தீபாவளி: ஆன்லைனில் நடக்கும் பட்டாசு விற்பனை மோசடிகளைத் தவிர்க்கும் வழிகள்
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பதாகக் கூறப்பட்டதை நம்பிப் பணம் செலுத்தியதில், மோசடி நடந்ததாக 17 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், குறைந்த விலைக்கு பட்டாசுகளை விற்பனை செய்வதாகக் கூறும் விளம்பரங்களை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ளனர்.
ஆனால், சொன்னபடி பட்டாசு வந்து சேராததால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுத் தரும்படியும் கோரி செப்டம்பர் மாதத்தில் இருந்து இப்போது வரை 17 பேர் புகார் அளித்துள்ளதாக சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
ஆன்லைனில் பட்டாசு வாங்கலாமா? இதுபோல் ஏமாற்றப்படாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
இந்த மோசடி எப்படி நடக்கிறது?
காவல்துறை அளிக்கும் தகவல்களின்படி, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பண்டிகைக் காலங்களில், அந்தந்த காலங்களுக்கு ஏற்றபடி பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி மோசடிகள் நடக்கும். அதைப் போலவே, தீபாவளியை ஒட்டிய செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பட்டாசுகளைக் குறைந்த விலையில் விற்பதாகக் கூறி மோசடிகள் நடக்கின்றன.
இந்த மோசடிகளைச் செய்பவர்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில்தான் முதலில் ஆட்களை ஈர்ப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.
“அந்த சமூக ஊடக கணக்குகளில் வழங்கப்பட்டிருக்கும் இணைப்புகளை ‘க்ளிக்’ செய்தால், அவை பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடிய ஓர் இணையதளத்திற்கு இட்டுச் செல்கின்றன. அந்த இணையதளத்தில் பட்டாசுகளை வாங்குவதற்குப் பணம் செலுத்திவிட்டுக் காத்திருந்தால், பட்டாசும் வராது, பணமும் திரும்பக் கிடைக்காது,” என்கிறது காவல்துறை.
இதுபோல பணம் செலுத்தி, ஏமாந்ததாக சைபர் குற்றங்களைப் பதிவு செய்வதற்கான போர்ட்டலில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மட்டும் 17 புகார்கள் பதிவாகியுள்ளன என்கிறது தமிழக சைபர் கிரைம் காவல்துறையின் செய்திக் குறிப்பு.
உண்மையான ஆபத்து என்ன தெரியுமா?
இந்த இணையதளங்கள் நம்ப முடியாத அளவுக்குக் குறைந்த விலையில் பட்டாசுகளை விற்பதாகச் சொல்கின்றன. உதாரணமாக, சுமார் ரூ.13,000 விலையுள்ள 10,000 வாலா சரவெடி, இந்த இணையதளத்தில் வெறும் 2,000 ரூபாய்க்குக் கிடைக்கிறது.
இதில் பணத்தை இழப்பதைவிட வேறு சில பாதிப்புகளும் இருப்பதாகச் சொல்கிறார் இதுபோன்ற சைபர் மோசடி வழக்குகளில் கவனம் செலுத்தும் வழக்கறிஞரான கார்த்திகேயன்.
“இந்த மோசடியில் இரண்டு விதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. முதலில் குறைந்த விலையில் பட்டாசு விற்பதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் வரும். வாட்ஸ்ஆப்பிலும் விளம்பரம் மற்றும் லிங்க் வரும். அதில் அந்தப் பட்டாசு வகைகளின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கும்,” என்கிறார் அவர்.
“அதில் பணம் கட்டி, ஆர்டர் செய்தால் டெலிவரி செய்வோம் என்று சொல்வார்கள். சிவகாசியிலிருந்தே நேரடியாக விற்பனை செய்வதாகவும் சொல்வார்கள். இதையெல்லாம் நம்பிப் பணம் செலுத்தினால், பட்டாசு எதுவும் வராது. இதில் ஒருவர் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாயை இழக்கலாம். அது ஒரு பெரிய தொகையாக இருக்காது.”
ஆனால், “இதில் முக்கிய இழப்பு என்பது நம்முடைய கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், வங்கி விவரங்கள்தான். இந்த விவரங்களைச் சேகரிப்பவர்கள் அதை வைத்துப் பிறகு வேறு மோசடிகளில் ஈடுபடலாம், அல்லது கூடுதல் பண இழப்பை ஏற்படுத்தலாம்,” என்று எச்சரிக்கிறார் கார்த்திகேயன்.
