ஜனாதிபதி செயலக வாகனங்கள் காணாமலான சம்பவம் : CID விசாரணை !

by smngrx01

on Thursday, October 24, 2024

ஜனாதிபதி செயலக போக்குவரத்துப் பிரிவிவுக்கு உட்பட்ட 12 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 வாகனங்கள் காணாமலான சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.ஜனாதிபதி செயலக போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் இது குறித்து ஆறரை மணித்தியாலயங்கள் விசாரிக்கப்பட்டார்.

தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொலிஸ் மா அதிபரிடம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமலான வாகனங்களில் ஒன்பது கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், ஆறு கெப்ரக வாகனங்கள், இரண்டு டிராக்டர்கள் உள்ளன.

கணக்காய்வு திணைக்களத்தின் 2022 அறிக்கையில் ஜனாதிபதி செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட 800க்கும் அதிகமான வாகனங்களில் 51 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில், 22 வாகனங்கள் மீட்டெடுக்கப்பட்ட போதிலும் 29 வாகனங்கள் கணக்கிற்குள் உள்வாங்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

காணாமலான வாகனங்களை மீட்பதற்கு உதவக்கூடிய குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளராக மகேஷ் ஹேவாவிதாரண பதவியை பொறுப்பேற்றதிலிருந்து முறையான பதிவுகளைப் பேணி வந்ததாகவும், ஆனால் பழைய கோப்புகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஆவணங்களை கண்டுபிடிக்க அவர் மூன்று வார கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்