இலங்கையில் இஸ்ரேல் பிரஜைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இதுவரை மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் பொறுப்பாகும். இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
உளவுத்துறைக்கு இது பற்றிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். இந்த அரசு பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. இந்த மாதத்தில், பாதுகாப்பு கவுன்சில் பல முறை கூடியது.
கிடைத்த தகவலுக்கு அமைய அறுகம் குடா, பண்டாரவளை, எல்ல, மாத்தறை, வெலிகம, அஹுங்கல்ல கடற்கரை உள்ளிட்ட பிரபல சுற்றுலாப் பிரதேசங்களில் விசேட பொலிஸ் பாதுகாப்பு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தகவல் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் விரிவாக விவாதிக்கப்பட்டது. புலனாய்வு அமைப்புகளும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எமக்குக் திடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.
தெரிந்தோ தெரியாமலோ இடையூறுகளை ஏற்படுத்த முற்பட்டார்களா என்பதை அதிகாரிகள் தீர்மானித்து வருவதாகவும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர், இஸ்ரேலியர்கள் அல்லது வேறு எவருக்கும் எதிரான தாக்குதல்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை, ஏனெனில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் வழங்கப்பட்ட பயண ஆலோசனைகளை நீக்குவதற்கு அனுமதித்து, ஒரு சில நாட்களில் நாங்கள் இயல்பு நிலையை மீட்டெடுப்போம். நாங்கள் நடைமுறைப்படுத்திய நடவடிக்கைகளில் இந்த நாடுகள் ஏற்கனவே திருப்தி அடைந்துள்ளன, மேலும் அவர்கள் தங்கள் குடிமக்களை சுற்றுலாவுக்காக இலங்கைக்கு அனுப்புவதில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிக்கப்படவில்லை. முந்தைய நாள் கூட இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் எவ்வித பிரச்சினையும் இன்றி இலங்கை வந்துள்ளனர். தற்போது இங்கு இருப்பவர்கள் எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக தங்கள் பயணங்களை அனுபவித்து வருகின்றனர். நாங்கள் ஏற்கனவே நிலைமையை வெற்றிகரமாக சமாளித்துவிட்டோம்,” என்று அவர் மேலும் கூறினார்.