இந்த அறைகளில் உங்களால் தங்க முடியுமா? உலகின் எட்டு மிகச்சிறிய, அசாதாரணமான ஹோட்டல் அறைகள் இவை!

உலகின் மிகச்சிறிய தங்கும் விடுதிகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

பட மூலாதாரம், Natura Vive

  • எழுதியவர், டெபோரா நிக்கோல்ஸ் லீ
  • பதவி,

பொதுவாக உள்நாடோ, வெளிநாடோ… சுற்றுலா செல்லும்போது நாம் அனைவருக்கும் வரும் ஆயிரம் சந்தேகங்களில் ஒன்று எங்கே தங்கப் போகின்றோம், அதற்கு எவ்வளவு செலவாகும், அந்த இடம் பாதுகாப்பானதா, சுத்தமானதா என்பதுதான்?

தனியாக பயணிக்கும் போது சில நேரங்களில் பணத்தை சேமிப்பதற்காக டார்மெட்டரி போன்ற விடுதிகளில் தங்கும் நிலையும் ஏற்படும்.

ஆனால் அங்கே நாம் மற்றவர்களுடன் அந்த இடத்தை பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை வரும். குறிப்பாக பெண்கள் என்றால் பாதுகாப்பு குறித்து ஆயிரம் கேள்விகள் எழும்.

இதனையெல்லாம் கருத்தில் கொண்டுதான் உருவானது கேப்ஸ்யூல் (capsule) வகை தங்கும் விடுதிகள். இந்த ஐடியாவுக்கான பிறப்பிடம் ஜப்பான்தான்.

மிகச்சிறிய அளவில், அதே நேரத்தில் அங்கு தங்கும் மக்களுக்கான தனியுரிமையை உறுதி செய்வதுதான் ‘குட்டியான’ விடுதிகளுக்கான ‘கான்செப்ட்’.

இதனை கருத்தில் கொண்டு ஜப்பானில் உருவாக்கப்பட்டது முதல் கேப்சூல் ஹோட்டல். 1979-ஆம் ஆண்டு ஜப்பானின் ஒஸாக்காவில் இப்படியான ஹோட்டல் அறிமுகம் செய்யப்பட்டது.

இரவில் பார்ப்பதற்கு ஒரு பிணவறை போன்று, வரிசையாக சின்னச்சின்ன அறைகள் இருக்கும். ஆரம்பகாலத்தில் இங்கு தொழில்முனைவோர்கள்தான் தங்கினார்கள். இரவில் வெகுநேரம் வேலைபார்த்துவிட்டு களைத்துப் போய் வீடு செல்வதற்கு பதிலாக இந்த கேப்சூல் ஹோட்டல்களில் தங்கினார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிணவறை என்று கூறுவது கொஞ்சம் விசித்திரமாகதான் இருக்கும். ஆனால், கொலாம்பியாவில் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீர் பைப்களில் கேப்சூல் அறைகள் இருக்கின்றன.

மலைகளின் சரிவில் அந்தரத்தில் தங்கும் விடுதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. புத்தக விரும்பிகள் வந்து தங்களுக்கு பிடித்த புத்தகத்தை படிக்கும் வகையில் விடுதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 45 ஆண்டுகளில் கேப்சூல் வர்த்தகம் புதிய வடிவத்தை அடைந்துவிட்டது.

2031-ஆம் ஆண்டுக்குள் இந்த வர்த்தகம் 327 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தமுறை வெளிநாடு பயணிக்கும் போது இது போன்ற ஹோட்டல்களில் நீங்கள் தங்குவீர்களா?

உலகில் மிகச்சிறிய 8 தங்கும் விடுதிகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இங்கே!

உலகின் மிகச்சிறிய தங்கும் விடுதிகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

பட மூலாதாரம், Nine Hours

படக்குறிப்பு, 9 ஹவர்ஸ் வழங்கும் இந்த விடுதிகள் ஜப்பானில் 13 இடங்களில் உள்ளன

தூக்கத்திற்கான நூலகம்

கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது தானே? நைன் ஹவர்ஸ் (9 hours) என்ற நிறுவனம் ஜப்பானின் மேற்கே அமைந்திருக்கும் ஃபுகுவோகா முதல் வடகிழக்கில் அமைந்திருக்கும் ஹோக்கைடோ வரையில் 13 விடுதிகளை நடத்தி வருகிறது.

