இந்தியா சீனா எல்லை பிரச்னை: புதிய ரோந்து ஒப்பந்தம் நிரந்தரத் தீர்வு தருமா?

இந்தியா - சீனா: புதிய 'ரோந்துப் பணி' ஒப்பந்தம் மூலம் எல்லை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images

முக்கிய சாராம்சம்

  • இந்தியா, சீனா இடையே நீண்ட காலத்திற்குப் பிறகு எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலான ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
  • சீனாவுடன் 3,488கி.மீ. எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது.
  • இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை முழுமையான எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே பல பகுதிகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன.
  • எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியாவும் சீனாவும் தத்தமது சிறப்புப் பிரதிநிதிகளை நியமித்துள்ளன. இவர்களுக்கு இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே, நீண்ட காலத்திற்குப் பிறகு எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படும் என்ற நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோதி புறப்படுவதற்கு முன்னதாக திங்கள் கிழமையன்று ‘துருப்புகளின் ரோந்துப்பணி’ தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியா அறிவித்தது.

”இரு நாடுகளின் எல்லையில் 2020ஆம் ஆண்டுக்கு முன் நிலவிய சூழ்நிலையை இந்த ஒப்பந்தம் மீட்டெடுக்கும்” என்று இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.

அதாவது 2020ஆம் ஆண்டு இந்திய வீரர்கள் எந்த அளவுக்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டார்களோ அதே அளவுக்கு அவர்கள் இப்போது மீண்டும் ரோந்துப் பணியில் ஈடுபட முடியும்.

கடந்த 2020ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வானில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் உள்படப் பல சீன வீரர்களும் கொல்லப்பட்டனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தை எட்டியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2022 டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கல்வான் சம்பவத்துக்குப் பிறகு அதிகரித்த பதற்றத்திற்கு மத்தியில் இரு நாடுகளும் எல்லையில் தங்கள் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியில் ரோந்துப் படகுகளை அனுப்புவதை சீனா அதிகரித்துள்ளது. இந்தப் பகுதி லடாக்கில் உள்ள எல்ஏசி அதாவது மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ளது.

அக்ஸாய் சின் பகுதியில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கின் கரையில் சீன ராணுவத்தின் சில கூடாரங்கள் காணப்படுவதாக இந்தியா அப்போது கூறியிருந்தது. இதையடுத்து இந்தியாவும் அங்கு தனது ராணுவ இருப்பை அதிகப்படுத்தியது. கல்வான் பள்ளத்தாக்கு அருகே இந்தியா சட்ட விரோதமாக பாதுகாப்பு தொடர்பான கட்டுமானங்களைச் செய்து வருவதாக சீனா குற்றம் சாட்டியது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 1975க்குப் பிறகு முதல் முறையாக 2020இல் இத்தனை பெரிய அளவில் ஒரு வன்முறை மோதல் ஏற்பட்டது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களுக்கு நீண்டதொரு வரலாறு உள்ளது.

பல ஆண்டுகளாக நிலவும் எல்லை தகராறு

இந்தியா சீனா எல்லைப் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3,488 கிலோமீட்டர் நீள எல்லை உள்ளது

சீனாவுடன் 3,488 கிமீ நீள எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இந்த எல்லை லடாக், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாகச் செல்கிறது.

இந்த எல்லை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மேற்குப் பிரிவு அதாவது லடாக், மத்தியப் பிரிவு அதாவது இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட், கிழக்குப் பிரிவு அதாவது சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம்.

இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை முழுமையான எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே பல பகுதிகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன.

மேற்குப் பிரிவில் அக்ஸாய் சின் மீது இந்தியா உரிமை கோருகிறது. ஆனால் இந்தப் பகுதி தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1962ஆம் ஆண்டு இந்தியாவுடனான போரின்போது, ​​சீனா இந்தப் பகுதி முழுவதையும் கைப்பற்றியது.

