அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கவலை ! on Thursday, October 24, 2024
அறுகம்பை வளைகுடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளிக்கு எதிரான தாக்குதல் அச்சுறுத்தல்க குறித்து ஒக்டோபர் 07 ஆம் திகதி தகவல் கிடைத்த போதிலும், அரசாங்கம் செயற்படாமல் இருப்பது குறித்து முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர்,
தாக்குதல் அச்சுறுத்தல்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அரசாங்கம் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு ஏன் விளக்கம் அளிக்கவில்லை.
தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, சுற்றுலா வருமானம் நாட்டின் மிக முக்கியமான வருமான ஆதாரங்களில் ஒன்றாகும்.
அரசாங்கத்திடம் முன்கூட்டியே தகவல் இருந்திருந்தால் மற்றும் இராஜதந்திர தூதரகங்களுக்கு அது தொடர்பில் விளக்கியிருந்தால், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயண ஆலோசனை எச்சரிக்கையை தடுத்திருக்கலாம்.
அரசாங்கம் குறைந்தபட்சம் இப்போது இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்க வேண்டும்.
அத்துடன், இலங்கைக்கான பயண ஆலோசனையை நீக்க வெளிநாட்டு தூதரகங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.