நியூசிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் ஜோடி மட்டுமே வீழ்த்தியது எப்படி?
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனே நகரில் தொடங்கியது.
தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திர அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அற்புதமான ஆஃப் ஸ்பின்னைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி முதல் நாளிலேயே முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட் ஆனது.
முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்கள் பேட் செய்த நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூஸிலாந்து அணியின் சரிவுக்கு காரணமாகினர்.
197 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த நியூசிலாந்து அணி அடுத்த 62 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை அடுத்தடுத்து சுந்தர், அஸ்வின் பந்துவீச்சில் பறிகொடுத்தது.
அதிலும் கடைசி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை நியூஸிலாந்து வாஷிங்டன் சுழற்பந்துவீச்சில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள்
23.1 ஓவர்கள் வீசிய வாஷிங்டன் சுந்தர் 59 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது.
கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெற்று இன்று களமிறங்கிய சுந்தர், இந்த போட்டியில் அருமையாக பந்து வீசினார். 4 டெஸ்ட் போட்டிகளில் சுந்தர் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தநிலையில் இன்று ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
அஸ்வின் முதலிடம்
அனுபவ பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 24 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டத்தில் முதல் இரு விக்கெட்டுகளை எடுத்து தொடங்கி வைத்தது அஸ்வின் என்றாலும் அதன்பின் விக்கெட் கிடைக்காமல் இந்திய அணியினர் திணறினர். வாஷிங்டன் சுந்தர் பந்துவீச வந்தபின் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.
அது மட்டுமல்லாமல் கடந்த 2019-ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்டதிலிருந்து அதிகபட்சமாக 43 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன் சாதனை படைத்திருந்தார்.
அவரின் சாதனையை அஸ்வின் இன்று முறியடித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 189 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் உலகளவில் முதல் இடத்தில் உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளர்களில் நேதன் லேயனை பின்னுக்குத் தள்ளி 7-வது இடத்துக்கு அஸ்வின் முன்னேறினார். ஆஸ்திரேலிய வீரர் நேதன் லேயன் டெஸ்டில் 530 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் அஸ்வின் 531 விக்கெட்டுகளை எட்டி 7-வது இடத்துக்கு முன்னேறினார்.
வலதுகை ஆஃப் ஸ்பின்னர்கள் ஆதிக்கம்
இந்திய அணிக்காக முதல்முறையாக வலதுகை ஆஃப் ஸ்பின்னர்கள் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இதுதான் முதல்முறையாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்களான அஸ்வின், சுந்தர் இருவரும் ஆட்டத்தை தங்கள் வசம் எடுத்துக் கொண்டு ஆதிக்கம் செய்தனர். நியூசிலாந்து அணியின் சரிவைத் தொடங்கி வைத்தது அஸ்வின் என்றாலும், அதை வெற்றிகரமாக முடித்து வைத்தது வாஷிங்டன் சுந்தர்தான்.
டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்ஷெல் ஆகியோரின் கூட்டணியை உடைத்து நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை ஆட்டமிழக்க வைத்ததில் அஸ்வின், சுந்தர் இருவரின் பங்கு முக்கியமானது. நியூசிலாந்து ஒரு கட்டத்தில் 197 ரன்களுக்கு 3 விக்கெட் என வலுவாக இருந்ததால், 300 ரன்களைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், 259 ரன்களுக்குள் இந்திய வீரர்கள் ஆல்அவுட் ஆக்கினார்.
உள்நாட்டில் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் பந்துவீசி நல்ல ஃபார்மில் இருந்த வாஷிங்டன் சுந்தர் தனது பந்துவீச்சில் பல்வேறு வேறுபாடுகளை வெளிப்படுத்தி, பந்துவீச்சின் வேகத்திலும் மாறுபாட்டை காண்பித்ததால் அவருக்கு விக்கெட்டுகள் கிடைத்தது எளிதாகியது. நியூசிலாந்து அணி கடைசி 62 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
புனே ஆடுகளத்தில் பேட் செய்வது எளிதானது அல்ல என்பதை இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நிரூபித்துவிட்டனர்.
நியூசிலாந்து ஸ்கோர்போர்டில் ரிஷப் பண்ட், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 பேர் மட்டுமே இடம் பெற்றிருப்பார்கள் வேறு எந்த பீல்டர் பெயரும் இடம் பெற்றிருக்காது என்பதே இருவரின் சிறப்பான பந்துவீச்சுக்கு சான்றாகும்.
அஸ்வினை சாதனையை 5-வது டெஸ்டிலேயே சமன் செய்த சுந்தர்
அஸ்வின் டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாக இருந்த 7 விக்கெட் சாதனையை தனது 5வது டெஸ்டிலேயே வாஷிங்டன் சுந்தர் சமன் செய்துள்ளார்.
அஸ்வின் 2017-ஆம் ஆண்டு இந்தூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாக இருந்து வருகிறது. அந்த சாதனையை தற்போது சுந்தர் சமன் செய்து, அவரும் 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆறுதல் தந்த கான்வே, ரவீந்திரா
நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு ஆறுதலாக இருந்தது கான்வே, ரச்சின் ரவீந்திராவின் பேட்டிங் மட்டும்தான். இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் இருந்ததைப் போல ரவீந்திரா இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கான்வே 76 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். கீழ்வரிசையில் களமிறங்கிய சான்ட்னர் 33 ரன்கள் சேர்த்தார். மற்றவகையில் எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.
வில் யங் – கான்வே பார்ட்னர்ஷிப் 62 ரன்களையும், கான்வே – ரவீந்திரா பார்ட்னர்ஷிப் 59 ரன்களையும் அதிகபட்சமாகச் சேர்த்தனர்.
ரவீந்திராவை பிரமிக்க வைத்த சுந்தர்
ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் பேட் செய்தார். ஆகாஷ்தீப், ஜடேஜா, அஸ்வின் என மாறி, மாறிப் பந்துவீசியும் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.
அப்போது சுந்தர் பந்துவீச அழைக்கப்பட்டார். சுந்தர் வீசிய ஓவரின் முதல் பந்தை ரவீந்திரா ஸ்ட்ரோக் வைத்து தடுத்தாட முயற்சிக்க, பந்து லேசாக டர்ன் ஆகி ஆஃப் ஸ்டெம்பில் பட்டு க்ளீன் போல்டாகியது.
தன்னை போல்டாகிய பந்து குறித்து ரவீந்திரா சில வினாடிகள் பிரமித்து தனது பேட்டையும், ஸ்டெம்பையும் மாறி, மாறிப் பார்த்து செய்வதறியாது திகைத்து நடந்து சென்றார்.
இந்த விக்கெட்தான் சுந்தரின் விக்கெட் வேட்டைக்கு தொடக்கமாக அமைந்தது.
ரோஹித் சர்மா டக்அவுட்
இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் களமிறங்கினர். டிம் சௌதி வீசிய 3வது ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.
அடுத்து, சுப்மான் கில் களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் சேர்த்து, 243 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஜெய்ஸ்வால் 6 ரன்களிலும், சுப்மான் கில் 10 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.