அதே நேரத்தில் கிழக்குப் பிரிவில் அருணாச்சல பிரதேசத்தின் மீது சீனா உரிமை கொண்டாடுகிறது. அது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறுகிறது. திபெத்துக்கும் அருணாச்சல பிரதேசத்துக்கும் இடையே உள்ள மெக்மஹோன் எல்லைக் கோடும் சீனாவால் அங்கீகரிக்கப்படவில்லை.

கடந்த 1914ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா மற்றும் திபெத்தின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டபோது அதில் தான் பங்கேற்கவில்லை என்று சீனா கூறுகிறது. திபெத் சீனாவின் ஒரு பகுதியாக இருந்ததால், திபெத் தானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று சீனா கூறுகிறது.

உண்மையில் 1914இல் திபெத் ஒரு சுதந்திரமான, ஆனால் பலவீனமான நாடாக இருந்தது. ஆனால் சீனா ஒருபோதும் திபெத்தை ஒரு சுதந்திர நாடாகக் கருதவில்லை. 1950இல் சீனா திபெத்தை முழுமையாகக் கைப்பற்றியது.

மொத்தத்தில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மெக்மஹோன் எல்லைக் கோட்டை சீனா ஏற்கவில்லை. மேலும் அக்ஸாய் சின் மீதான இந்தியாவின் உரிமை கோரலையும் நிராகரிக்கிறது.

எல்ஏசி தொடர்பாக சர்ச்சை நீடிக்கக் காரணம் என்ன?

இந்தியா சீனா எல்லைப் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 1962ஆம் ஆண்டு போர் நடந்தது

இந்த மோதல்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையை நிரந்தரமாக நிர்ணயிக்க முடியவில்லை.

நடைமுறை நிலையைப் பராமரிக்க மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு அதாவது எல்ஏசி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் இதுகூட இன்னும் தெளிவாக இல்லை.

இரு நாடுகளும் தங்களின் மாறுபட்ட மெய்யான கட்டுப்பாட்டுக் கோடுகளை அறிவிக்கின்றன.

பல பனிப் பாறைகள், பனிப் பாலைவனங்கள், மலைகள் மற்றும் ஆறுகள் இந்த மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டின் கீழ் வருகின்றன.

இந்தியா மற்றும் சீனாவின் வீரர்களுக்கு இடையே அடிக்கடி பதற்றம் நிலவும் பல பகுதிகள் எல்ஏசியில் உள்ளன.

பாங்காங் சோ (pangong tso) தொடர்பான சர்ச்சை

சுமார் 134 கிமீ நீளமுள்ள பாங்கோங் சோ ஏரி இமயமலையில் 14,000 அடி உயரத்திற்கும் மேலே அமைந்துள்ளது.

இந்த ஏரியின் 45 கிமீ பரப்பளவு இந்தியாவிலும், 90 கிமீ பரப்பளவு சீனாவிலும் உள்ளது. மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு இந்த ஏரி வழியாகச் செல்கிறது.

மேற்குப் பிரிவில் சீனாவின் அத்துமீறல் சம்பவங்களின் மூன்றில் ஒரு பங்கு இந்த பாங்காங் சோவுக்கு அருகில் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பகுதியில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதே இதற்குக் காரணம். இரு நாடுகளும் தனித்தனி எல்ஏசியை நிர்ணயித்துள்ளன.

எனவே சர்ச்சைக்குரிய பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே பலமுறை மோதல்கள் ஏற்படுகின்றன. ஏனென்றால் எதிர்தரப்பு வீரர்கள் தங்கள் பகுதிக்குள் வந்துவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.

இந்த ஏரிக்கு பெரிய அளவிலான மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் உள்ளது. இந்த ஏரி சீனாவின் சுஷுல் பள்ளத்தாக்குக்கு செல்லும் வழியில் வருகிறது. எனவே இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதியை தாக்க இந்த வழியை சீனா பயன்படுத்தலாம்.

சீனா, 1962 போரின்போது தனது முக்கியத் தாக்குதலைத் தொடங்கிய இடம் இது. கடந்த சில ஆண்டுகளில் சீனா பாங்காங் சோவின் அருகில் சாலைகளை அமைத்துள்ளதாகவும் செய்திகள் உள்ளன.

கல்வான் பள்ளத்தாக்கு சர்ச்சை

இந்தியா சீனா எல்லைப் பிரச்னை

பட மூலாதாரம், VEER KAUR/INDIAPICTURES/UNIVERSAL IMAGES/GETTY

படக்குறிப்பு, பாங்காங் சோ ஏரியின் 45 கி.மீ பகுதி இந்தியாவில் உள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு சர்ச்சைக்குரிய அக்ஸாய் சின் பகுதியில் உள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு லடாக் மற்றும் அக்ஸாய் சின் இடையே இந்தியா-சீனா எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

அங்குள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு, அக்ஸாய் சின்னை இந்தியாவில் இருந்து பிரிக்கிறது. இந்த பள்ளத்தாக்கு சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் மற்றும் இந்தியாவின் லடாக் வரை நீண்டுள்ளது.

பாகிஸ்தான், சீனாவின் ஜின்ஜியாங் மற்றும் லடாக் எல்லையை ஒட்டிய பகுதி என்பதால் மூலோபாய ரீதியாக இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், சர்வதேச விவகாரங்களில் நிபுணருமான எஸ்.டி.முனி பிபிசியிடம் தெரிவித்தார்.

கல்வான் ஆற்றின் இந்தப் பகுதியே, 1962 போரின் போதுகூட போரின் முக்கிய மையமாக இருந்தது.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் கட்டுமானத்தை சட்டவிரோதம் என்று சீனா கூறி வருகிறது. ஏனெனில் எல்ஏசியை ஏற்றுக் கொள்வதாகவும், புதிய கட்டுமானங்கள் செய்யப்பட மாட்டாது என்றும் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக எஸ்டி முனி கூறுகிறார்.

ஆனால் அங்கு தேவையான ராணுவ கட்டுமானத்தை சீனா ஏற்கெனவே செய்துவிட்டது. தற்போதுள்ள நிலையைப் பராமரிப்பது குறித்து அது பேசுகிறது. ஆனால் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள இந்தியாவும் அங்கு முக்கியக் கட்டுமானங்களை அமைக்க விரும்புகிறது.

டோக்லாம்

இந்தியா சீனா எல்லைப் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2020 ஜூன் மாதம் சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் புகைப்படம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவால் வெளியிடப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு டோக்லாம் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பலத்த சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சை 70-80 நாட்கள் நீடித்தது. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் அது தீர்க்கப்பட்டது.

டோக்லாமில் சாலை அமைக்கும் சீனாவின் முயற்சியை இந்தியா எதிர்த்ததில் இருந்து இந்த சர்ச்சை தொடங்கியது.

டோக்லாம், சீனாவிற்கும் பூடானுக்கும் இடையிலான ஒரு விவகாரம் என்றாலும், இந்தப் பகுதி சிக்கிம் எல்லைக்கு அருகில் உள்ளது. உண்மையில் இது முச்சந்திப்புள்ளி. அதாவது இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் இங்கு சந்திக்கின்றன.

இந்தியாவிற்கு இந்த முழுப் பகுதியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு இதுவே காரணம். டோக்லாமில் சீனா சாலை அமைத்தால் இந்தியாவின் ‘சிக்கன் நெக்கிற்கு’ ஆபத்து வரலாம்.

‘சிக்கன் நெக்’ என்பது தெற்கே வங்கதேசத்திற்கும் வடக்கே பூட்டானுக்கும் இடையே உள்ள 20 கிலோமீட்டர் அகலப் பகுதி. இந்த இடம் இந்தியாவை, வடகிழக்கு இந்தியாவுடன் இணைக்கிறது.

மேலும் டோக்லாமுக்கு அருகில் உள்ள சிக்கிமில் இருந்து மட்டுமே சீனாவின் அத்துமீறல் முயற்சிகளுக்கு எதிராக இந்தியா எந்த விதமான தாக்குதலையும் நடத்த முடியும் என்று இந்திய ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்திய ராணுவத்திற்கு புவியியல் ரீதியாக நல்ல புரிதல் உள்ள, மூலோபாய ரீதியாக அது பயன்படுத்திக் கொள்ளக்கூடிய எல்லையில் இமயமலைப் பகுதியில் உள்ள ஒரே இடம் இதுதான். சீன ராணுவம் இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளும் அதே வேளையில் இந்திய ராணுவம் இந்தப் பகுதியின் உயரத்தினால் கிடைக்கும் சாதகமான அம்சங்களை பெற முடியும்.

தவாங்

இந்தியா சீனா எல்லைப் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிக்கிம், பூடான் மற்றும் சீனாவின் எல்லைகள் சந்திக்கும் இடம் டோக்லாம்

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியின் மீது சீனா எப்போதும் தனது பார்வையை வைத்துள்ளது. தவாங்கை திபெத்தின் ஒரு பகுதியாக சீனா கருதுகிறது. மேலும் தவாங்குக்கும் திபெத்துக்கும் இடையே நிறைய கலாசார ஒற்றுமைகள் இருப்பதாக அது கூறுகிறது. தவாங் பௌத்தர்களுக்கான முக்கிய சமய தலமாகவும் உள்ளது.

எனவே தவாங்கை தன்னுடன் சேர்த்துக்கொண்டு திபெத் போலவே முக்கிய பௌத்த தலங்களைக் கைப்பற்ற சீனா விரும்புவதாகக் கூறப்படுகிறது.

தவாங்கில் உள்ள பெளத்த மடாலயத்திற்கு தலாய் லாமா சென்றபோதும் சீனா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

நாதுலா

இந்தியா சீனா எல்லைப் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாதுலா கேட் சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

நாதுலா கணவாய் இந்தியாவின் சிக்கிம் மற்றும் தெற்கு திபெத்தில் உள்ள சும்பி பள்ளத்தாக்கை இணைக்கும் இமயமலையில் உள்ள ஒரு மலைப்பாதை. சிக்கிமின் தலைநகரான காங்டாக்கில் இருந்து கிழக்கே 54 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது.

சீன திபெத் பகுதியில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக இந்தியர்களின் யாத்ரீகர்கள் குழு 14,200 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா கணவாய் வழியாகச் செல்வதால் இது இந்தியாவிற்கு முக்கியமானது.

நாதுலா கணவாய், 1962 இந்திய-சீன போருக்குப் பிறகு மூடப்பட்டது. பின்னர் ஏற்பட்ட பல இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை அடுத்து 2006இல் அது திறக்கப்பட்டது. 1890 ஒப்பந்தத்தின்படி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நாதுலா எல்லையில் எந்த சர்ச்சையும் இல்லை.

ஆனால் 2020 மே மாதத்தில், நாதுலா கணவாய் அருகே இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக செய்தி வந்தது.

எல்லைப் பிரச்னையைத் தீர்க்கும் முயற்சிகள்

இந்தியா சீனா எல்லைப் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டின் பின்னணியில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளது

இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சையைத் தீர்க்கப் பல கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று இந்தியா-சீனா விவகாரங்களில் நிபுணரும், கலிங்கா கல்வி நிறுவனத்தில் இந்தோ-பசுபிக் ஆய்வுகளின் நிறுவனரும் தலைவருமான பேராசிரியர் சிந்தாமணி மொஹபாத்ரா கூறுகிறார்.

பதற்றத்தைக் குறைக்க தூதாண்மை மட்டத்திலும் ராணுவ மட்டத்திலும் உரையாடலுக்கான வழிமுறைகள் இருப்பதாகவும், கடந்த சில மாதங்களில் இரு மட்டங்களிலும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியாவும் சீனாவும் தத்தமது சிறப்புப் பிரதிநிதிகளை நியமித்துள்ளன. இவர்களுக்கு இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தையில் உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

”இரு நாடுகளுக்கும் இடையே சமீப காலமாக பல உயர்மட்ட சந்திப்புகள் நடந்துள்ளன. பதற்றங்களைக் குறைப்பதற்கான சமீபத்திய ஒப்பந்தம் இதன் விளைவாகவே ஏற்பட்டது,” என்று ஷிவ் நாடார் பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியரும் சீன விவகாரங்களில் நிபுணருமான பேராசிரியர் ஜபின் டி ஜேக்கப் பிபிசியிடம் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு