டிஜிட்டல் பிரிவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் அவசியமாகும் – பிரதமர் ஹரினி அமரசூரிய ! on Thursday, October 24, 2024
அரச சேவையில் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரச சேவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையை டிஜிட்டல்மயப்படுத்தும் தொலைநோக்கு பார்வை எமது அரசிற்கு உள்ளது. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத் துறையை அபிவிருத்தி செய்தல், டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கையொன்று நாட்டிற்கு அவசியமாகும்.
அத்துடன் யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கிழக்கு மாகாணத்தை கேந்திரமாகக் கொண்டு டிஜிட்டல் வலயத்தை உருவாக்க அரசு கவனம் செலுத்தியுள்ளதுடன் சர்வதேச டிஜிட்டல் நிறுவனம் மற்றும் தேசிய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதும் அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரச சேவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும். அதேபோன்று டிஜிட்டல் பிரிவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் அவசியமாகும். இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் தலைவர் ஈ.எலென்சோ டோல், செயலாளர் சஞ்ஜீவ பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளுடன் விருது பெற்றவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப தொழிற்துறையாளர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.