அங்கே செல்லும் நபர்களின் தூக்கத்திற்கான தரவுகளையும் சேகரிக்கிறது இந்த நைன் ஹவர்ஸ் நிறுவனம்.

9 மணி நேரம் தூக்கத்திற்கான ‘ஃபிட்ஸ்கேன்’ திட்டத்தை தேர்வு செய்யும் நபர்களின் தூக்கம், இதய துடிப்பு, தூங்கும் போது அவர்களின் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள், குறட்டை விடுவது முதற்கொண்டு அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது.

ஹாலிவுட் படங்களில் வரும் சிறிய அளவிலான ஆய்வகக் கூடங்கள் போல் இருக்கும் இந்த ஹோட்டல்கள் அனைத்தும் வெள்ளை நிறங்களில் வண்ணமடிக்கப்பட்டுள்ளது.

குறைவான பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த ஹோட்டல்கள் பார்ப்பதற்கு ஒரு மருத்துவமனை போன்ற தோற்றத்தை தராமல் ஒன்றும் இல்லை.

பெயருக்கு ஏற்றது போல் 9 மணி நேரம்தான் இங்கு தங்க முடியும். 7 மணி நேரம் தூங்கிக் கொள்ளலாம். வெளியே செல்ல தயாராக 2 மணி நேரங்களை ஒதுக்கிக் கொள்ளலாம். தூங்கமட்டும் செல்கிறீர்கள் என்றால் எவ்வளவு மணி நேரம் தூங்குகிறீர்களோ அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

தொங்கும் விடுதி

மலையின் சரிவில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெட்டிதான் உங்களின் அறை என்றால் அங்கே சென்று தங்க முடியுமா உங்களால்?

பெரு நாட்டில் உள்ள சாக்ரேட் வேலியில்தான் அமைந்துள்ளது இந்த விடுதி. மன அமைதிக்காக அனைவரும் இந்த இடத்தை தேர்வு செய்வார்கள் என்று கூற முடியாது. ஆனால் வாழ்வில் ஒரு ‘த்ரில்’ வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவாகவே இருக்கிறது இந்த விடுதி.

இந்த விடுதிகளில் தங்க நீங்கள் செங்குத்தாக இருக்கும் மலையில் 400 மீட்டர் நடந்தே ஆக வேண்டும்.

மலையேற்றப் பயிற்சி பெற்றுக் கொண்டுதான் இங்கே செல்ல வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருந்தால் கண்டிப்பாக இந்த விடுதியில் உங்களால் தங்க இயலும். அங்கிருந்து கீழே இறங்குவது மிகவும் சுலபம். ஸிப்லைன் வைத்து அதில் இருந்து கீழே வந்துவிட இயலும்.

கழிவறை வசதிகளுடன் இந்த விடுதிகள் வருவதால், நள்ளிரவில் எழுந்து எங்கேயாவது போய் தடுமாறி கீழே விழுந்துவிடுவோம் என்ற பயம் இன்றி இங்கே சென்று தங்கலாம்.

உலகின் மிகச்சிறிய தங்கும் விடுதிகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

பட மூலாதாரம், Natura Vive

படக்குறிப்பு, மனநிம்மதிக்காக ஒரு அறை வேண்டுமென்றால் இது உங்களின் சரியான தேர்வல்ல

பாலை நடுவே விடுதி

கொலாம்பியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாலைவனமான டாடாகோவாவில் அமைந்துள்ளது 37 கேப்சூல் வகை அறைகள்.

பாலைவனத்தின் நடுவே, டூபோ ஹோட்டல் என்ற நிறுவனம், நீச்சல் குளத்துடன் கூடிய இந்த அறைகளை உருவாக்கியுள்ளது.

பாலைவனத்தின் சூட்டைக் குறைக்கும் வகையில் குளிர்சாதனபெட்டிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறைகளில் ஒரே ஒரு படுக்கை மட்டும்தான் போட முடியும்.

