வயநாடு நிலச்சரிவு – குடும்பத்தையே இழந்த இளம்பெண் ஸ்ருதிக்கு மீதமுள்ள நம்பிக்கை என்ன?
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
‘‘புதிதாகக் கிடைத்த உறவாவது என்னோடு தொடரும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். அதுவும் இல்லை என்றாகிவிட்டது’’ மிகவும் மெல்லிய குரலில் பேசினார் ஸ்ருதி.
ஸ்ருதி, வயநாடு நிலச்சரிவில் தன் தாய், தந்தை, தங்கை ஆகியோரைப் பறி கொடுத்த 24 வயது இளம் பெண். வயநாடு மாவட்டம் சூரல்மலையைச் சேர்ந்த அவர், கோழிக்கோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து தப்பினார்.
ஸ்ருதியின் தாய் சபிதா, தந்தை சிவண்ணா, தங்கை ஸ்ரேயா ஆகியோரைத் தவிர்த்து, பெரியப்பா, பெரியம்மா, அவர்களின் பேரன்கள் இருவர், சித்தப்பா, சித்தி என அவரின் குடும்பத்தில் மட்டும் 9 பேர் நிலச்சரிவில் உயிரிழந்தனர்.
இத்தனை துயரத்துக்குப் பின்னும் ஸ்ருதி, தன் வாழ்க்கையைத் தொடர்வதற்கு ஒரு நம்பிக்கையாக இருந்தவர் ஜென்சன், ஸ்ருதியின் காதலர்.
இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், போராடி இரு வீட்டார் சம்மதத்தையும் பெற்றுள்ளனர். வரும் டிசம்பரில் இருவருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்பே நிலச்சரிவில் தன் ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் இழந்தார் ஸ்ருதி.
இந்த சூழலில் ஸ்ருதிக்கு முழு ஆறுதலாய் இருந்து அவரைத் தேற்றியது ஜென்சன்தான்.
வயநாடு நிலச்சரிவின்போது முகாமில் தங்கியிருந்த ஸ்ருதிக்கு அருகிலேயே இருந்து, அவரைக் கவனித்து கொண்டார் ஜென்சன்.
இந்தநிலையில் தாய், தந்தை, தங்கை மற்றும் உறவினர்கள் எல்லோருக்கும் 40வது நாள் காரியம் செய்வதற்காக, ஸ்ருதியின் தந்தை வழிப் பாட்டி மாதேவி, மற்றும் உறவினர்கள் என பலரும், மாருதி ஆம்னி வேனில் கல்பெட்டாவுக்கு அருகிலுள்ள ஒரு கோவிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மினி பஸ் –ஆம்னி வேன் மோதிய விபத்தில் எல்லோரும் காயங்களுடன் தப்பி விட, ஒருவர் மட்டும் உயிரிழந்தார். ஸ்ருதியின் காதலர் ஜென்சன்தான், அந்த விபத்தில் உயிரிழந்த ஒரே நபர்.
அந்த விபத்தில் ஸ்ருதிக்கும் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த பெரும்துயர், கேரளாவில் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெருமளவில் பேசுபொருளானது.
ஸ்ருதிக்காக பலர் தங்கள் ஆறுதலை, பிரார்த்தனைகளை சமூக ஊடகங்கள் வழியாக பகிர்ந்தனர். இதையறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஸ்ருதிக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அறிவித்தார். அவருக்கு வீடு கட்டித்தருவதாக ஒரு தனியார் அமைப்பும் அறிவித்திருக்கிறது.
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, வீடிழந்தவர்களை சில நாட்கள் முகாம்களில் தங்க வைத்திருந்த கேரள அரசு, அதன்பின் மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீட்டு வாடகை, ஒரு நாளுக்கான செலவுத் தொகை 300 ரூபாய் வீதமாக மாதம் ரூ.15 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கி வருகிறது.
நிலச்சரிவுக்குப் பின், முகாம், மருத்துவமனை என்றிருந்த ஸ்ருதி, கல்பெட்டாவின் அம்பலேரி என்ற பகுதியில், ஒரு வீட்டில் தன்னுடைய உறவினர்களுடன் இணைந்து குடியிருக்கிறார்.
ஒரே புகைப்படம்…9 பேரின் நினைவுகள்
தன் 3 மகன்களையும் நிலச்சரிவில் பறி கொடுத்த தாயும், ஸ்ருதியின் தந்தை வழிப்பாட்டியுமான மாதேவி, ஸ்ருதிக்கு துணையாக உடனிருக்கிறார்.
அதே வீட்டில் ஸ்ருதியின் பெரியப்பா மகள் ஹரிதா, தன் இரண்டு குழந்தைகளுடன் அங்கு இருக்கிறார். இவருடைய மூன்று குழந்தைகளில் மூத்த மகன் 13 வயது அஸ்வந்த் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளார்.
தாய், தந்தையை நிலச்சரிவில் பறி கொடுத்த ஸ்ருதியின் சித்தப்பா மகன் அருண்குமாரும் அங்கே வசிக்கிறார். புதிதாக இவர்கள் குடியேறியுள்ள அந்த வாடகை வீட்டில் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் மாட்டப்பட்டுள்ளது. அதில் நிலச்சரிவில் உயிரிழந்த 9 பேரும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வயநாடு நிலச்சரிவு சம்பவத்துக்குப் பின், ஸ்ருதியை பல்வேறு மலையாள தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்கள் சார்பில் பேட்டி எடுத்தபோது, ‘‘ஸ்ருதியை ஆதரவற்றவளாக விட்டு விட மாட்டேன். அவளுக்கு நானே இனி தாயும், தந்தையும், எல்லாமுமாக நான் இருப்பேன்,’’ என்று ஸ்ருதியின் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு கூறியுள்ளார் ஜென்சன்.
சிகிச்சையில் ஸ்ருதி
ஸ்ருதியின் தற்போதைய நிலையை அறிவதற்காக, பிபிசி தமிழ் அவருடைய வீட்டிற்குச் சென்றபோது, காயமடைந்த கால்களை நீட்டிய நிலையில் கட்டிலில் அமர்ந்தவாறு காதலனுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், காணொளிகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ருதி.
நீண்ட யோசனைக்குப் பின், பிபிசியிடம் பேசிய ஸ்ருதி, தன்னுடைய தந்தை, அவரின் சகோதரர்கள் என மூவருடைய வீடுகளும் அருகருகில் இருந்ததையும், தீபாவளியின்போது மூன்று குடும்பத்தினரும் ஒன்று கூடி பெருமகிழ்வோடு கொண்டாடுவதையும் நினைவு கூர்ந்தார்.
ஜென்சனைப் பற்றிப் பேசத் துவங்கிய அவர், ‘‘எல்லா உறவுகளும் என்னை விட்டுப் போய் விட்டன. புதிதாக வந்த உறவு எனக்கு நிலைக்கும் என்று நினைத்தேன். அதுவும் இல்லை என்றாகிவிட்டது,’’ என்று கூறி, தொடர்ந்து பேச முடியாமல் நிறுத்தினார்.
தங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேச விரும்பவில்லை என்று தெரிவித்த ஸ்ருதியின் சகோதரர் அருண்குமார், ‘‘ஸ்ருதியின் நிச்சயதார்த்தமே, திருமணம் போலத்தான் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. வரும் டிசம்பரில் திருமணத்தை இன்னும் சிறப்பாக நடத்த நினைத்திருந்தோம். எல்லாம் கனவாகக் கலைந்துவிட்டது.’’ என்றார்.
ஸ்ருதியின் பாட்டி மாதேவி, மூன்று மகன்களின் வீடுகளிலும் மாறிமாறி இருந்துள்ளார். நிலச்சரிவு நடந்த போது, அவருடைய ஒரே மகளின் வீட்டிற்குச் சென்றிருந்ததால், உயிர் தப்பியுள்ளார்.
ஆனால் ஜென்சன் உயிரிழந்த விபத்தில், இவருடைய கையும் உடைந்து கட்டுப் போட்ட நிலையில் இருக்கிறார்.
‘‘என்னோட மகன்கள் கடுமையாக உழைத்து, அந்த வீடுகளைக் கட்டினார்கள். ஒரே இரவில் எல்லாமே முடிந்துவிட்டது. இனிமே இந்த பிள்ளைங்களுக்கு யார் இருக்கா? எனக்கும் எங்க போறது, என்ன செய்யுறதுன்னு தெரியலை. இப்போதைக்கு இவளுக்குப் பக்கத்துல இருக்குறது மட்டும்தான் என்னால முடிஞ்சது,’’ என்றார் அவர்
கேரள முதல்வரின் அரசு வேலை அறிவிப்பும், ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் கட்டித்தரப்படும் வீடும் ஸ்ருதிக்கு எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பது அவரின் வார்த்தைகளில் வெளிப்பட்டன.
ஸ்ருதியின் சகோதரி ஹரிதா, தன் இரண்டு குழந்தைகளுடன், ஸ்ருதியையும் ஒரு குழந்தையைப் போலக் கவனித்துக் கொள்கிறார்.
‘‘அரசு வேலை அறிவித்திருப்பது கொஞ்சம் ஆறுதலாயிருக்கிறது. என்ன வேலை என்று தெரியவில்லை. அந்த அறிவிப்புக்குப் பின் யாரும் எனக்குத் தொடர்பு கொள்ளவுமில்லை. கால் குணமானதும் அதற்கு ஏற்பாடு செய்வார்கள் என்று நினைக்கிறேன்,” என்றார் ஸ்ருதி.
அரசுப் பணி கிடைத்தபின், எதிர்காலத் திட்டம் குறித்து ஸ்ருதியிடம் கேட்டதற்கு, ‘‘இப்போது வரையிலும் எதிர்காலம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை. காலில் ஒரு ஆபரேஷன் முடிந்து இருக்கிறது. இன்னொரு ஆபரேஷன் செய்ய வேண்டும். நடப்பதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதமாகும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு முன்பே எழுந்து நடக்க முயற்சி செய்கிறேன்!’’ என்றார் ஸ்ருதி.
முன்பு காலில் மிகவும் வலி இருந்ததாகக் கூறிய ஸ்ருதி, இப்போது அது வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார்.
மலையாளத்தில் ‘ஒரு கொழப்பமும் இல்ல’ என்று அவர் சொல்லும் வார்த்தை, காலத்தின் ஓட்டத்தில் எல்லா வலிகளும் குறையும் என்ற அவரிடம் முளைத்தெழுகின்ற நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.