ஆன்லைனில் பட்டாசுகளை பாதுகாப்பாக வாங்குவது எப்படி?
உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் ஆன்லைனில் பட்டாசுகளை வாங்கவே கூடாது என்கிறார்கள்.
சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர் சங்கத்தின் செயல் தலைவர் ஷேக் அப்துல்லா, ஆன்லைனில் பட்டாசு விற்கக்கூடாது என உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இரண்டுமே ஆணையிட்டிருப்பதாகக் கூறுகிறார்.
“பட்டாசுகளை ஓரிடத்தில் சேமித்து வைப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம். இதைப் பலர் சட்டவிரோதமாக வாங்கி, வீட்டிலேயே சேமித்து வைத்து விற்கிறார்கள். மற்றொரு பக்கம், இப்படி ஆன்லைனில் விற்பதை எப்படி, யார் மூலம் டெலிவரி செய்வார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது,” என்கிறார்.
“பட்டாசு உற்பத்தி செய்ய, நேரடியாகக் கடைகளில் விற்பனை செய்ய உரிமங்கள் இருக்கின்றன. ஆன்லைன் விற்பனைக்கென்று எந்த உரிமமும் கிடையாது. இருந்தபோதும் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி இப்படியொரு கேள்வி வருகிறது. ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வது உச்சநீதிமன்ற ஆணையை மீறும் செயல்,” என்கிறார் ஷேக் அப்துல்லா.
தரம் குறைந்த பட்டாசுகள்
சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்களும் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் என்பதோடு, ஆன்லைனில் விற்பனையாகும் பட்டாசுகள் பெரும்பாலும் தரம் குறைந்தவையாக இருக்கும் என்கிறார்கள்.
ஆன்லைன் பட்டாசு விற்பனையில் பல விதங்களில் மோசடி நடப்பதாகக் கூறுகிறார், தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான டி. கண்ணன்.
“பணம் செலுத்தினால் பட்டாசே வராது என்பது ஒரு மோசடி. ஆனால், தரமற்ற பட்டாசுகளை விற்பனை செய்வதும் நடக்கும். பத்தாயிரம் வாலா சரவெடி வாங்கினால், அதில் 5,000 வெடிகூட வெடிக்காது. பல வண்ணங்களில் வெடிக்கும் வெடி என்று விற்பார்கள். அதில் இரண்டு வண்ணங்கள்தான் வரும். அந்த வெடியை வெடித்த பிறகு, என்ன செய்ய முடியும், யாரிடம் முறையிட முடியும்?” என்கிறார்.
மேலும், “விலை மலிவான, பாதுகாப்பு குறைவான வெடி மருந்துகளையும் அதில் பயன்படுத்தியிருப்பார்கள். ஆகவேதான் ஆன்லைனில் பட்டாசு விற்கக்கூடாது என்கிறோம். இதை உணர்ந்துதான் நீதிமன்றமும் தீர்ப்பளித்தது,” என்று தெரிவித்தார் தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான டி. கண்ணன்.
பிரபல பிராண்ட்களின் பெயரில் ஆன்லைன் விற்பனை நடப்பது குறித்துக் கேட்டபோது, “உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துகொண்டிருந்தபோது, இப்படிப் பிரபல பிராண்டுகளின் பெயரில் இணையதளம் இயங்குவது பற்றிக் கேட்கப்பட்டது. பல சமயம் அந்த பிராண்டுகளுக்கும் இதுபோன்ற இணையதளங்களுக்கும் தொடர்பிருப்பதில்லை எனத் தெரிவித்தோம்.
ஒருவேளை சில சமயங்களில் சில பிராண்டுகளே இதைச் செய்யலாம். அல்லது அவர்கள் பெயரில் வேறு யாராவது இதைச் செய்யலாம். ஆனால், ஆன்லைனில் பட்டாசுகளை விற்கக்கூடாது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை,” என்கிறார் கண்ணன்.
பிரபலமான ஒரு பிராண்டின் பெயரில் ஆன்லைன் பட்டாசு விற்பனை நடக்கிறது. அந்த இணையதளங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு பேசியபோது, இதுகுறித்துப் பேச அவர்கள் மறுத்துவிட்டனர்.