை கொண்டு வர போகிறோம் என தெளிவாக சொல்ல கூடிய ஒரே ஒரு தரப்பும் நாங்களே ..
எனவே நிச்சயம் தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் இதுவரை காலமும் உள்ள அரசியல் சித்தாந்தத்தை மாற்றி நவீன புதுப்பிக்கப்பட்ட ஒரு தேசிய வாத அரசியலை நாங்கள் முன்னெடுக்க போறோம்
எங்களை பொறுத்த வரை தமிழ் மக்களின் அரசியல் உரிமையும் , நீடித்த பொருளாதார வளர்ச்சியும் இரண்டு கண்கள் போன்றவை இவற்றை நாங்கள் பிரித்து பார்க்க முடியாது. ஒன்றை ஒன்று புறம் தள்ள முடியாது. இரண்டையும் , சமாந்தரமாக மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு தமிழ் மக்களுக்கு இருக்கிறது. இதனை செய்ய கூடிய ஒரே தரப்பு மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி மாத்திரமே.
ஆகவே இந்த மண்ணிலே மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் , இந்த மண்ணில் சாதித்த இளைஞர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்
நவீன தமிழ் தேசிய வாதத்தை முன் வைக்க உள்ளோம். அதனை முன்னெடுத்து செல்ல உங்கள் ஆணையை உங்களிடம் இருந்து வேண்டிக்கொள்கிறோம் என மேலும் தெரிவித்தார்.