இதில் என்ன சிறப்பம்சம் என்று கேட்டால், இவை அனைத்தும் பழைய கழிவுநீர் பைப்புகளை மறுசுழற்சி செய்து அமைக்கப்பட்டவை.

உங்களுக்கென்று தனியே கழிப்பறைகள் கிடைப்பது கஷ்டம். ஆனால் இந்த ஹோட்டல்களில் தங்க நீங்கள் அதிகம் செலவிட வேண்டாம்.

உணவக வசதிகளும் இந்த அறையில் உள்ளன. கண்களுக்கு குளிர்ச்சியான நிறங்களில் இந்த விடுதிகள் பாலைவனத்தின் நடுவே அமைந்திருப்பதால், இதன் தனித்துவமான அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் அங்கே அதிகம் குவிகின்றனர்.

உலகின் மிகச்சிறிய தங்கும் விடுதிகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

பட மூலாதாரம், Tubo Hotel La Tatacoa

படக்குறிப்பு, கொலாம்பியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாலைவனமான டாடாகோவாவில் அமைந்துள்ளது 37 கேப்சூல் வகை அறைகள்

மரங்களுக்கு நடுவே முட்டை வடிவிலான குட்டி அறை

மர வீடுகள் கேள்விப்பட்டதுண்டு. மரங்களுக்கு நடுவே இருக்கும் அறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கனடாவின் வான்கூவர் தீவில்தான் இப்படியான அறைகள் அமைந்துள்ளன. “தூங்கிக் கொண்டிருக்கும் பறவைகளுக்கு மத்தியில் மிதந்தபடி நீங்களும் தூங்கிக் கொண்டிருப்பீர்கள்”, என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்கிறார் ஃப்ரீ ஸ்பிரிட் ஸ்பேர்ஸ் என்ற அந்த விடுதி நிறுவனத்தின் உரிமையாளர் டாம் சுட்லே.

கனடாவின் காடுகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பயணங்களை ஊக்குவிக்கவும் 25 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய அறைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இரட்டைப் படுக்கைகள், உணவு உண்ணும் இடம், பாத்திரங்கள் கழுவும் இடங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது முட்டை வடிவிலான இது போன்ற மர அறைகள். மரங்களை ஒட்டி ஏணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

உலகின் மிகச்சிறிய தங்கும் விடுதிகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

பட மூலாதாரம், Tom Chudleigh

படக்குறிப்பு, கனடாவின் காடுகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பயணங்களை ஊக்குவிக்கவும் 25 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய அறைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

சிங்கப்பூரின் பெட்டி அறைகள்

‘ஸாஃப்ட் மினிமலிஸ்ட்’ என்று அறிமுகம் செய்யப்பட்டவை தான் இந்த படுக்கை அறைகள். சிங்கப்பூரின் சைனா டவுனில் 2021-ஆம் ஆண்டு, பல்வேறு ஆச்சரியங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது இந்த அறைகள்.

72 அறைகளை கொண்ட இந்த விடுதிகளை அறிமுகம் செய்துள்ளது கின் கேப்சூல் என்ற நிறுவனம்.

நகரத்தின் வாசமே வேண்டாம் என்று யோசிக்கும் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கிறது இந்த கட்டமைப்பு. மனதை அமைதியாக்கும் மரக்கட்டை நிறத்தில் உருவாக்கப்பட்டும் படுக்கை அறைகளில் நோர்டிக் காடுகளில் உள்ள காட்டுப்பூக்களின் மணம் நிறைந்திருக்கும்.

என்னதான் நல்ல அனுவத்தை வழங்கினாலும் கூட, பதுங்கு அறைகளில் தங்குவது போன்ற ஒரு உணர்வை தருவதாக கூறுகின்றனர் இந்த அறையின் அனுபவத்தை உணர்ந்தவர்கள்.

உலகின் மிகச்சிறிய தங்கும் விடுதிகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

பட மூலாதாரம், KINN Capsule

படக்குறிப்பு, நகரத்தின் வாசமே வேண்டாம் என்று யோசிக்கும் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கிறது இந்த கட்டமைப்பு

புத்தக பிரியர்களுக்காகவே உருவான நூலக விடுதிகள்

கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் அமைந்திருந்த பழமையான பாரம்பரிய பண்ணை வீடு சீரமைக்கப்பட்டு கேப்சூல் விடுதியாக 2019-ஆம் ஆண்டு மறு அறிமுகம் செய்யப்பட்டது.

புத்தக விரும்பிகளுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ள இந்த விடுதியில் புத்தகங்களுக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் 20 சிறிய அறைகளில் நீங்கள் தங்கிக் கொள்ளலாம்.

இரவு நேரங்களில் நூலகம் அழகாக தெரிந்தாலும் உள்ளே இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் தெரியும். ஆனால் உள்ளே இருந்து பார்ப்பவர்களுக்கும் சுவாரசியம் இருக்கிறது. அந்த வீட்டைச் சுற்றி அமைந்துள்ள அழகான மலைத்தொடர்களை புத்தகம் படித்துக் கொண்டே காணலாம்.

உலகின் மிகச்சிறிய தங்கும் விடுதிகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

பட மூலாதாரம், Suschengliang

படக்குறிப்பு, அனைத்தும் தெள்ளத்தெளிவாய் தெரியும் படி கண்ணாடியால் கட்டடம் வடிவமைக்கப்பட்டிருப்பது ஒரு சுவாரசியமான சிக்கலாக இருக்கிறது

அலமாரி அறைகள்

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள அவுட் ஜூய்ட் பகுதிக்கு வரும் சுற்றுலா விரும்பிகள் அலமாரியில் தூங்க அதிக ஆர்வம் காட்டுகின்றார்களாம்.

டி பெட்ஸ்டீ ஹோட்டல் என்ற ஹோட்டல் நிறுவனம் 17-ஆம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த பாக்ஸ் பெட் என்ற ஐடியாவை பின்பற்றி இந்த விடுதிகளை உருவாக்கியுள்ளது.

அதாவது அலமாரி கதவுகளுக்கு பின்னால் படுக்கைகள் கொண்டிருக்கும் அமைப்பையே பாக்ஸ் பெட் என்று அழைக்கின்றனர்.

உலகின் மிகச்சிறிய தங்கும் விடுதிகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

பட மூலாதாரம், De Bedstee Hotel

ஜப்பானிய பாரம்பரியத்துடன் ஆடம்பர சிற்றறைகள்

ரெசோல் போஸ்டெல் மிகவும் ஆடம்பரமான சிறிய அறைகளை கொண்ட விடுதிகளாக கருதப்படுகின்றன.

டோக்கியோவில் அமைந்திருக்கும் இந்த சிறிய அறைகளில் இருந்து வெளியேறும் வாசம் இதனை ஆடம்பர விடுதியாக மாற்றியிருக்கிறதாம்.

ஆரஞ்சு, சம்பங்கி, நெரோலி பூக்களின் மணம் மனதை அமைதியடையச் செய்கிறதாம். உங்களுக்கும் உங்களுக்கு அருகே தங்கியிருக்கும் நபருக்கும் இடையே ஒரே ஒரு திரை மட்டும்தான் இருக்கும்.

உலகின் மிகச்சிறிய தங்கும் விடுதிகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

பட மூலாதாரம், Resol Poshtel Tokyo Asakusa

படக்குறிப்பு, உங்களுக்கும் உங்களுக்கு அருகே தங்கியிருக்கும் நபருக்கும் இடையே ஒரே ஒரு திரை மட்டும் தான் இருக்கும்.

சில இடங்களில் ஒருவர் மட்டும் தங்கிக் கொள்ளும் தனி அறைகளும் இருக்கின்றன. உங்களுக்கென்று தனியாக சீப்புகள், செருப்புகள், சவரம் செய்துக் கொள்ள தேவையான அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது இந்த விடுதி.

பார்ப்பதற்கு பாரம்பரிய ஜப்பானிய தேநீர் விடுதி அறைகள் போல் தோற்றமளிக்கும் இந்த அறைகளின் சுவர்களின் பாரம்பரிய ஜப்பான் ஓவியங்கள் இடம் பெற்று கண்ணைக் கவருகின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு