அம்பாறை அறுகம்பே பகுதியில் இஸ்ரேல் பிரஜைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில், இன்று வியாழக்கிழமை (24) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், சந்தேகநபர்களான இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தற்போது சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட மாட்டாது எனவும், அவ்வாறு செய்வது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் குறித்து வெளிநாட்டு புலனாய்வு சேவைகளிடமிருந்து இலங்கை அதிகாரிகளுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
“தகவல் உறுதிப்படுத்தப்படும் வரை நாங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை, ஆனால் தகவல் கிடைத்தவுடன் நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தோம்,” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிலைமையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதற்கு எதிராக எச்சரித்ததுடன் , பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.