மூளையில் மின்னணு சாதனம் பொருத்தி மன அழுத்தம், மறதிக்கு சிகிச்சை
- எழுதியவர், ஜெனைன் மச்சின்
- பதவி, பிபிசி நியூஸ், கேம்ப்ரிட்ஜ்
-
இதயப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் இதயமுடுக்கி (pacemaker) முதல் செவிப்புலனை மேம்படுத்த உதவும் கோக்லியர் சாதனம்(cochlear) வரை சிறிய வகை மின்னணு சாதனங்களை உடலில் பொருத்துவதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஏற்கெனவே மாறியுள்ளது.
தற்போது, கேம்பிரிட்ஜில் உள்ள ஆரோக்கியம், அறிவியல் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த குழுவினருக்கு, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய தொழில்நுட்பங்களை விரைவாகக் கண்டுபிடிக்கப் பல கோடிகள் நிதி வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனை சுற்றியுள்ள ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் கண்டுபிடிப்புகளை சோதனை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் நம்பிக்கைக்குரிய வகையில் செயல்படும் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி மறதி, மன அழுத்தம் மற்றும் நாள்பட்ட வலியை ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கேம்பிரிட்ஜ் குழுவிலுள்ள முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஜார்ஜ் மேல்லியராஸ் இந்த அறிவிப்பு தனது புதிய திட்டத்தை ஆதரிக்கும் என்று நம்புகிறார்.
மனநலப் பிரச்னைகளை சரி செய்ய உதவும் தொழில்நுட்பம்
ஐந்தில் நான்கு பேருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நரம்பியல் மற்றும் மனநலப் பிரச்னைகள் எனச் சிலவற்றை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மதிப்பிட்டுள்ளது. அவற்றுக்கு சிகிச்சைகளை வழங்க உதவும், அளவில் சிறிய கருவிகளை பேராசிரியர் ஜார்ஜ் மேல்லியராஸின் குழு ஆய்வு செய்து வருகிறது.
“சிகிச்சையே அளிக்க இயலாத, அல்லது மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோய்களுக்கு மூளைக்குள் பொருத்தும் சிப் போன்ற சாதனங்கள் மூலம் (Brain Implants) ஒரு புதிய சிகிச்சையை வழங்க முடியும்” என்று பேராசிரியர் மேல்லியராஸ் விளக்குகிறார்.
“அத்தகைய நோய்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ஆனால் நாம் இங்கே குறிப்பிடுவது, மூளை மற்றும் முதுகுத் தண்டு காயங்கள், நடுக்குவாதம் (Parkinson), மறதி, மன அழுத்தம், பெருவிருப்ப கட்டாய மனப் பிறழ்வு (obsessive–compulsive disorder) பற்றியது. மேலும் இது முடக்கு வாதம் (Rheumatoid Arthritis), வகை 1 நீரிழிவு நோய்களுக்கும் (Type 1 diabetes) சிகிச்சை அளிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கூறினார்.
மேலும், இதுவொரு பயனுள்ள ஆய்வு என்றும் இதில் ஈடுபடுவது மிகுந்த ஊக்கமளிப்பதாகவும் அவர் குறுப்பிட்டார்.
நியூரான்கள் செயல்படும் விதத்தில் மாற்றம்
உடலில் பொருத்தப்படும் இந்தச் சாதனங்கள் சிறிய மின்சமிக்ஞைகளை அனுப்புவதன் மூலம் நம் உடலில் நியூரான்கள் செயல்படும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். நியூரான்கள் என்ற நரம்பு செல்கள் நமது உடலுக்கும் மூளைக்கும் இடையே ஒரு மின் சமிக்கை மூலம் செய்திகளைக் கடத்துகின்றன.
அவை, நம்முடைய நடை, பேசுதிறன், உணவு உட்கொள்ளுதல் மற்றும் சுவாசிக்கும் முறைகளைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த நியூரான்கள் வேலை செய்யும் முறையை மாற்றுவதன் மூலம் வலியைக் குறைக்கவோ, மூளையின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் தூண்டவோ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
“மின் தூண்டுதல்களைப் பயன்படுத்தி நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நடுக்கத்தைக் குறைக்க முடியும் என்று நமக்கு ஏற்கெனவே தெரியும்,” என்று கூறும் பேராசிரியர் மேல்லியராஸ், “ஆனால், இந்த வகையான தொழில்நுட்பத்தை மேம்படுத்த பிரிட்டன் முழுவதும் உள்ள பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில்துறையினரை ஒரு குழுவாக ஒருங்கிணைக்க வேண்டும்,” என்கிறார்.
சவால்கள் என்ன?
இந்தக் கருவியின் அளவு என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கிறது.
“இந்த சாதனத்தில் இருந்து வெளிவரும் மின்முனைகள் ஒரு நியூரானைவிட பெரியதாக இருக்கக்கூடாது. இந்த அளவானது மனித முடியின் விட்டத்தைவிட ஐந்து மடங்கு சிறியது,” என்று மேற்கோள் காட்டுகிறார் பேராசிரியர் மேல்லியராஸ்.
“ஆனால், இந்தக் கருவி மிகச் சிறியதாக இருந்தால் அது உடலுடன் தொடர்பை ஏற்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும். மருத்துவர்கள் இதை நோயாளிகளின் உடலில் பொருத்துவதில் சிரமங்களை உணரலாம். இரண்டு பிரச்னைகளுக்கும் சமமாகத் தீர்வு காணும் வகையில் இது அமைய வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், உள்ளீட்டு சாதனம் அதிக அளவில் தயாரிக்கப்படுவதையும், குறைந்த செலவுடன் இருப்பதையும், நோயாளிகளுக்கு முடிந்த வரை பக்கவிளைவுகள் இல்லாமல் இருப்பதையும் அவர்கள் நிச்சயமாக உறுதி செய்ய வேண்டும்.
உந்துதல் சமிக்ஞைகளை உருவாக்கும் கருவி
மருத்துவ உள்ளீட்டு சாதனங்களை (Medical implants) பொருத்துதல் இந்தப் பொறியாளர்களுக்குப் புதிதல்ல. மருத்துவர் சௌகுன் டோங் பலவீனமான நரம்புகளைச் சேதப்படுத்தாமல் அவற்றைச் சுற்றிக் கொள்ளும் சாதனத்தை உருவாக்கி வருகிறார்.
கண்ணாடிக் குமிழில், சிறிய ரிப்பன் போன்று தோற்றமளிக்கும் ஒரு பொருளை ஆராய்ச்சி செய்து வருகிறார் டோங். இது தங்கத்தால் கோடிடப்பட்ட பாலிமரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் மின்சாரம் செலுத்தும்போது, இது தன்னிச்சையாகச் சுருண்டு கொள்கிறது. இந்தக் கருவிகள், சிக்கலான அறுவை சிகிச்சையின்போது நரம்புகளில் இருந்து வரும் உந்துதல் சமிக்ஞைகளைக் கண்காணிக்கவும், அந்த நரம்பைத் தூண்டவும் உதவும்.
பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மின்சாரம் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடுமையான மனச் சோர்வு, இருதுருவ மன நோய் ( bipolar disorder) ஆகியவற்றுக்குரிய சிகிச்சையான எலெக்ட்ரோகான்வல்சிவ் தெரபி (ECT) பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
ஆனால், உள்ளீட்டு சாதனங்களைப் பொருத்த அறுவை சிகிச்சை முறை பின்பற்றப்பட வேண்டும் என்றாலும், அந்த நோய்களுக்கான ஒரே ஒருமுறை வழங்கும் சிகிச்சையாக அது நன்மை அளிக்கும் என நம்புகிறார் மேல்லியராஸ்.
உடலில் பொருத்தப்படும் சாதனங்கள் மூளையைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அசாதாரண செயல்பாடுகளைக் கண்டறிந்து தேவைப்படும்போது மென்மையான முறையில் சரிசெய்யலாம் என்கிறார் அவர்.
கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகள், கடுமையான மனச் சோர்வுக்கு சிகிச்சையளிக்க மூளையில் உள்ளீட்டு சாதனங்களைப் பொருத்துவதன் மூலம் தீர்வு காணலாம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தன.
ஏ.ஆர்.ஐ.ஏ(ARIA) என்ற அரசு ஆதரவு நிறுவனம், கேம்ப்ரிட்ஜ் உடன்பாட்டிற்கு மூன்று ஆண்டுகள் நிதியுதவி செய்யவுள்ளது.
இந்தக் காலகட்டத்திற்குள், புதிய சிகிச்சை முறை குறித்த ஆய்வுகளில் அவர்கள் நெடுந்தூரம் வந்துவிட முடியும் என்று பேராசிரியர் மேல்லியராஸ் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு