சங்கை களவாடிவிட்டதாக குற்றஞ்சாட்டுவது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடு- கோவிந்தன் கருணாகரம் ! on Wednesday, October 23, 2024
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சங்கை தோற்கடிக்கவேண்டும் என கடுமையான பிரயத்தனங்களை முன்னெடுத்தவர்கள் இன்று சங்கை நாங்கள் களவாடிவிட்டதாக குற்றஞ்சாட்டுவது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடு என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைமை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது தேர்தல் அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த கருணாகரம் ,
தொடர்ச்சியான எங்களது உரிமை போராட்டத்தில் ஏமாற்றம், துரோகம், விமர்சனம், காட்டிக்கொடுப்புகள் என தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழ் மக்களின் உரிமைகள் பெறப்படாமல் இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சியதிகாரத்திற்கு வரும் அரசுகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏறெடுத்தும் பார்க்காமலிருக்கின்றார்கள்.
தமிழர்களின் தேசவிடுதலைப்போராட்டமானது அரசியல் ரீதியாக மெல்ல மெல்ல நடைபெற்றுவருகின்றது. காலப்போக்கில் தமிழ் மக்களின் தேர்தல் சின்னம் மாறுபட்டுவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சின்னம்,பாராளுமன்ற தேர்தலில் ஒரு சின்னம் என ஆதரவு வழங்கிவரும் இந்த காலத்தில் சூரியன் சின்னம்,பின்னர் வீட்டுச்சின்னம் இன்று தமிழர்களின் தமிழ் தேசியத்தின் அடையாளமாக சங்குச்சின்னம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தி எமது பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லையென்பதை மீண்டும் ஓரு முறை இந்த நாட்டிற்கும் உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்காக சங்கு சின்னத்தை நாங்கள் பிரபலியப்படுத்தியிருந்தோம். அந்த பொதுக்கட்டமைப்பில் பிரதான அங்கமாக செயற்பட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எங்களது குத்துவிளக்கு சின்னத்திற்கு பதிலாக சங்கு சின்னத்தை எடுத்து இன்று நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டுவந்துள்ளோம்.