துருக்கில் விமான நிறுவனம் மீது தாக்குதல்

பட மூலாதாரம், AP

  • எழுதியவர், விக்கி ஜான்
  • பதவி, பிபிசி நியூஸ்

துருக்கி நாட்டின் தலைநகர் அன்காராவில் உள்ள ஒரு விமான நிறுவனத்தின் தலைமையகத்தில் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், கொல்லப்பட்டதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி எர்லிகாயா தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் குர்திஷ் புரட்சிக் குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

வட இரான் மற்றும் வட சிரியா பகுதிகளில் உள்ள குர்திஷ் புரட்சிக் குழுக்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சர் புதன்கிழமை மாலை தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்துப் பல வீடியோக்கள் வெளியாகின. துர்கிஷ் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் எனும் விமான நிறுவனத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருப்பதை அந்த வீடியோக்களில் காண முடிந்தது. இந்த நிறுவனம் துருக்கி தலைநகரில் இருந்து சுமார் 40 கி.மீ (25 மைல்) தொலைவில் உள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தத் தாக்குதலில் விமான நிறுவனத்தின் நான்கு ஊழியர்களும் டாக்சி ஓட்டுநர் ஒருவரும் உயிரிழந்ததாக துருக்கி துணை அதிபர் செவ்தித் இல்மாஸ் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள், டாக்சி ஓட்டுநரை கொன்றுவிட்டு, அவரது வாகனத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

வேலை பார்த்து வந்த ஊழியர்கள் தங்கள் பணிநேரம் முடிந்து, அடுத்த பணி நேரத்திற்கான ஊழியர்கள் தங்கள் பணியைத் தொடங்கும்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டியிருந்ததாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவித்தன.

மேலும், சிறப்புப் படைக்குழுவைச் சேர்ந்த ஏழு பேர் காயமடைந்துள்ளதை உள்துறை அமைச்சர் உறுதி செய்தார்.

பதிலடி கொடுத்த துருக்கி

துருக்கில் விமான நிறுவனம் மீது தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துருக்கி உள்துறை அமைச்சர் அலி எர்லிகாயா

துருக்கியில் உள்ள முக்கிய சிறுபான்மையினக் குழுவான குர்திஷ் மக்களின் உரிமைகளுக்காக 1980கள் முதல் துருக்கி அரசை எதிர்த்து பிகேகே என்றழைக்கப்படும் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி போராடி வருகிறது.

பிகேகே, துருக்கி, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் தீவிரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

துருக்கி அதிபர் ரெசப் தய்யிப் எர்துவான் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமர் புதினுடனான சந்திப்பின்போது இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அவர், இதை “மோசமான தீவிரவாதத் தாக்குதல்” என்று கூறினார். அவரது பேச்சு தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் சம்பவம் குறித்து விரிவாகப் பதிவு செய்திருந்த துருக்கி அதிபர், தங்கள் பாதுகாப்புப் படைகள் உடனடியாக பதிலடி கொடுத்ததாகவும், “நமது பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு தீவிரவாத அமைப்பும், எந்தவொரு தீய சக்தியும் தங்கள் இலக்குகளை அடைய முடியாது” என்றும் தெரிவித்திருந்தார்.

செய்திகளை முடக்கிய துருக்கி அரசு

துருக்கில் விமான நிறுவனம் மீது தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்

தாக்குதல் சம்பவம் குறித்த ஊடக செய்திகளை துருக்கி அதிகாரிகள் முடக்கியுள்ளனர். துருக்கியில் பெரும்பாலான பகுதிகளில் வசிப்பவர்கள் யூட்யூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்த இயலவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

தாக்குதல் சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று துருக்கி வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை நிர்வகிக்கும் சுப்ரீம் கவுன்சிலின் தலைவர் எபுபகிர் ஷஹின் எச்சரித்திருந்தார். அவற்றைப் பகிர்வதன் மூலம் தீவிரவாதத்தின் நோக்கத்திற்குத் துணை போக வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

துர்கிஷ் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் துருக்கி நாட்டின் வான்வழித் துறையில் முக்கியமான நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு விமானங்களை வணிக ரீதியாகவும் ராணுவ பயன்பாட்டிற்காகவும் வடிவமைத்து, தயாரிக்கிறது.

அமெரிக்கா வடிவமைக்கும் F-16 போர் விமானங்களைத் தயாரிப்பதற்காக நாட்டோ உறுப்பினரால் இந்த நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பழைய விமானங்களை துருக்கி ராணுவ பயன்பாட்டிற்காகப் புதுப்பித்துத் தரும் பணியையும் இந்த நிறுவனம் செய்கிறது.

துருக்கி ஆயுதப் படை இந்த நிறுவனத்தின் இரண்டு முக்கிய உரிமையாளர்களில் ஒன்று. துருக்கியின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தவும், ராணுவ உபகரணங்கள் பெறுவதையும் நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்ட துருக்கி அரசின் குடிமக்கள் அமைப்பு இதன் மற்றோர் உரிமையாளராக உள்ளது.

துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் பாதுகாப்பு மற்றும் வான்வழி நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு