டூம்ஸ்டே பனிப்பாறை: உலகின் மிக ஆபத்தான இடத்திற்குப் பயணித்த பெண் எழுத்தாளர் எலிசபெத் ரஷ்

அண்டார்டிகா, காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Elizabeth Rush

  • எழுதியவர், எலியட் ஸ்டெய்ன்
  • பதவி, பிபிசி செய்திகள்

புலிட்சர் பரிசுக்கான இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான எலிசபெத் ரஷ் தனது சமீபத்திய புத்தகமான ‘தி குயிக்கனிங்’-இல் (The Quickening), உலகின் மிக முக்கியமான, ஆனால் மனிதர்கள் அதிகம் செல்லாத இடங்களில் ஒன்றுக்கு தான் மேற்கொண்ட அரிய பயணத்தை விவரித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டில், 57 விஞ்ஞானிகளும் அவர்களது குழுவினரும், அன்டார்டிகாவின் மிக தொலைதூரப் பகுதிகளுக்குத் தங்கள் 54 நாள் பயணத்தை மேற்கொண்டனர். அவர்களது நோக்கம்: மிக வேகமாக உடைந்து கொண்டிருக்கும் ’த்வைட்ஸ் பனிப்பாறை’-யை (Thwaites Glacier) ஆய்வு செய்வது. இது உலகின் ‘டூம்ஸ்டே பனிப்பாறை’ என்று அழைக்கப்படுகிறது.

கடந்த 1990களில் இருந்த அளவுடன் ஒப்பிடும்போது தற்போது 8 மடங்கு குறைந்துள்ள த்வைட்ஸ் பனிப்பாறை உருகுவதால், ஒவ்வோர் ஆண்டும் 8,000 கோடி கிலோ பனிக்கட்டி கடலில் கலக்கிறது. இந்த அளவு, பூமியின் 4% வருடாந்திர கடல்மட்ட உயர்வுக்கு வழிவகுக்கிறது. அதன் மாபெரும் அளவு மற்றும் விரைவாக உருகுவதன் காரணமாக இந்தத் தொலைதூரப் பனிப்பாறை பிரதேசம் பூமியின் பயங்கரமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், கூடவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் திகழ்கிறது. ஏனெனில், காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் துவக்கப்புள்ளி இது. த்வைட்ஸ் முழுவதுமாக உருகினால் கடல் மட்டம் 10 அடி உயர்ந்துவிடும். அது நினைத்துப் பார்க்க முடியாத உலகளாவிய விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

ஆனால் ‘டூம்ஸ்டே பனிப்பாறை’ உருகி வரும் போதிலும், அனைவரும் அஞ்சிய அளவிற்கு வேகமாக மறைந்துவிடாது என்று இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது.

பனிப்பாறை தொடர்ந்து உடைந்து கடலில் விழக்கூடும் என்ற அச்சத்தை இந்த ஆய்வு சிறிதே குறைக்கிறது. அது அவ்வளவு சீக்கிரம் நடக்காது என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

“த்வைட்ஸ் பனிப்பாறை தொடர்பாக இப்போது நாம் பார்ப்பது ‘ஸ்லோ மோஷ’னில் நடக்கும் ஒரு பேரழிவு,” என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய துருவ விஞ்ஞானி மேத்யூ மோர்லிங்ஹாம் ‘தி கான்வர்சேஷன்’ இணையதளத்திடம் கூறினார்.

கடந்த 2019இல் த்வைட்ஸுக்கு பயணம் செய்தவர்களில் ஒருவரான எலிசபெத் ரஷ் எழுதிய காலநிலை மாற்றம் பற்றிய புத்தகமான ‘ரைசிங்’, புலிட்சர் பரிசுக்கான இறுதிப் போட்டியில் இருந்தது. அவருடைய சமீபத்திய புத்தகம், ‘தி குயிக்கனிங்,’ த்வைட்ஸின் உடைந்த பகுதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப் பயணத்தை விவரிக்கிறது. இது மனிதர்கள் இதுவரை சென்றிராத உறையும் குளிர் வாட்டும் தொலைதூர இடமாகும்.

‘விண்வெளியைவிட தனித்திருக்கும் இடம்’

அண்டார்டிகா, காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Elizabeth Rush

படக்குறிப்பு, த்வைட்ஸ் பனிப்பாறையின் உடைந்த பனிக்கட்டிகள் சூழ்ந்த இடத்திற்கு இதற்கு முன் மனிதர்கள் சென்றதில்லை

ரஷ் தனது அன்டார்டிகா பயணத்தின் சுவாரஸ்யமான விவரங்களை பிபிசி டிராவலுடன் பகிர்ந்துகொண்டார். உலகத்தைப் பற்றிய தனது பார்வையை அது எவ்வாறு மாற்றியது மற்றும் பூமியின் மிகவும் மென்மையான, எளிதில் உடையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகளின் வழியாக மேற்கொண்ட பயணம், பயண நெறிமுறைகளை எப்படி மாற்றியது என்பதையும் அவர் விவரித்தார்.

கேள்வி: த்வைட்ஸ் பனிப்பாறை எங்கே உள்ளது, இந்தப் பயணத்தைப் பற்றி முதலில் எப்போது கேள்விப்பட்டீர்கள்?

பதில்: “த்வைட்ஸ் பனிப்பாறை அன்டார்டிகாவில் மிகவும் மர்மமான இடம். இது அமுண்ட்சென் கடலின் தொலைதூரப் பகுதிகளில் உள்ளது. அருகிலுள்ள ஆராய்ச்சித் தளத்தை அடைய நான்கு நாட்கள் ஆனது. ‘உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் உங்களுக்கு உதவி கிடைக்கச் செய்வதைக் காட்டிலும் விண்வெளி நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு உதவிகளைக் கொண்டு செல்வது சுலபம். அது உங்களுக்குத் தெரியுமா?’ என்று ஆய்வுத் திட்ட அதிகாரி என்னிடம் கேட்டார்.

த்வைட்ஸ் விரைவாகப் பேரழிவை நோக்கிச் செல்கிறது என்ற கவலைகள் உள்ளன. ஆனால் உண்மையில் யாரும் இதற்கு முன் அது சிதையும் இடத்திற்குச் சென்றதில்லை.

‘அன்டார்டிக் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள்’ திட்டத்தின் ஒரு பகுதியாக என்னைச் சேர்த்துக்கொள்ள நான் விண்ணப்பித்தேன். அவர்கள் வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் இரண்டு எழுத்தாளர்கள் அல்லது கலைஞர்களை அன்டார்டிகாவிற்கு அனுப்புவார்கள். நான் 60 பக்க விண்ணப்பத்தைத் தயார் செய்தேன்.

எனது விண்ணப்பத்தில் ஒரு பத்தி நீள அடிக்குறிப்பு இருந்தது: ‘நான் கடல் மட்ட உயர்வு பற்றி எழுதுகிறேன். நான் அன்டார்டிகாவில் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று கடல்மட்ட உயர்வை நேரடியாகப் பார்க்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பயணத்தில் அவர்கள் என்னைச் சேர்த்துக்கொண்டது என்னுடைய அதிர்ஷ்டம்.”

அன்டார்டிகா பற்றிய உண்மைகள்

அண்டார்டிகா, காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Elizabeth Rush

படக்குறிப்பு, எலிசபெத் ரஷ், பூமியின் ‘டூம்ஸ்டே பனிப்பாறை’ பகுதிக்கு பயணம் செய்தார்

கேள்வி: கடல் மட்டம் 10 அடி அல்லது அதற்கு மேல் உயர்ந்தால் அது உலக அளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில்: “இது நடக்கும் வேகம் நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இரண்டு நூற்றாண்டுகளில் உயரும் 10 அடிக்கும், 40 ஆண்டுகளில் உயரும் 10 அடிக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. உண்மையில் கவலை என்னவென்றால், இதற்காக மனிதர்கள் என்ன செய்கிறார்கள்?

நான் ‘திட்டமிட்ட பின்வாங்கலை’ (தாழ்வான பகுதிகளில் இருந்து உயரமான பகுதிகளுக்குக் குடிபெயர்வது) ஆதரிக்கிறேன். அதில் ஒரு அரசு நிறுவனம் தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளை, வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முந்தைய விலைமதிப்பில் வாங்குகிறது. அந்தப் பணத்தை வைத்து மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இது வாய்ப்பளிக்கிறது.

நியூயார்க் நகரம் ஏற்கெனவே சில திட்டமிட்ட பின்வாங்கலை ஸ்டேட்டன் தீவில் செய்துள்ளது. ஸ்டேட்டன் தீவில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை அரசாங்கம் தலையிட்டு, விலைக்கு வாங்கி இடித்தது. அந்தக் குடியிருப்பாளர்களில் 80 சதவீதத்தினர் தங்கள் வீட்டிற்காகக் கொடுக்கப்பட்ட பணத்தை எடுத்துக்கொண்டு ஸ்டேட்டன் தீவில் வேறு இடத்திற்குச் செல்ல முடிந்தது. திட்டமிட்ட பின்வாங்கல் சமூகங்களைச் சிதைப்பது போன்றது என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். ஆனால், அப்படிப்பட்ட சிதைவு உண்மையில் நடந்தாக வேண்டும் என்று கட்டாயமில்லை, இத்தகைய இடப்பெயர்வுகளின்போது அப்படி நிகழாமல் தவிர்க்க முடியும்.

ஆகவே, நாம் தயார்நிலையில் இருக்கும்பட்சத்தில் கடல்மட்ட உயர்வு ஒரு பேரழிவாக இருக்கப் போவதில்லை. ஆனால், அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதுதான் பெரிய கேள்வி.”

கேள்வி: இந்தப் பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர். இது பற்றி நிங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: “இந்தப் பயணம் பற்றிய என்னுடைய பார்வை என் கதையின் முக்கிய அம்சமாக இருக்கும். கூடவே அந்த இடங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் குழுவினரின் கருத்துகளையும் அதில் இடம்பெறச் செய்வேன் என்று என் விண்ணப்பத்தில் நான் குறிப்பிட்டேன். அன்டார்டிகா பற்றித் தெரிவிக்கப்படும் பொதுவான கூற்றுகளில் இருந்து விலகி அனைவரின் கருத்துகளையும் உள்ளடக்குவதே எனது குறிக்கோளாக இருந்தது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் அன்டார்டிகாவை கண்டார். இந்த மிகக் குறுகிய காலகட்டத்தில் அன்டார்டிகாவை பற்றி மிகவும் குறைவான தகவல்களே தெரிய வந்துள்ளன. அங்கு சென்றது மனிதர்களால் சிந்திக்கவே முடியாத மாபெரும் வெற்றி என்றும் பல இன்னல்களைக் கடந்து அங்கு சென்றடைந்தது எப்படி என்பதையுமே அவை பெரும்பாலும் விளக்கின.

அங்கு சென்ற பெரும்பாலானவர்கள் உலகின் வடபகுதியைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர்கள். அன்டார்டிகாவை பற்றிய எல்லா கதைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. ஆனால் நான் அனைவருடைய கருத்துகளையும், சிந்தனைகளையும் உள்ளடக்கிய ஒரு கதையை உருவாக்க விரும்பினேன். பயணத்தில் உடனிருந்த சமையற்காரர்கள், பொறியாளர்கள், உதவி ஊழியர்கள் ஆகியோரையும் நேர்காணல் செய்ய நான் முன்பே முடிவு செய்தேன்.

என் விண்ணப்பம் தெரிவு செய்யப்படுவதில் இது குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், நான் அறிவியலைப் பற்றி பேசப் போகிறேன். ஆனால் அன்டார்டிகா பற்றி பொதுவாகச் சொல்லப்படும் கதைகளைக் கேள்வி கேட்கும் வகையில் அதைச் செய்யப் போகிறேன்.”

‘மனிதர்களிடமிருந்து வெகு தூரம்’

அண்டார்டிகா, காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Elizabeth Rush

படக்குறிப்பு, ஐஸ் பிரேக்கர் கப்பலில் பயணித்த குழுவினர் த்வைட்ஸ் பனிப்பாறையை அடைய மூன்று வாரங்கள் ஆனது

கேள்வி: அன்டார்டிகா பற்றிய கதையில் பொதுவாக இடம்பெறாத பயணிகள் உலகத்தைப் பார்க்கும் விதத்தை இந்த அரிய பயணம் எப்படி மாற்றியது என்பதை விளக்கும் ஏதேனும் கதைகள் உங்களிடம் இருக்கிறதா?

பதில்: “கப்பலில் சமையல்காரராக இருந்த ஜாக் என்பவரிடம் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் நியூ ஆர்லியன்ஸை சேர்ந்தவர். பொருளாதார ரீதியாகத் தனது தாத்தாவை நன்றாக கவனித்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்தப் பயணத்தில் சமையல்காரராக இருக்க அவர் முடிவு செய்தார். ஆனால் எங்கள் பயணம் துவங்க இரண்டு வாரங்கள் இருந்த நிலையில் அவரது தாத்தா காலமாகிவிட்டார்.

ஆனாலும் ஜாக் எங்களுடன் வந்தார். அவர் இதுவரை விமானத்தில் கூடச் சென்றதில்லை. அவர் மூன்று வெவ்வேறு விமானங்களில் பயணம் செய்து நியூ ஆர்லியன்ஸில் இருந்து, சிலியில் இருக்கும் புன்டா அரீனாஸுக்கு வந்தார். அங்கிருந்துதான் எங்கள் கப்பல் பயணம் துவங்க இருந்தது. அவர் கப்பலிலும் சென்றதில்லை. பெங்குவின் பறவைகளையும் பார்த்ததில்லை. நியூ ஆர்லியன்ஸை சேர்ந்தவர் என்றாலும்கூட அவர் இதுவரை கடல்மட்ட உயர்வு பற்றி ஒருபோதும் தீவிரமாகச் சிந்தித்ததில்லை. இந்த முழு அனுபவமும் அவருக்குப் பல ’முதல்’களை உள்ளடக்கியதாக இருந்தது.

காலநிலை மாற்றம் பற்றிச் சிந்திக்க அவருக்கு அவகாசம் இருந்ததில்லை. ஆனால் அவர் த்வைட்ஸை பார்த்ததும், ‘ஓ, எனக்குப் புரிகிறது’ என்று கூறினார்.

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ கதையில் இருக்கும் சுவர் போல அந்தப் பனிப்பாறை இருந்தது. அது மிகவும் பெரியதாக இருந்தது. நாங்கள் அங்கு சென்றடைய மூன்று வாரங்கள் ஆயின. மனிதர்களிடம் இருந்து வெகுதூரம் வந்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்து வெகுதொலைவில் இருக்கும் நம்முடைய செயல்கள் இந்தப் பனிப்பாறை சுவரின் மீது எப்படிப்பட்ட பேரழிவை ஏற்படுத்துகிறது என்று சிந்திக்கும்போது மயிர்கூச்சல் எடுத்தது.”

கேள்வி: பூமியில் நாம் எந்த வகையான இடங்களுக்குச் செல்ல வேண்டும் அல்லது செல்லக்கூடாது என்பது பற்றிய விவாதம் தொடர்ந்து நடக்கிறது. எளிதில் அடைய முடியாத, எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகள் அமைந்துள்ள இடங்களை அப்படியே விட்டுவிடவேண்டும் என்பது ஒரு கருத்து. அவற்றின் மென்மையான தன்மையை அருகிலிருந்து பார்ப்பது அவற்றைப் பற்றி இன்னும் ஆழமான அக்கறையை ஏற்படுத்த வழிவகுக்கிறது என்பது மற்றொரு பார்வை. நாம் செல்லக்கூடாத இடங்கள் என்று ஏதாவது இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: “இதுவொரு நல்ல கேள்வி. என்னுடைய கருத்தை மட்டுமே நான் இங்கு சொல்ல முடியும். நாங்கள் திரும்பும் வழியில் தெற்குப் பெருங்கடலைக் கடந்தபோது, ‘இனி நான் ஒருபோதும் இங்கு [அன்டார்டிகாவுக்கு] வரப் போவதில்லை’ என்ற எண்ணம் தோன்றியது. இது என் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நடக்கும் பயணம். நான் திரும்பி வந்து ஐந்து ஆண்டுகள் உழைத்து அந்தப் பயணத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதினேன். பயணத்தின் பின்னால் அந்த ஆழமான அர்த்தம் அல்லது உந்துதல் இல்லாமல் இருந்திருந்தால் நான் அதைச் செய்திருக்க முடியும் என்று தோன்றவில்லை.

சாதாரண சுற்றுலா போல நாம் அன்டார்டிகாவுக்கு செல்லக்கூடாது என்று நான் நினைக்கிறேன். பயணக் கப்பல்கள் அங்கு போக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ‘தீண்டப்படாத’ அல்லது ‘தொலைதூர’ இடங்களுக்குச் சாதாரண சுற்றுலாப் பயணங்கள் அதிகரிக்கக்கூடாது. இந்தக் கட்டத்தை அன்டார்டிகா, அமேசான் போன்ற இடங்கள் அடைந்துவிட்டன.

நாம் ஒன்றை நேரில் பார்க்கும்போது அதன் மீது அதிக அக்கறை காட்டுகிறோம் என்பதே என் பொதுவான எண்ணம். எனக்கு வயதாகும்போது அந்த ஆர்வத்தை வீட்டிற்கு நெருக்கமாக உள்ள இடங்களுக்கு மாற்ற முயல்வேன். என் மூன்று வயதுக் குழந்தையுடன் என் சுற்றுப்புறத்தில் நான் நடக்க முடியும். மேலும் என் அண்டை வீட்டு முற்றங்களில் காணப்படும் அற்புதமான பட்டாம்பூச்சிக் கூட்டம், சிறிய சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பார்க்க முடியும். அன்டார்டிகா அல்லது அமேசானை எவ்வளவு ஆச்சரியத்துடனும் வியப்புடனும் நாம் பார்க்கிறோமோ அதேபோல இந்த இடங்களையும் கருதலாம் என்று நான் நினைக்கிறேன்.”

அன்டார்டிகாவிற்கு செல்லும் முன்…

அண்டார்டிகா, காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Elizabeth Rush

படக்குறிப்பு, முதன்முதலில் மனிதர்கள் அன்டார்டிகாவை பார்த்து 200ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதை இப்போதும் ‘யாராலும் தீண்டப்படாத இடம்’ என்று சொல்வது சரியல்ல என்று ரஷ் கருதுகிறார்

கேள்வி: அன்டார்டிகாவிற்கு பயணம் செய்யும் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்ன?

பதில்: “அன்டார்டிகாவை 200 ஆண்டுகளுக்கு முன்புதான் ஒருவர் சென்றடைந்தார். மனித வரலாற்றின் பெரும்பகுதி காலத்திற்கும் அது மனிதர்களத் தன் பக்கம் அண்ட அனுமதிக்கவில்லை. இந்த பூமியில் வேறு எந்த இடமும் அப்படி இல்லை. நீங்கள் செல்லும் ஒவ்வோர் இடம் குறித்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைய பூர்வீகக் கதைகள் இருக்கும். பூமியில் அப்படி எதுவும் இல்லாத ஒரே இடம் இதுதான். எனவே இதுவொரு குறிப்பிட்ட அளவுக்கு மரியாதை மற்றும் விழிப்புணர்வைக் கோருவதாக நான் நினைக்கிறேன்.

அதை நெருங்குவது இந்தக் கோளின் வரலாற்றில் மிகவும் அரிதானது, மிகவும் புதியது. எனவே நீங்கள் அங்கு செல்லப் போகிறீர்கள் என்றால், அந்தப் பயணம் அசாதாரணமானது. நீங்கள் பார்க்கப் போகும் அன்டார்டிகா எவ்வளவு சக்தி வாய்ந்த இடம் என்பது பற்றிய விழிப்புணர்வுடன் நீங்கள் அங்கு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”

கேள்வி: இந்த மாபெரும் பனிப்பாறை மெதுவாக உருகுவதைப் பார்த்தது உங்களை எப்படி பாதித்தது?

பதில்: “நாங்கள் த்வைட்ஸ் பனிப்பாறைக்கு அருகே சென்றடைந்த அந்த நாள் மிகவும் அமைதியாக இருந்தது. எங்கள் கப்பலின் கேப்டன் பனிப்பாறையின் முன்புறமாக எங்களை அழைத்துச் சென்றார். அதுவோர் அற்புதமான நாள். பின்னர் நிலைமை மாறியது. ஆறு நாட்களுக்கு நாங்கள் கடுமையாக வேலை செய்ய வேண்டி வந்தது. வண்டல் மண்ணை [பூமியின் கடந்த கால புவியியல் மற்றும் காலநிலையை வெளிப்படுத்தும் கடற்பரப்பிற்கு அடியில் இருந்து மாதிரிகள்] பக்கவாட்டிற்குத் தள்ளுதல், எலிஃபெண்ட் சீல்களுக்கு முத்திரைக் குறியிடுதல், பனிப்பாறையின் கீழே நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புதல் போன்ற வேலைகளைச் செய்தோம். அங்குள்ள பனி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக இருந்தது.

ஏழாவது நாள், நான் விழித்தெழுந்தவுடன், கப்பலின் இயங்குதளத்திற்குச் சென்றேன். அங்கிருந்து பார்த்தபோது, முன்பைவிட அதிகமான பனிப்பாறைகள் காணப்பட்டன. ஆனால் எனக்கு அது வித்தியாசமாகத் தெரியவில்லை. நான் என் வேலையைத் தொடர்ந்தேன். மதிய உணவுக்குப் பிறகு கப்பலில் இருந்த தலைமை விஞ்ஞானி இரண்டு செயற்கைக்கோள் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒன்று த்வைட்ஸ், அதில் ஒரு திடமான மாபெரும் பனிப்பாறை காணப்பட்டது. அடுத்த படத்தில் கோபமடைந்த கடவுள் பனிப்பாறையை ஒரு சுத்தியலால் அடித்து 300 பனிக்கட்டிகளாக உடைத்தது போல் இருந்தது. 15 மைல் அகலமும் 10 மைல் ஆழமும் கொண்ட பனிப்பாறையின் ஒரு பகுதியைப் பற்றி இங்கு நாம் பேசுகிறோம். முதல் படம் நாங்கள் அங்கு சென்று சேர்ந்த நாளில் எடுக்கப்பட்டது.

இரண்டாவது படம் ஏழாவது நாள் காலையில் எடுக்கப்பட்டது. தலைமை விஞ்ஞானி அவற்றைப் பார்த்து, ‘அடக் கடவுளே, த்வைட்ஸ் விரைவான சரிவின் காலகட்டத்திற்குள் நுழைந்துவிட்டது. அது நம் கண் முன்னே நடக்கிறது’ என்றார். அவர் அந்தத் தகவலை கேப்டனுக்கு அனுப்பினார். ஆய்வுப் பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பேரழிவுகரமான நிகழ்வு உண்மையில் என் கண்களுக்கு முன்னால் நடந்துள்ளது. அதை நான் உணரவில்லை என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உங்களுக்கு முன்னால் ஒரு பனிப்பாறை துண்டு துண்டாக உடைந்து கிடப்பதை உங்களால் கண்டு உணர முடியவில்லை என்றால் அந்த நிகழ்வு நீங்கள் முதலில் கற்பனை செய்ததைவிடப் பெரிய அளவில் உள்ளது என்றும், அதைப் பார்க்கும் உங்கள் கண்ணோட்டம் தவறு என்றும் அர்த்தம். இது காலநிலை மாற்றத்திற்கான ஒரு சிறந்த உருவகம் என்று நான் நினைக்கிறேன். அதை உணர்வது மனிதர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது.”

‘நம்பிக்கை உள்ளது’

அண்டார்டிகா, காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Elizabeth Rush

படக்குறிப்பு, கடந்த 1990களில் இருந்ததைவிட த்வைட்ஸ் இப்போது 8 மடங்கு வேகமாக உருகி வருகிறது

கேள்வி: பூமியின் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வது மனித குலத்தைப் பற்றிய உங்கள் பார்வையை எவ்வாறு மாற்றியது?

பதில்: “அது வேறு உலகமாக இருந்தது. நம்முடைய இருப்பு எவ்வளவு மதிப்புமிக்கது மற்றும் அதிசயமானது என்பதையும் இது எனக்கு உணர்த்தியது. வேறொரு கிரகத்தைத் தொடும் தூரத்திற்கு நெருங்கிவிட்டதாக நான் உணர்ந்தேன், மற்றொரு கிரகத்தில் மனித இருப்பை நிலைநாட்டுவது எவ்வளவு கடினம் என்பதை உணரும்போது அந்த உணர்வானது இங்கு நமது வாழ்க்கைக்கு நன்றியுள்ளவர்களாக நம்மை ஆக்குகிறது.

அன்டார்டிகாவில் நடப்பது அந்தப் பகுதிக்கு மட்டுமானது அல்ல. அன்டார்டிகாவை சுற்றிச் சுழலும் கடல் நீரோட்டங்கள் பிஸ்டன் போல உலகளாவிய கடல் சுழற்சி முறைகளை இயக்குகின்றன. அதை நாம் மாற்ற ஆரம்பித்துள்ளோம். நாம் அதை மாற்றுவதால், உலகம் முழுவதும் உள்ள உலகளாவிய கடல் வடிவங்கள் மாறுகின்றன. அன்டார்டிகாவை பார்த்து, அங்கு அதிக நேரம் செலவிட்டதன் மூலமாக, ஒரு பெரிய, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளின் வலையில் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வு எனக்குள் நிச்சயமாக வளர்ந்தது.”

கேள்வி: உங்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு எதிர்காலத்தைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: “ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததை, எதிர்காலத்தைப் பற்றிய என் நம்பிக்கையின் ஒரு பகுதியாக நான் பார்க்கிறேன். இப்போது எனக்கென்று ஒரு குழந்தை உள்ளது. என் வாழ்நாளில் இருப்பதைவிட அவனுடைய வாழ்நாளில் நிலைமை மோசமாகலாம் என்று நான் நினைக்கிறேன்.

ஆனாலும் ஒரு குழந்தையை இந்த உலகத்திற்குக் கொண்டு வரும் என் முடிவை அது மாற்றவில்லை. ஆனால் என் வாழ்நாளுக்குள் ஓர் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துவதில் அது உதவியது.

சங்கடமான சூழ்நிலைகள் மற்றும் பெரிய மாற்றங்களின்போது எப்படி வாழ வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அவனுக்குக் கற்பிப்பதில் அதிக அர்ப்பணிப்புடன் செயல்படும் தேவை இருப்பதாக உணர்கிறேன். ஏனென்றால் அந்தச் சூழ்நிலைகள் வரப் போகின்றன என்று நான் நினைக்கிறேன்.

மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எப்படி, கூட்டாண்மை மற்றும் விசுவாசத்தை உருவாக்குவது எப்படி என்பதை அவனுக்குக் கற்பிப்பது இன்னும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

நெகிழ்வுத்தன்மையுடனும், எதையும் சமாளிக்கும் திறனுடனும் அவன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கும் அதே நேரம், ஒருவர் மற்றவரை கவனித்துக் கொள்ளும் மனித சமூகத்தின் ஒரு பகுதியாக அவன் இருக்க வேண்டும் என்றும் நான் கருதுகிறேன்.